கதை நேரம்

on Tuesday, April 7, 2009

எனக்குக் கதை கேட்கப் பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் யாரும் கதை சொல்வதில்லை. பெண்களும் குழந்தைகளும் என்னிடம் கதை கேட்பதுண்டு. ஆனால் என்னிடம்தான் சொல்வதற்குக் கதைகள் இருக்காது. காரணம் , நான் கேட்ட கதைகளெல்லாம் அவ்வப்போது மறந்து போய் விடும். என்னாலும் கதைகளை சொந்தமாக இட்டுக் கட்டிச் சொல்லத் தெரியாது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் உயிர்மையில் வந்திருந்த சல்மான் ருஷ்டியின் ' உலகின் புகலிடம் ' என்ற சிறுகதையைப் படித்துக்

கொண்டிருந்தேன். அப்போது அதிலிருந்த ஒன்றிரண்டு பீர்பால் கதைகளைப் படித்து , மொத்த பீர்பால் கதைகளையும் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. இணைய தளத்தில் தேடிய போது எஸ்.நிவேதா என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் (செட்டினாடு வித்யாஷ்ரம் , சென்னை) தொகுத்த பீர்பால் கதைகள் படிக்கக் கிடைத்தன. இந்தக் காலத்தில் சினிமாப் பாடல்களைப் பார்த்து , அந்தக் குத்து டான்ஸ்களைப் பயிற்சி செய்து பள்ளி ஆண்டு விழாக்களில் ஆடிக் காட்டும் மாணவ ' மணிகளி ' ன் இடையே இப்படிப் பட்ட மாணவிகளும் இருக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருந்தது. .

அந்தக் கதைகளைப் படித்த போது சமீபத்தில் என்னிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்வி ஞாபகம் வந்தது. கேள்வி கேட்டவர் ஒரு பேராசிரியை. கேள்வி: "ஒரு கட்டுரை எழுத உங்களுக்கு ஒரு மணி நேரம் ஆகுமா ? அல்லது , இரண்டு நேரம் ஆகுமா ?" நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை , சொன்னால் புரியாது என்பதனால்.

எழுதுவது என்பது சோதனைச் சாலையில் இருக்கும் ஒரு விஞ்ஞானியின் நிலையை ஒத்தது. எப்போது முடிவு தெரிகிறதோ அப்போதுதான் சோதனை முடியும். ஒரு எழுத்தாளர் இருக்கிறார் , அட்டைப் பெட்டி தயாரிப்பது போல் அரை மணிக்கு ஒரு கட்டுரையை எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கிறார். அட்டைப் பெட்டிகளுக்கும் பயன்பாடு உள்ளன என்பது வேறு விஷயம். ஆனால் நான் செய்வது அது அல்ல. அல்லது , அந்தப் பேராசிரியை செய்வது போல் மாணவர்களின் பெயர் ஜாபிதாவைத் தயாரித்துக் கொண்டிருப்பவன் அல்ல நான்.

ஸீரோ டிகிரியையும் , ராஸ லீலாவையும் எழுதி முடிக்க எனக்குத் தலா மூன்று வருடங்கள் ஆயின. கட்டுரை என்றால் ராப்பகலாக எழுதினால் மூன்று தினம் பிடிக்கும்.

பீர்பாலிடம் அக்பர் ஒருமுறை "நம் தேசத்தில் எத்தனை குருடர்கள் இருப்பார்கள் ?" என்று கேட்டார். "இதோ எண்ணிச் சொல்கிறேன் , ஜஹான் பனா!" என்று கூறிய பீர்பால் நகரின் பிரதான அங்காடியில் சென்று அமர்ந்து கொண்டு செருப்புத் தைக்க ஆரம்பிக்கிறார். அதைப் பார்த்த பலரும் "என்ன செய்கிறீர்கள் பீர்பால் ?" என்று கேட்க , ஒரு குறிப்பேட்டை எடுத்து , தன்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டவர்களின் பெயர்களை எழுதி கொண்டு வருகிறார் பீர்பால். இதைக் கேள்விப்பட்ட அக்பரும் அங்காடிக்கு வந்து "என்ன செய்து கொண்டிருக்கிறாய் பீர்பால் ?" என்று கேட்க , அவர் பெயரும் குறிப்பேட்டில் ஏறுகிறது. மறுநாள் அரசவை கூடிய போது குருடர்களின் பட்டியலை அக்பரிடம் கொடுக்கிறார் பீர்பால். பட்டியலின் கடைசியில் தன் பெயரும் இருக்கக் கண்ட அக்பர் மிகவும் கோபப்பட்டு கேட்க , " நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைக் கண்களால் பார்த்த பிறகும் மற்றவர்களைப் போலவே நீங்களும் அந்தக் கேள்வியைக் கேட்டீர்கள் ; அதனால்தான் உங்கள் பெயரையும் சேர்க்க வேண்டியதாயிற்று" என்கிறார் பீர்பால்.

பேராசிரியையின் கேள்வியைக் கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்த கதை இதுதான்.

பீர்பால் எப்படி அக்பரின் அரசவையில் சேர்ந்தார் என்பது பற்றிய கதை இது:

மகேஷ் தாஸ் என்பவன் அக்பரின் தேசத்தைச் சேர்ந்த ஒரு குடிமகன். ஒருநாள் வேட்டைக்குச் சென்று திரும்பிய அக்பருக்கு வழிகாட்டி உதவினான் மகேஷ். அதற்குப் பிரதியாகத் தன் மோதிரம் ஒன்றைப் பரிசளித்த அக்பர் , அரண்மனைக்கு வந்தால் அங்கே அவனுக்கு நல்லதொரு வேலையும் தருவதாகச் சொல்கிறார் அக்பர்.

அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் செல்கிறான் மகேஷ் தாஸ். காவலாளி விடவில்லை. பிறகு மோதிரத்தைக் காண்பித்தவுடன் ' இவன் பெரிய பரிசு ஒன்றைத்தான் வாங்கச் செல்கிறான் ; அதில் நாமும் கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் என்ன ?' என்று நினைக்கும் காவலாளி "உன்னை உள்ளே விட்டால் உனக்குக் கிடைக்கும் பரிசில் எனக்கும் பாதி பங்கு தர வேண்டும்" என்று சொல்லி உள்ளே விடுகிறான். (ஆக , இந்தியாவில் அந்தக் காலத்திலேயே லஞ்சம் இருந்திருக்கிறது).

உள்ளே சென்ற மகேஷ் தாஸ் அக்பரைச் சந்தித்து மோதிரத்தைக் காண்பிக்க , " உனக்கு என்ன பரிசு வேண்டும் , கேள் ?" என்று கேட்க , "50 கசையடிகள் வேண்டும்" என்கிறான் மகேஷ். ' இவனுக்கு என்ன பைத்தியமா ?' என்று நகைக்கின்றனர் சபையோர். ஆச்சரியமுற்ற அக்பரும் "ஏன் இப்படிக் கேட்கிறாய் ?" என்று கேட்க , " பரிசை வாங்கிக் கொண்டு சொல்கிறேன்" என்கிறான் மகேஷ். 25 கசையடிகள் முடிந்ததும் நிறுத்தச் சொல்லி மீதி அடிகளை வாயிற்காப்போனுக்குத் தரும்படி கூறுகிறான் மகேஷ். அப்போதுதான் மன்னருக்கு விஷயம் விளங்குகிறது. வாயிற்காப்போனுக்கு 50 கசையடிகளும் , 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்த அக்பர் , மகேஷின் புத்தி சாதுர்யத்தை வியந்து அவனைத் தன் பிரதான மந்திரியாக ஆக்கிக் கொள்கிறார். அந்த மகேஷ் தாஸ் தான் பீர்பால்.

இப்படிப் பல கதைகளைத் தொகுத்திருக்கும் நிவேதாவுக்கு என் வாழ்த்துக்கள்.


Source : http://www.charuonline.com

பின் தொடரும் நிழல் !

அது ஒரு வியாழக் கிழமை ; காலை ஏழு மணி இருக்கும். வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த என் சகதர்மினி மீரா , திடீரென்று , "" வியாழக்கிழமையும் , அதுவுமா இப்படியா ஒரு வாயில்லா ஜீவனைக் கொல்றது... சாயி ராம்! '' என்று வருத்தத்துடன் சொன்னாள்.

"" என்னம்மா , என்ன சொல்கிறாய் ?'' என்று கேட்டபோது , என் கட்டிலுக்குக் கீழே நசுங்கிக் கிடந்த ஒரு மரவட்டையைக் காண்பித்தாள்.

ஆம்! தூங்கியெழுந்ததும் அந்தக் காரியத்தைச் செய்தவன் நான் தான். எனக்கு மரவட்டை என்றாலே பயம். கட்டிலை விட்டு எழுந்ததும் கீழே பார்த்தால் மரவட்டை. பயத்தில் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் , செருப்பைப் போட்டு அதை ஒரு நசுக்கு நசுக்கினேன். நரநரவென்ற சப்தத்துடன் செத்துப் போனது மரவட்டை. அதோடு அதை மறந்து போனேன்.

இப்போது மீரா சொன்னதும் , ஏதோ ஒரு கொலை செய்து விட்டது போல் தோன்றியது. வியாழக்கிழமை பாபாவுக்கு உகந்த நாள். இன்றைக்குப் பார்த்து இதை நான் செய்திருக்கக் கூடாது தான். ஆனால் , வெள்ளிக்கிழமை செய்திருந்தாலும் , இதையே தான் சொல்லியிருப்பாள் மீரா. என்ன , கடவுளின் பெயர் தான் மாறியிருக்கும்!

ஒருநாள் கூட தப்ப முடியாது. ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாள் தான். செய்தது தப்பு ; பேசாமல் ஒரு குச்சியால் எடுத்து , அதை வெளியே போட்டிருக்கலாம். அனாவசியமாக எந்த உயிரையும் இனி கொல்வதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அனாவசியமாக என்ற வார்த்தையைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் ஒரு தீவிர அசைவம் , உணவில் குறைந்த பட்சம் ஒரு சுட்ட கருவாடாவது இருக்க வேண்டும் என்று நினைப்பவன் ; இல்லாவிட்டால் , அது எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் இறங்காது. ஆனால் , அசைவ உணவைப் பொறுத்தவரை தமிழ்நாடு கொஞ்சம் பிரச்னையான இடம் தான். சிங்கப்பூரிலிருந்து என் நண்பர் கவுதம் இங்கே வந்த போதுதான் அதை உணர்ந்தேன்.

கவுதம் , சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர். அவருக்கு காபி , டீ தவிர மற்ற எல்லாவற்றிலும் அசைவம் இருக்க வேண்டும். காலையில் ஆப்பம் அல்லது இடியாப்பத்தோடு பாயா. கீரையில் நெத்திலி பொடி. பிரெட் என்றால் அதில் சார்டின் மீன்.

கவுதம் பரவாயில்லை. அவர் மகன் இன்னும் மோசம். ஒரு முறை , மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் போது , கவுதமின் மனைவி சென்னைவாசி என்பதால் , மனைவியையும் , மகனையும் சென்னையில் விட்டு விட்டு சென்றார்.

பையனுக்கு நம்மூர் உணவு பிடிக்கவில்லை. இங்கே அசைவக் காரர்கள் என்ன செய்கின்றனர் ? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் கறி வாங்கக் கிளம்புகின்றனர். அந்த நாட்களில் ஏதோ ரஜினியின் புதுப்படம் ரிலீஸ் ஆன மாதிரி மட்டன் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதெல்லாம் சைவர்களுக்குத் தெரியாத பிரச்னை. இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் , பெரும்பாலான கடைகளில் கிடைப்பது செம்மறி ஆடு.கடித்தால் ஜவ்வு மாதிரி , " சவுக் , சவுக் ' என்று மென்றுகொண்டே இருக்க வேண்டியது தான். நூற்றில் ஒரு கடையில் தான் வெள்ளாடு கிடைக்கும்.

நிலமை இப்படியிருக்க , கவுதமின் பையன் சாப்பாட்டில் தொட்டுக் கொள்ள ரத்தப் பொறியல் கேட்பான்.

கவுதமின் மாமனார் ஒரு கோடீஸ்வரர். இருந்தாலும் , ரத்தப் பொரியலுக்கு எங்கே போவர் ? அதெல்லாம் நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்காது. முனியாண்டி விலாசில் வாங்கிக் கொடுக்க அவர்களுக்கு பயம்.

" ரத்தப் பொரியல் இல்லாவிட்டால் , மூளை வறுவல் கொடுங்கள்! ' என்று அடம் பிடித்துள்ளான் பையன்.

ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது ; போய் பார்த்தேன். சிங்கப்பூரில் கொழு , கொழு என்று இருந்தவன் இப்போது இளைத்துத் துரும்பாக மாறியிருந்தான்.

மூளை , ரத்தம் எல்லாம் கூடப் பரவாயில்லை... வேர்க்கடலையில் சென்னாங்குனி போட்டுக் கேட்கிறான்.

சென்னாங்குனி மீன் நம் விரல் நகம் சைசுக்கு இருக்கும். மலேசியா , பர்மா போன்ற கிழக்காசிய நாடுகளில் வேர்க்கடலையில் கூட சென்னாங்குனி மீனைப் போட்டுத் தான் சாப்பிடுவர்.

கவுதமின் பையனைப் பார்த்த போது தான் நான் ஏன் இப்படி ஒரு மீன் பைத்தியமாக இருக்கிறேன் என்பதே எனக்கு விளங்கியது. காரணம் , என் அம்மாச்சி அம்மாவைப் பெற்ற பாட்டி ஒரு பர்மீஸ் காரி. என் அம்மா வழித் தாத்தா ரங்கூனில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு பர்மாக்காரியையே மணம் செய்து கொண்டிருந்தார்.

சின்ன வயதில் அவரைப் பார்த்திருக்கிறேன். சட்டையை உள்ளே விட்டு லுங்கியை அதற்கு மேல் கட்டிக் கொள்வார். "யார்ரா இது பைத்தியம் ?' என்று அப்போது , நினைத்துக் கொள்வேன். பர்மாவின் தேசிய உடை லுங்கி தான். சென்ற ஆண்டு தாய்லாந்து சென்றிருந்த போது , பர்மாவுக்கும் விசிட் அடித்தேன். நரகத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது ; முக்கியமாக , செக்ஸ் தொழில்.

உலகில் எல்லா நாடுகளிலும் அந்தத் தொழில் செழிப்பாகவே நடந்து கொண்டிருந்தாலும் , பர்மாவுக்கும் , மற்ற நாடுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதை கவனித்தேன்.

பர்மாவின் செக்ஸ் தொழிலாளிகள் முக்கால்வாசிப் பேர் சிறுமிகள். 12 வயதிலிருந்து 16 வயது இருக்கலாம். அதிலும் , ஒரு நாள் யாங்கூன் நகரின் பிரதான சந்தை வழியே நடந்து கொண்டிருந்த போது , என்னை இன்பத்துக்கு அழைத்த சிறுமியின் வயது 10 தான் இருக்கும். பணத்தைக் கொடுத்து விட்டு பேசிப் பார்த்தபோது , அது சிறுமி அல்ல ; சிறுவன் என்று தெரிந்தது. பணத்துக்காக சிறுமி வேடம் போட்டிருக்கிறான்.

நான் கொடுத்த தொகை நம்மூர் பணத்தில் ரூ. 50. அதற்கே என் காலைத் தொட்டு வாங்கிக் கொண்டான் சிறுவன்! ஆனால் , அதற்குப் பிறகு நடந்தது தான் பர்மியர்களின் இயல்பை எனக்குக் காட்டியது. அவனுக்குத் தெரிந்த பத்து , இருபது ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு , அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினேன்.கிளம்பும்போது பணத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்தான் சிறுவன். ஒன்றும் செய்யாமல் வாங்கிக் கொள்ள மாட்டானாம்! ஒருகணம் ஆடிப் போய் விட்டேன். பிறகு வற்புறுத்தி அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தேன். பிறகு தாய்லாந்து திரும்பிய போது தான் தெரிந்தது அந்நாட்டிலுள்ள பாதி செக்ஸ் தொழிலாளிகள் பர்மாவிலிருந்து இறக்குமதியானவர்கள் என்று.

தாய்லாந்து இப்போது வேகமாக முன்னேறி வருவதால் அங்குள்ள பெண்கள் இந்தத் தொழிலுக்கு வருவதில்லையாம். ஜாடையில் பர்மியப் பெண்களுக்கும் , " தாய் ' பெண்களுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை என்பதால் , " இறக்குமதி ' கன ஜோராக நடந்து வருகிறது. ஜாடை என்றதும் ஞாபகம் வருகிறது ; பர்மாவில் என்னிடம் எல்லாரும் பர்மிய மொழியிலேயே பேசத் துவங்கி விட்டனர். உங்களுக்கு முற்பிறவி என்பதில் நம்பிக்கை இருக்கிறதோ , இல்லையோ , இந்த ஜீன் விஷயத்தை நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பெண் சொன்ன விபரம் கேட்பதற்கே பயங்கரமாக இருந்தது.

செப்டம்பர் மாதம் 15, 1997. நூறு பேர் கொண்ட ராணுவத் துருப்பு ஒன்று , ஒரு பர்மிய கிராமத்தினுள் நுழைகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களை இப்படித் தேடுவது அங்கே அடிக்கடி நடக்கும் விஷயம். அப்படித் தேடும் போது ராணுவத்தினர் அந்த இடத்திலுள்ள பெண்களைக் கற்பழித்துக் கொன்று விடுவது வழக்கம். இதையெல்லாம் அங்கே யாரும் தட்டிக் கேட்க முடியாது. மீறிக் கேட்டால் ராணுவம் துப்பாக்கியால் தட்டி விடும். இதற்குப் பயந்து அந்த கிராமத்தினர் அனைவரும் ஒரு காட்டுக்குள் சென்று பதுங்கி விட்டனர். ஆனால் , தீவிரமான தேடுதலுக்குப் பிறகு அவர்கள் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டனர்.

பெண்கள் 40; ஆண்கள் 50. ஆண்கள் அனைவரையும் கட்டிப் போட்டு , அவர்கள் முன்னிலையில் அந்த 40 பெண்களையும் ஒருவர் பாக்கி விடாமல் ராணுவத்தினர் கற்பழித்திருக்கின்றனர். இரண்டு இரவுகளும் , இரண்டு பகல்களும் நீண்டது அந்த வன்கலவிச் சம்பவம்.

பிறகு , அத்தனை பேரையும் சுட்டுக் கொன்றது ராணுவம். இதில் தப்பிப் பிழைத்த ஒரே ஒரு பெண் பர்மிய எல்லையைக் கள்ளத்தனமாகக் கடந்து தாய்லாந்து வந்து விட்டாள். பாங்காக்கின் சிவப்பு விளக்குப் பகுதி ஒன்றில் ஒருநாள் அந்தப் பெண்ணை நான் சந்தித்தேன். எனக்கு தாத்தாவின் ஞாபகம் வந்தது. யார் கண்டது ? ஒருவேளை , இவள் எனக்கு உறவுக் காரியாகக் கூட இருக்கலாம்!


Source : http://www.charuonline.com

சுபயோக சுயபோகம்

இப்போது அதிகாலை மணி 4.30. வழக்கம்போல் நான்கு மணிக்கு எழுந்ததும் மறந்து போய் பாத் ரூம் லைட்டைப் போட்டுத் தொலைத்து விட்டேன். ஆரம்பித்து விட்டார் நைட் வாட்ச்மேன் ரங்கன். தண்ணீர்க் குழாயை அவர் அடிக்கிற அடிக்கிற அடியில் ஆயிரம் யானைகள் ஒன்று சேர்ந்து பிளிறுவது போல் இருக்கிறது. எங்கே தியானம் செய்வது ? சரி , இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் என்று வாயிற் கதவைத் திறந்து வெளியே வந்து "இப்படி நான்கு மணிக்கெல்லாம் தண்ணீர் அடிக்க வேண்டாம் ரங்கன் , நாம்தான் முழித்துக் கொண்டிருக்கிறோம் ; ஆனால் இந்த சத்தம் மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்குமே ?" என்றேன். ஆனால் ரங்கனோ நான் நினைத்ததை விட வில்லங்கமான ஆள் போலிருக்கிறது. "அசோஸியேஷனில்தான் சொல்கிறார்கள் சார்" என்று இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புச் சங்கத்தின் நிர்வாகிகளைச் சுட்டினார். அவர்களிடம் எங்கே நான் பேசுவது ? இந்த வாட்ச்மேனிடம் பேசுவதற்கே ஒரு வருடம் எடுத்துக் கொண்டேன். மேலும் நீங்கள் அஞ்சலி படம் பார்த்திருந்தீர்களானால் நான் சொல்வதைச் சரியாக புரிந்து கொள்ள முடியும். அதில் வரும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் பிரபு வருவார் இல்லையா ? அவரை அந்தக் குடியிருப்புவாசிகள் எப்படி எதிர்கொள்வார்கள் , ஞாபகம் இருக்கிறதா ? இல்லாவிட்டால் ஒரு சுலபமான உதாரணம். இஸ்ரேலில் உள்ள ஒரு யூதர் குடியிருப்பில் வாழும் ஒரே ஒரு பாலஸ்தீனியன் போலத்தான் இந்தக் குடியிருப்பில் நான்...ஏதோ அவந்திகா இருப்பதால் எப்படியோ ஓடுகிறது கதை. அது சரி , குடியிருப்புச் சங்க நிர்வாகிகள் நான் இரவு இரண்டு மணிக்கு எழுந்தால் இரண்டு மணிக்கும் , நான்கு மணிக்கு எழுந்தால் நான்கு மனிக்குமா தண்ணீர் அடிக்கச் சொன்னார்கள் ? இதை நான் வாட்ச்மேன் ரங்கனிடம் கேட்கவில்லை. இவ்வளவு கேட்டதே தப்பு என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்து இதை டைப் செய்ய ஆரம்பிக்கிறேன்.

யோகா செய்யவில்லையா ? இல்லை. அதுதான் இன்றைய கட்டுரையின் பொருளே.

அழகாய் இருக்கிறாய் ; பயமாய் இருக்கிறது என்ற கட்டுரையில் வந்துள்ள தாரா என்பவரின் கடிதத்தை இப்போது மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்தக் கட்டுரையை நன்றாக அனுபவிக்க முடியும்.

தாரா என்னைத் தொடர்பு கொண்டு இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும். அவருடைய புதல்வன் ராமுக்கு யக்ஞோபவீத நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க என் வீட்டுக்கு வந்தபோது பேசியதோடு சரி. திருச்சியில் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி நடந்த அன்றுதான் எனக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிகழ்ச்சி. என் மின்னஞ்சல் பெட்டி கொள்ளை போனது , என் பெயரில் ஆயிரக் கணக்கான டாலர்கள் கொள்ளையடிக்க நடந்த முயற்சி பற்றியெல்லாம் புகார் கொடுக்கச் சென்றிருந்தேன். தமிழ் நாட்டின் மிக உயர்ந்த சிபாரிசில் போயிருந்தாலும் நிர்வாக எந்திரம் என்பதன் அபத்தங்களைக் கடந்துதானே ஆக வேண்டும் ?

கமிஷனர் அலுவலகத்தில் அது இரண்டாவது நாள். முந்தின தினமே புகார் கொடுத்து விட்டேன். இது அந்தப் புகார் தொடர்பான மேல் தகவல்கள். இதை வாங்கி வைத்துக் கொள்ள ஒரு நிமிடம்தான் பிடிக்கும். ஆனாலும் அந்த உயர் அதிகாரியை நேரில் பார்த்துக் கொடுக்க வேண்டும். மதியம் இரண்டு மணிக்கு நேரம் கொடுத்திருந்தார். சரியான நேரத்தில் சென்று விட்டேன். 5 மணிக்கு வந்தார் அதிகாரி. அவருக்கு அவரை விட பெரிய அதிகாரியுடன் முக்கிய வேலை. மூன்று மணி நேரம் சிலை போல் அமர்ந்திருக்க வேண்டி வந்தது. முன்னதாகவே அவர் வர மூன்று மணி நேரம் ஆகும் என்று தெரிந்திருந்தால் எங்காவது போய் விட்டு வந்திருக்கலாம். ஆனால் அவர் எப்போது வருவார் என்றும் யாருக்கும் தெரியவில்லை. 5 நிமிடத்தில் வந்து விடுவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர்.

நானோ இதுவரை ஒரு மின்சாரக் கட்டண அலுவலகம் , ரேஷன் ஆஃபீஸ் போன்ற எந்த அரசாங்க அலுவலகத்திற்கும் சென்றது கிடையாது. யாருக்காகவும் 5 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் மண்டையில் தேள் , பூரான் , நட்டுவாக்களி எல்லாம் கொட்டும். வியாழக்கிழமை அன்று மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை பாபா கோவிலில் தண்டம் பிடித்து நிற்பதோடு சரி. இரண்டு மணி நேரம் நடக்கும் அந்த விசேஷ பூஜை. பூஜை முடிந்ததும் தண்டம் பிடித்த இரண்டு பேருக்கும் மாலை மரியாதையெல்லாம் செய்து இரண்டு ஆள் சாப்பிடுவது போல் வெண் பொங்கல் , சர்க்கரைப் பொங்கல் என்று பிரசாதமும் கொடுப்பார்கள்.

தண்டச் சோறு என்று திட்டுவார்களே , கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்னை யாரும் அப்படித் திட்டியதில்லை. பள்ளியில் படிக்கும் போதே தலையணை தலையணை சைஸுக்கு புத்தகங்களைக் கொண்டு வந்து சிம்னி விளக்கில் படித்து வீட்டில் உள்ளவர்களை மிரட்டியவன் நான். படிப்பிலும் முதல் மதிப்பெண் என்பதால் என்னை யாரும் அப்படித் திட்ட நேர்ந்ததில்லை. கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் திட்டுவது போல் தண்டம் பிடித்து நிற்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை அல்ல. இரண்டு மணி நேரம் ஆடாமல் அசையாமல் தண்டத்தைப் பிடித்தபடி நிற்க வேண்டுமென்றால் சும்மாவா ? பெண்டு நிமிர்ந்து விடும். இரண்டு மணி நேரம் நடக்கலாம் ; ஆனால் வெறுமனே ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அதை விடக் கஷ்டம் அர்ச்சகராக இருப்பது. தீபாராதனை என்று வாயால் சொல்கிறோம். அதைச் செய்து பார்த்தால் தான் தெரியும் கஷ்டம். பாபா கோவிலில் ராஜா என்று ஒரு குருக்கள் இருக்கிறார். அவர் எனது நீண்ட கால நண்பர். காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை. இடையில் நான்கு மணி நேரம் ஓய்வு. வயலில் வேலை பார்க்கும் ஒரு விவசாயியின் வேலையை விட இவருடைய வேலை கடினமானது என்பதைப் பக்கத்தில் நின்று பார்த்திருக்கிறேன். 108 தீபங்களுக்கும் நெய் ஊற்றி , ஏற்றி ஆராதனை காட்டும் போது அவர் தேகமே தீப்பிழம்பாகி தகிக்கும். சில சீனியர் குருக்கள்மார்கள் இருக்கிறார்கள். அவர்களின் வேலை வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம்.

சரி , பாபா கோவிலிலிருந்து கமிஷனர் அலுவலகம் செல்வோம். அதிகாரி எப்போது வருவார் என்ற யூகமே இல்லாமல் மூன்று மணி நேரம். கவனிப்பெல்லாம் எனக்கு ராஜ கவனிப்புதான் . ஆனால் மூன்று மணி நேரம் காத்திருந்ததில் ராஜ பிளவையே வந்தது போல் ஆகி விட்டது எனக்கு. அபத்தத்தின் உச்ச கட்டமான சூழ்நிலை அது. எதற்காக அந்த இடத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன். யார் எனக்கு எந்தத் தீங்கு செய்தாலும் அதற்காக நான் காவல் நிலையம் செல்ல மாட்டேன். ஏனென்றால் , காவல் நிலையம் செல்வதே ஒரு தண்டனை. கஷ்டத்தையும் அனுபவித்து விட்டு காவல் நிலையம் சென்று மேலும் ஒரு கஷ்டத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்.

நான் யாருக்காகக் காத்திருந்தேனோ அந்த அதிகாரி வந்து புகாரைப் பார்த்துவிட்டு குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டதாகவும் , இத்தகவல்கள் மேற்கொண்டு எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறி என்னை ஒரு இன்ஸ்பெக்டரிடம் அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டருக்கு நான் யார் என்று தெரியுமா ? என்னை அமர வைத்து விட்டு என் எதிரிலேயே அவருடைய உதவியாளருக்கு இவ்விஷயம் பற்றி டிக்டேஷன் கொடுக்க ஆரம்பித்தார்.

சாரு நிவேதிதா என்ற ஒரு நபர்...

அந்த நேரம் பார்த்தா அவரை ஒரு அதிகாரி அழைக்க வேண்டும் ? எழுந்து சென்றார் இன்ஸ்பெக்டர். ஆறு மணி வரை அங்கே அமர்ந்திருந்தேன். அதற்கு மேல் பொறுமையில்லை. இன்ஸ்பெக்டரின் உதவியாளரிடம் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டுக் கிளம்பிவிட்டேன்.

அன்று இரவு எட்டு மணி அளவில் எனக்கு முதுகுத் தண்டின் கீழே வலி குடைய ஆரம்பித்தது. அந்த இடத்த்தில் இப்படி ஒரு வலியை அனுபவித்ததே இல்லை. வலியில் தேகமே நடுங்கியது. அவந்திகா தைலம் தடவி மஸாஜ் செய்து விட்டாள். ம்ஹூம் , பயனில்லை. வலி அதிகரித்துக் கொண்டே போனது. எதனால் இந்த வலி என்று புரிந்து விட்டது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக என்மீது வலிந்து திணிக்கப் பட்ட பிரம்மச்சரியம்தான் காரணம். அதனால் சென்ற வாரம் ஏற்பட்ட Blue balls வலியிலிருந்து தப்பிக்க சுயபோகத்தில் ஈடுபட நேர்ந்தது. வேறு என்ன வழி ? பாரியாள் காரைக்கால் அம்மையாரின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டாள். என்னைப் பொறுத்தவரை sex is a glass of water. வீட்டில் கிடைக்காவிட்டால் வெளியே கிடைக்கும். விலைக்கு அல்ல. தோழமை கொண்டு தருவோர் பலர் உண்டு. ஆனால் , அதில் இரண்டு சங்கடங்கள்...ஒன்று , வெளியே ' தண்ணீர் ' குடிப்பது இந்தியாவில் - முக்கியமாக - தமிழகத்தில் தடை செய்யப் பட்டிருக்கிறது. நானோ வாகனங்களே இல்லாத வெறும் சாலையாக இருந்தாலும் சிவப்பு விளக்கு விழுந்து விட்டால் பச்சை விளக்கு வரும் வரை நின்று கொண்டே இருப்பேன். அப்படிபட்டவன் இவ்வளவு பெரிய விஷயத்தில் சட்டத்தை மீறத் துணிவேனா ? இரண்டாவது , வி.எஸ்.நைப்பால் லண்டனில் இருந்த போது அடிக்கடி விலை மகளிரிடம் செல்வதுண்டாம். அது பற்றி வெளிப்படையாக எழுதியும் விடுவாராம். அதைப் படிக்கும் அவருடைய ( முதல்) மனைவி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இறந்து விட்டாராம். நான்தான் ஒரு விதத்தில் அவரது மரணத்திற்கே காரணம் என்று சமிபத்தில் கூறியிருக்கிறார் நைப்பால். அப்படிப் பட்ட பிரச்சினைகள் ஏதும் அவந்திகாவுக்கு வந்து விடகூடாது. அவளை நான் ஒரு தெய்வத்திற்கு நிகராக மதிக்கிறேன். அவள் பொருட்டு இந்த பிரம்மச்சரியத்தையும் ஏற்கலாம்தான். ஆனால் தேகம் ஒத்துழைப்பதில்லை.

என் மருத்துவரிடம் சென்று ப்ளூ பால்ஸ் பிரச்சினையைப் பற்றி விளக்குவதும் சாத்தியமில்லை. அந்த ஆயுர்வேத மருத்துவர் 24 வயதே நிரம்பிய ஒரு அழகிய - இந்த அழகிய என்ற வார்த்தையை delete செய்து விடவும் - இளம் பெண். அவர் நாடி பிடிக்க என் கைகளைத் தொட்டு விட்டு அடுத்து ரத்த அழுத்தம் பார்ப்பார். 160/120 காட்டும். (ஆனால் மறுநாள் வேறு இடத்தில் பார்த்தால் 130/90 என்று வரும்). 160/120 ஐப் பார்த்து அதிர்ச்சியுற்று , " ஓ...ரொம்ப அதிகமாக இருக்கிறதே ? என்ன காரணம் ? ஏதேனும் பதற்றமா ? இங்கே என்னைப் பார்க்க அவசரமாக வந்தீர்களா ?" என்று பல கேள்விகள் கேட்பார் டாக்டர். அவரை நான் பார்ப்பதும் , அவர் என் நாடியைப் பார்ப்பதும்தான் பிரச்சினை என்று அவரிடம் எப்படிச் சொல்ல முடியும் ? டாக்டரிடமும் இன்னும் சிலரிடமும் உண்மையை மறைக்காமல் விளம்ப வேண்டும் என்பார்கள். ஆனால் இப்படி ஒரு இளம் பெண்ணிடம் போய் என் பிரம்மச்சரியம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றோ , இதனால் நான் படும் ப்ளூ பால்ஸ் அவஸ்தை பற்றியோ எப்படிச் சொல்வது , சொல்லுங்கள்.

உருட்டுத் தடியால் அடித்தது போல் வலிக்கும். அதிலிருந்து தப்பிக்க சுய போகம். 5 நாளில் ஏழெட்டு முறை. அதோடு யோகா. ஆக , யோகமும் போகமும் சேர்ந்து விட்டதால்தான் குழப்பம். அதுதான் இந்தத் தண்டுவட வலியில் கொண்டு வந்து விட்டது என்று நினைக்கிறேன். அதோடு சேர்ந்து கொண்டது கமிஷனர் அலுவலத்தில் காத்திருந்ததும்.

ஆங்கில மருத்துவர்கள் கூறுவார்கள் , சுய போகத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று. அதில் எனக்கு ஒரு சிறிதும் உடன்பாடு கிடையாது. சுயபோகம் செய்துவிட்டு யோகா செய்தால் எனக்கு ஜூரம் வந்து விடும். நான் மதுவை விட்டதற்கு மற்றொரு காரணமும் இதுதான். மது அருந்திய மறுநாள் யோகா செய்தால் ஜூரம் வந்து விடும். 4 கி.மீ. நடக்கலாம். ஆனால் யோகா நடையை விடக் கடினமானது.

ஆஸ்கார் ஒயில்டு இறந்ததற்குக் கூட இந்த சுய போகம் ஒரு காரணம். Dandy யாக வாழ்ந்த ஒருவனை ஹோமோசெக்ஸ் குற்றத்துக்காக சிறையில் போட்டு கடினமான உடல் உழைப்புக்கு ஆட்படுத்தினார்கள். ஒயில்டோ அது வரை ஒரு பிரபுவாக வாழ்ந்தவன். சிறையில் காற்றாலையில் வேலை. கிட்டத்தட்ட செக்கிழுப்பதைப் போன்ற வேலை அது. செக்குக்குப் பதிலாகக் காற்றாலை. தனிமை , குளிர் , கடுமையான உடல் உழைப்பு - இந்த மூன்றின் சுமையையும் அவன் சுய போகம் என்ற ஒன்றின் மூலமாகவே கடக்க முற்பட்டான். அதுவே அவனுடைய மரணத்துக்குக் காரணமாக இருந்தது.

இரவு எட்டு மணிக்குத் தொடங்கிய தண்டுவட வலி ஒன்பது மணியளவில் தாள முடியாமல் போக , அலோபதி மருத்துவரான சாயி ரமணனிடம் ஓடினேன். வாழ்க்கை வரலாற்றையெல்லாம் சொல்லாமல் தண்டுவட வலியைப் பற்றி மட்டும் சொன்னேன். ஒரு ஊசி போட்டார். நரம்பை வலுப்படுத்தும் ஒரு மாத்திரையும் , வைட்டமின் மாத்திரயும் கொடுத்தார். அரைமணி நேரத்தில் சரியாகி விட்டது. (அந்தத் தருணத்தில்தான் நாகர்கோவிலிலிருந்து அந்தச் சிறுபத்திரிகை அன்பர் எனக்கு போன் செய்து மிரட்டி டார்ச்சர் கொடுத்தார்).

இங்கே ஆங்கில மருத்துவம் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். என் நண்பன் குணசேகரனுக்கு ஆங்கில மருத்துவமே பிடிக்காது. ஐந்தரை அடி உயரத்துக்கு 100 கிலோ இருந்தான். போய் கொழுப்பை சோதனை செய்து பார் என்றால் ஆங்கில மருத்துவம் பற்றித் திட்டி லெக்சர் கொடுப்பான். என்னைப்போல் நீயும் பை பாஸ் அறுவை சிகிச்சைக்குத் தான் போகப் போகிறாய் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். பிறகு என் ஆலோசனைப் படி பட்டை அடிப்பதை நிறுத்திவிட்டு , தினமும் காலையில் பட்டைப்பொடியை ( Cinnamon) தேனில் கலந்து சாப்பிட்டு 65 கிலோவுக்கு வந்து விட்டான்.

மது அருந்தினால் கொழுப்பு குறையும் ; ரத்தம் இறுகாமல் நீர்க்கும். இந்தக் காரியங்களெல்லாம் இதயத்துக்கு நல்லது. ஆனால் நம் ஆட்கள் மது அருந்தினால் மகா மட்டமான எண்ணெயில் முக்கி வறுத்த கோழி ஒரு கிலோவை அல்லவா விழுங்கி வைக்கிறார்கள் ?

ஆனால் குணசேகரன் இப்போது மனநல மருத்துவரை நாடிச் சென்று கொண்டிருப்பதாக வள்ளுவர் சொன்னார். (வள்ளுவர் பற்றி ஏற்கனவே அறிமுகப் படுத்தியிருக்கிறேன்). காரணம் என்னவென்றால் , மது அருந்துவதை நிறுத்திவிட்டதால் நண்பர்கள் யாரையும் சந்திப்பதில்லை. தனிமை. மன உளைச்சல். இன்ன பிற. "இதைவிட அவன் எங்களோடு சேர்ந்து தண்ணியே அடித்துக் கொண்டிருக்கலாம் சாரு" என்றார் வள்ளுவர்.

***

நான் மட்டும் தண்டுவட வலிக்கு ஆங்கில மருத்துவரை நாடாமல் சித்த மருத்துவரையோ , ஆயுர்வேத மருத்துவரையோ நாடியிருந்தால் என் கதி அதோகதி தான். இம்மாதிரி வலியின் கொடுமையில் பல பேர் தற்கொலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையெல்லாம் முடிந்து மறுநாள் காலை எழுந்து டைப் செய்து கொண்டிருந்தேன். ஒன்பது மணி இருக்கும். "தாராவின் நம்பரைக் கொடு ; அவரிடம் பேச வேண்டும்" என்று வந்தாள் அவந்திகா.

" என்ன பேசப் போகிறாய் ?"

" உன் மின்னஞ்சல் பெட்டிக்குள் நுழைந்த திருடன் எல்லோரிடமும் பணம் கேட்கும் விஷயம் பற்றித்தான்."

" நீயே பேசிக்கொள் ; இது சம்பந்தமாக நான் யாரோடும் பேசத் தயாராக இல்லை" என்று சொல்லி தொலைபேசி எண்ணைக் கொடுத்தேன்.

நண்பர்கள் சிலர் நான் எழுதுவதைப் படிப்பதில்லை. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எதுவும் தெரிந்து கொள்வதும் இல்லை. அது பற்றி எனக்குப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சமயத்தில் எனக்கு போன் செய்து கீழ்க்கண்டவாறு டார்ச்சர் கொடுப்பார்கள்.

" என்ன சாரு , எப்படி இருக்கீங்க ?"

' ம்ம்ம்...நல்லா இருக்கேன்."

" ம்ம்ம்...அப்புறம் ?"

" ம்ம்ம்...சொல்லுங்க..."

" என்ன ஒன்னும் சத்தத்தையே காணும் ?"

" அப்படீன்னா ?"

" எழுதறதே இல்ல போல்ருக்கு இப்போல்லாம் ?"

" ராஸ லீலா படிச்சீங்களா ?"

" கேள்விப் பட்டேன். இன்னும் வாங்கலே. அது என்னா 400 ரூ. விலை போட்டிருக்காங்க ?"

" அநியாயம்தான் , என்ன பண்றது ? 40 ரூ தான் போடச் சொன்னேன்... ஆனா இந்த மனுஷ்யபுத்திரன் நான் என்ன சொன்னாலும் அதுக்கு எதிராத்தான் செய்றாரு..."

" ஆமாமா , அவர் ஒரு மாதிரின்னுதான் நானும் கேள்விப்பட்டிருக்கேன்...ம்...அப்புறம் ஒன்னும் எழுதலியா ?"

" எங்கே எழுதறது ? குடிக்கவும் கும்மாளம் போடுறதுக்கும்தானே நேரம் சரியா இருக்கு ?"

" குடியைக் குறைச்சுடுங்க சாரு...ஹெல்த்துக்கும் நல்லதில்ல..."

" அதுதான் பார்க்கிறேன்...முடில்லன்னா எதாவது டி-அடிக்ஷன் செண்டர்ல சேர்ந்துட வேண்டியதுதான்..."

இப்படியே போகும் உரையாடல். கீழ்ப்பாக்கம் மென்ட்டல் அஸைலத்திலிருந்து சுவரேறிக் குதித்துத் தப்பி வந்ததும் நேராக சாரு நிவேதிதாவின் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து போன் செய்து விடுவார்கள் படுபாவிகள்.

எனக்கு தாரா போன்ற நெருங்கிய நண்பர்களைப் பற்றி மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பற்றி அவரிடமிருந்து எந்த விசாரிப்பும் இல்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே அவருக்குத் தெரியாது போலும் என்று விட்டு விட்டேன்.

தாராவிடம் பேசி விட்டு அவந்திகா போனை என்னிடம் கொடுத்தாள். இதுபோல் போனை கொடுக்கக் கூடாது என்று பலமுறை அவளை நான் எச்சரித்திருக்கிறேன். இருந்தாலும் கேட்க மாட்டாள்.

" சாரு...நீங்கள் மலேஷியா போயிருப்பதாகவும் , பணத்துக்குக் கஷ்டப்படுவதாகவும் நேற்று இரவு எனக்கு ஒரு மெயில் வந்தது...பதறிப் போய் விட்டேன்..."

" தாரா , தயவு செய்து அது பற்றி இப்போது நான் பேசும் நிலையில் இல்லை. பிறகு பேசுவோம்..."

" ம்ம்...அவந்திகாவை விட்டுப் பேசச் சொல்லும்போதே நினைத்தேன்...அதனால்தான் உங்களிடம் போனை கொடுக்கச் சொன்னேன்..."

" நான் அவளைப் பேசச் சொல்லவில்லை...நாம் அப்புறம் பேசலாம்..."

" அதுசரி...ஏன் உபநயனத்துக்கு வரவில்லை ? ரொம்பவும் எதிர்பார்த்தேன்..."

" நான் அன்றைய தினம் பூராவும் போலீஸ் கமிஷனர் ஆபீஸில் இருந்தேன்..."

" சாரு...நீங்கள் மலேஷியாவில் 4 நாட்கள் பட்டினி என்றதுமே ஒருக்கணம் பதறிவிட்டேன்..."

" அது பற்றி நான் இப்போது எதுவும் பேசக் கூடிய மனநிலையில் இல்லை...நாம் அப்புறம் பேசலாம்..."

" இருந்தாலும் அந்த ஹலோவிலிருந்து அது நீங்கள் இல்லை ; வேறு ஏதோ ஆள் என்று தெரிந்து விட்டது. இருந்தாலும் பதறினது உண்மைதான்..."

" இதோடு இந்த விஷயம் பற்றி 500 பேர் பேசி விட்டார்கள். நான் எக்கச்சக்கமான மன உளைச்சலில் இருக்கிறேன். நீங்கள் வேறு டார்ச்சர் கொடுக்காதீர்கள். தயவு செய்து என் இணைய தளத்தைப் படித்துவிட்டுப் பேசுங்கள்..."

" ஓ , இணைய தளம் வேறு நடத்துகிறீர்களா ? அதன் முகவரி என்ன ?"

சொன்னேன்.

" ஓகே...பார்க்கிறேன் சாரு...புதிதாக இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ?"

" இதோ பாருங்கள் தாரா...நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. நீங்கள் என் இணைய தளத்தைப் பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்..."

" பார்க்கிறேன்...அப்புறம் அந்த மின்னஞ்சல் திருடனைப் பற்றி போலீஸில் புகார் செய்யுங்கள் சாரு..."

அந்த அறிவுரையைக் கேட்டதும் " Look... I dont want to talk to you now..." என்று உச்சஸ்தாயியில் குலைத்துவிட்டு அவந்திகாவிடம் போனைக் கொடுத்தேன்.

திருடனையே கண்டுபிடித்து விட்ட பிறகு போலீஸில் புகார் கொடுக்கச் சொல்லி அறிவுரை! இதைக் கேட்டவுடன் எனக்கு மயானக் கொல்லை பூசாரியின் நினைவே வந்தது. கிராப்புறக் கோவில்களில் மயானக் கொல்லை என்று ஒரு திருவிழா நடக்கும். அப்போது கோவில் பூசாரி ஆடு , மாடு , கோழி எல்லாவற்றின் கழுத்தையும் வாயாலேயே கடித்து ரத்ததைக் குடிப்பார்.

அவந்திகாவுக்குப் புரிந்து விட்டது நிலைமை. பயந்து போய் தாராவிடம் இரண்டொரு வார்த்தைகள் உளறி விட்டு போனை வைத்து விட்டு "சாரு இப்போது டிஸ்டர்ப்டாக இருக்கிறார் ; பிறகு பேசுகிறேன் என்று சொல்கிறார் தாரா" என்றாள். "என்னது , டிஸ்டர்ப்டாக இருக்கேனா ? இன்னும் ஒரு நிமிடம் நீ இங்கே நின்றால் நடப்பதே வேறு" என்று கத்தினேன்.

" ம்க்கும்...பெரிய இவன்னு நினைப்பு..."என்று பழிப்பு காட்டிவிட்டு நகர்ந்தாள் அவந்திகா. சூடு கொஞ்சம் தணிந்தது.

மறுநாள் காலைய சரியாக ஏழு மணிக்கு போன் செய்து "குட் மார்னிங் சாரு" என்றார் தாரா.

" குட் மார்னிங்."

" ஹெல்த் இப்போ எப்படி இருக்கு சாரு ?"

அந்த நேரத்திலும் என் ரத்த அழுத்தம் மேலே ஜிவ்வென்று எகிறியது.

" இன்னுமா நீங்கள் இணைய தளத்தைப் படிக்கவில்லை ?"

" இல்லே சாரு...நேரமே இல்லை...இப்போ உங்க ஹெல்த் எப்படியிருக்கு ? பரவால்லேல்ல ?"

" தாரா...உங்க கிட்ட நேற்றே சொன்னேன்...என் இணைய தளத்தைப் படித்துவிட்டுப் பேசுங்கள் என்று...ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று கூட இல்லை...உங்களிடம் லேப்டாப்பும் இருக்கு...இந்த தினசரிகளைப் பீராய்கிறோம் இல்லையா...எந்தப் பாலம் இடிந்து விழுந்து எத்தனை பேர் செத்தாங்க...எந்த மந்திரி ரேப் சார்ஜில் ராஜினாமா பண்ணினார்...எத்தனை விவசாயிங்க தற்கொலை செஞ்சுக் கிட்டாங்கன்னு தினமும் பார்க்கிறோம்ல..அப்படிப் பீராய்ந்தால் கூடப் போதும் , நான் என்ன செஞ்சுக் கிட்டிருக்கேன்னு தெரியும்...இணைய தளத்தில் உங்கள் கடிதம் கூட வெளியாகியிருக்கு..."

இந்த உரையாடல் முடிந்து சில மணி நேரம் சென்று தாரவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

' எந்தக் கட்டுரையில் என் கடிதம் ?'

கட்டுரைத் தலைப்பைக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

ஒரு மணி நேரம் கழித்து தாராவிடமிருந்து வந்த குறுஞ்செய்தி இதோ:

" ஒரு வேண்டுகோள்:

கீழ்க்கண்டவைகளை தயவுசெய்து மாற்றுங்கள்:

ராம் பி.இ. இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.

நான் பிரின்ஸிபல் அல்ல ; டீன்."

என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு சுரணையற்ற , self-centred ஆன எதிர்வினையைச் சந்தித்ததில்லை என்றே சொல்லவேண்டும்.

தாராவுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:

ராமின் ஹைட் , வேய்ட் , பைஸப்ஸ் அளவு , இடுப்பு அளவு , அவனுடைய பொழுதுபோக்கு , அவன் படிக்கும் கல்லூரி முகவரி போன்ற விபரங்களையும் கொடுத்தால் இணைய தளத்தில் வெளியிட வசதியாக இருக்கும்.

***

கட்டுரையை முடித்து விடுகிறேன். இப்போது தாராவிடமிருந்து இரண்டு எதிர்வினைகளுக்கு சாத்தியம் இருக்கிறது. ஒன்று , அவர் இதைப் படிக்கப் போவதில்லை. (ஏனென்றால் , நான் இது பற்றி அவரிடம் சொல்வதாக இல்லை). இரண்டு , அவர் தப்பித் தவறி படிக்க நேர்ந்தால் மேலே நான் கேட்டுள்ள விபரங்களையும் அனுப்பி வைத்தாலும் வைப்பார்.

என்னைப் பாராட்டுகிறீர்கள் என்பதால் பதிலுக்கு என்னிடம் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். நான் அப்படிப் பட்டவன் அல்ல. உங்கள் வாழ்விலும் சிந்தனையிலும் கொஞ்சமாவது சுரணையுணர்வோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் என்னைத் திட்டினாலும் நான் உங்களைப் பாராட்டுவேன்.

Source : http://www.charuonline.com/


எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை ?

“ Man is an idiot.

He does not know

how to do anything

without copying,

without imitating,

without plagiarizing,

without aping.

It might even have been

that man invented

generation by coitus

after seeing

the grosshoper copulate “

– Augusto Rao Bastos

பாரிஸ் நகரில் சார்லஸ் தெ கால் சதுக்கம் என்ற ஒரு இடம் இருக்கிறது. இந்த சதுக்கத்தை சுற்றி பாரிஸின் 12 பிரதான சாலைகள் ஒன்று சேர்கின்றன. (இந்தச் சாலைகள் ஒன்று, உலகப் புகழ் பெற்ற சாம்ப்ஸ் லீஸே ( Champs Elysees). இந்த 12 சாலைகள் ஒவ்வொன்றும் இருவழிச் சாலைகள் என்பதால் மொத்தம் 24 சாலைகள் என்று ஆகிறது. இந்தச் சதுக்கத்தின் விஷேசம் என்னவென்றால், இங்கே ஒரு போக்குவரத்து சிக்னல்கூடக் கிடைக்காது. பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று எந்த விளக்குகளும் கிடையாது. அதேபோல் இத்தனை சாலைகளும் ஒன்று கூடும் இந்தச் சதுக்கத்தின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஒரு போலீஸ்காரர்கூடக் கிடையாது.

கற்பனை செய்து பாருங்கள். இப்படிப் போக்குவரத்துப் போலீஸோ, ட்ராஃபிக் சிக்னலோ இல்லாமல் ஒரு சதுக்கம் இந்தியாவில் இருந்தால் என்ன ஆகும்? ஆனால், சார்லஸ் தெ கால் சதுக்கத்தில் அது அமைக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில் ஒரு விபத்துக்கூட நடந்ததில்லை.

இதேபோல், நெதர்லாந்திலுள்ள Drachten என்ற நகரம். இது 17ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது. இதன் விஷேசம் என்னவென்றால், இந்த நகரம் முழுவதிலுமே ஒரு போக்குவரத்து சிக்னல்கூடக் கிடையாது. மற்ற ஐரோப்பிய நகரங்களை விட இங்கே விபத்துகள் கு றைவு. இந்த நகரில் போக்குவரத்து சிக்னல்களை நீக்கிவிடலாம் என்று ஆலோசனை வழங்கியவர் Hans Modernman என்பவர்.

இது என்ன சாலைப் போக்குவரத்து பற்றிக் கட்டுரையா ? இல்லை. ஒரு மனித சமூகத்தின் கலாச்சார / நாகரிக வளர்ச்சியை அம்மனிதர்கள் தமது தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து அறிந்து கொண்டு விடலாம்.

நம்முடைய இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், ஒருவர் இங்கேயுள்ள நகரம் ஒன்றின் ட்ராஃபிக் சிக்னலில் கொஞ்ச நேரம் நின்று கவனித்தால் போதும்.

கனரக வாகனத்தை ஓட்டி வருபவருக்கு காரில் செல்பவர் கரப்பான் பூச்சியாகவும், காரில் செல்பவருக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர் கரப்பான் பூச்சியாகவும், மோட்டார் சைக்கிளில் செல்பவருக்கு சைக்கிளில் செல்பவர் கரப்பான் பூச்சியாகவும் தெரிந்து அக்கரப்பான் பூச்சிகள் நசுக்கித் தள்ளப்படுகின்றன. இந்த நிலையில் இவர்கள் எல்லோரையுமே கரப்பான் பூச்சிகளாகவும், மூட்டைப் பூச்சிகளாகவும் எண்ணி நசுக்கித் தள்ள படையெடுத்து வருகிறது அரசியல்வாதியின் கார் அணிவகுப்பு. கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு வீரர்களின் கார்கள், ஆம்புலன்ஸ், தீயணைக்கும் படை வீரர்கள்.... இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர முன்னும் பின்னுமாய் 30 வாகனங்கள் என்று செல்லுகிறார் ஒரு மாநில முதலமைச்சர். சாலையெங்கும் ஏதோ ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது போல் கொஞ்ச நேரத்திற்கு இயக்கமே ஸ்தம்பித்துப் போய் கிடக்கிறது. சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த மன்னராட்சியே தேவலாம் என்று நினைக்கும் அளவுக்குப் போய்விட்டது இந்திய மந்திரிகளின் ஜனநாயக ஆட்சி.

ஐரோப்பிய நாடுகளில் மந்திரிகள் பாராளுமன்றத்துக்கு சைக்கிளில் சென்று வருகிறார்கள். ஐரோப்பா வரை ஏன் போக வேண்டும் ? நமக்குப் பக்கத்தில் இருக்கும் சிங்கப்பூரில் காலை நேரத்தில் பூங்கா ஒன்றில் நானும் என் நண்பரும் வாக்கிங் சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்குப் பக்கத்தில் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு சீனாக்காரரைக் காண்பித்த என் நண்பர் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். பார்த்துக் கொண்டேன். அவர் நகர்த்தும் நண்பர் சொன்னார். “ அவர் தான் திரு. லீசியன் லூங், எங்க பிரதம மந்திரி “

சிங்கப்பூரிலும் சர். மற்ற வெளி நாடுகளிலும் சரி. நீங்கள் கண்ட இடங்களிலும் குப்பைகளைப் போடக் கூடாது. ( இந்த வீடு இந்தியாவிலும், அதன் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்கும் பொருந்தாது. இந்த நாடுகளில் நீங்கள் எந்த இடத்திலும் சிகரெட் துண்டைப் போடுவதிலிருந்து மலஜலம் கழிப்பது வரை என்ன அராஜகம் வேண்டு மானாலும் செய்து கொள்ளலாம்). சிங்கப்பூரில் சற்றுக் கெடுபிடி அதிகம். கண்ட இடத்தில் குப்பை போட்டால் அபராதம் விதித்து விடுவார்கள். அபராதமும் சற்று அதிகம்.

சிங்கப்பூரின் சுகாதாரம் பற்றி ஒரு சம்பவம். அங்கே ஹெளகாங்க் என்ற பகுதியில் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். ஒரு நாள் நான் வீட்டில் தனியாக இருக்கும் போது கதவு தட்டப்பட்டது. திறந்தால் ஒரு சர்தார்ஜி. சிங்கப்பூர் நகரசபையில் பணிபுரிபவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைய அனுமதி பெற்று வீடு முழுவதையும் இஞ்ச் இஞ்சாக பரிசோதனை செய்தார். பிறகு திருப்தியுடன் தலையாட்டி நன்றி கூறிவிட்டுக் கிளம்பினார்.

நான் அவரை “ ஏதாவது வெடிகுண்டு சோதனையா ? “ என்று கேட்டேன். கேட்கும் போதே ‘ வெடிகுண்டுக்கும் நகரசபைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ? ‘ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. அவர் சிரித்துக் கொண்டே ‘ அதெல்லாம் இங்கில்லை ’ என்று கூறி சற்று அவகாசம் விட்டு, ஹெளகாங்க் பகுதியில் ஒருவருக்கு ஜூரம் வந்து விட்டதாகவும், அது கொசு, ஈ போன்ற ஜந்துக்களால் பரவக் கூடியது என்பதால் ஹெளகாங்க் பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டின் உட்புறம் சுத்தமாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கவே தங்களுடைய குழு அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் விரிவாகக் கூறினார்.

அதாவது, நம்முடைய இந்தியர்கள் கூறுவதைப் போல் இது என் வீடு, என் வீட்டுக்குள் நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், இது என்னுடைய சுதந்திரம் என்று சிங்கப்பூரில் சொல்ல முடியாது.

நான் இருந்த வீட்டில் அந்த நகரசபை ஊழியர் சமையலறையைத்தான் முதல் முதலில் சோதனை செய்தார். பிறகு குப்பைக் கூடைகள். குப்பைக் கூடை என்றால் அதை கச்சடாவாகவும், கக்கூஸ் என்றால் அதைப் பொது கக்கூஸைப் போலவும் ஆபாசமாக வைத்திருக்க அங்கே யாருக்கும் அனுமதி இல்லை. சமையலறைக் கழிவுகளைக் கூட வெளியே தெரியாமல் ஒரு பையில் போட்டுக் கட்டி வைத்திருக்க வேண்டும்.

என் வீட்டுச் சமையலறையையோ, கழிவறையையோ அசுத்தமாக வைத்திருந்தால் அதன் மூலம் பரவும் கிருமி என் பகுதியில் வாழும் மற்றொருவரின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது. இந்தப் புள்ளியிலிருந்துதான் கலாச்சாரமும், ஜனநாயகமும் ஆரம்பிக்கின்றது. அதை இந்திய உபகண்டத்தில் வசிப்பவர்களைத் தவிர, உலக மக்கள் யாவரும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இன்னும் ஒரு படி மேல். அங்கே நம்முடைய வீட்டுக் குப்பைகளைத் தர வாரியாகப் பிரித்து நாமே நான்கைந்து பைகளில் போட்டுக் கட்டிவிட வேண்டும். உதாரணமாக போத்தல், தகரம் போன்றவற்றுக்கு ஒரு பை. முட்டை, மாமிசக் கழிவு போன்ற அசைவ சமாச்சாரங்களுக்கு ஒரு பை. சிகரெட் குப்பைகளுக்கு ஒரு பை. ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு ஒரு பை. ஒரே ஒரு சலுகை என்னவென்றால், பழைய டிவி, பழைய கம்ப்யூட்டர் போன்ற சாமான்களை அப்படி அப்படியே கொண்டு வந்து வைத்து விடலாம். ப்ளாஸ்டிக் பைகளுக்குள் போட்டுக் கட்ட வேண்டிய தேவையில்லை.

இந்திய சுகாதாரத்திலேயே ட்ரெய்னிங் எடுத்திருந்த நான் நண்பரைக் கேட்டேன். பைகளைக் குப்பைத் தொட்டியில் தானே கொண்டு போய் வைக்கப் போகிறோம் ? பைகளில் நம்முடைய விலாசமா இருக்கிறது ? எனவே, மாமிசக் கழிவையும் போத்தலையும் ஒரே கவரில் போட்டுக் கொண்டு போய் வைத்து விட்டால் எவனுக்குத் தெரியப் போகிறது ?

” அப்படி வைத்தால் அடுத்த நாளே பாரிஸின் நகரசபை அதிகாரி வந்து நம் கதவைத் தட்டுவார் “ என்றார் நண்பர்.

எப்படியென்றால், குப்பைப் பைகளைப் பார்த்தாலே அவன் எந்த நாட்டுக்காரன் என்று தெரிந்து விடும். உதாரணமாக, இலங்கைத் தமிழர் விஸ்கிதான் குடிப்பார். ( விஸ்கி குடித்துக் குடித்து ஐம்பது வயதிலேயே மேலே போய் விடுவார். அது தனிக்கதை. சந்தேகமிருந்தால், அவ்வப்போது தமிழ்ப் பத்திரிக்கைகளில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் அகால மரணம் பற்றிய செய்திக் கட்டுரைகள் புகைப்படத்தோடு வரும்போது அன்னாரின் வயது என்ன என்பதைக் கவனியுங்கள். ஆனால் ஃப்ரெஞ்சுக்காரர்கள் குடிப்பது ஒயின் ( சராசரி வயது 95க்கு மேல்). இது தவிர, குப்பைப் பையில் இருக்கும் உணவு மிச்சங்களை வைத்தும் இன்னார் வீடு என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள். குப்பைப் பையில் குஸ்குஸ் உணவின் மிச்சம் இருந்தால் அது மொரோக் ( Moroccan ) வீடு. தோல்மாவின் மிச்சமிருந்தால் அது நிச்சயமாக துருக்கிக்காரன் வீடு.

இவ்வாறான சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக சிங்கப்பூரில் கொசுவே இல்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் சிங்கப்பூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியிருக்கும் கடலை ஃபெர்ரியின் மூலம் கடந்தால் நூற்றுக்கணக்கான கொசுக்களையும், குப்பைக் கூளம், சாக்கடை, கூச்சல் என்ற சகல சம்பத்துகளையும் சந்திக்கலாம். அந்த ஊரின் பெயர் ஜொஹர் பஹ்ரு. மலேஷியா.

ஜொகர் பஹ்ரு செல்லும் போதெல்லாம் இது எனக்குப் புரியாத விந்தை. ஒரே ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு ஊரில் ஒரு கொசு கூட இல்லாமல் இருப்பதும், மற்றொரு ஊரில் கொசுத் தொகை பெருத்துக் கிடப்பதும்.

கொசு என்றதும் சீனாவின் ஞாபகம் வருகிறது. புரட்சிக்கு முந்தைய சீனாவில், மக்களின் பெரும் பிரச்சினையாக இருந்தது கொசுவும், மலேரியாவும். மக்கள் கொசு வலை கூட இல்லாமல் மலேரியாவினால் கூட்டம் கூட்டமாக செத்துக் கொண்டிருந்தனர். அப்போது மாவோவின் புரட்சி வெற்றியடைந்த பின் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய எட்கார் ஸ்நோ, மாவோவிடம் ஒரு கேள்வி கேட்கிறார். “ சேர்மன், நீங்கள் புரட்சிக்காரராக இருந்ததற்கும், இப்போது சீனாவின் அதிபராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் ? “

இதற்கு மாவோ சொன்ன பதில், “ ஒரே ஒரு வித்தியாசம்தான்.... இப்போது தோழர்கள் எனக்கு ஒரு கொசு வலை கொடுத்திருக்கிறார்கள் “. இது புரட்சி முடிந்த உடனே நாம் கண்ட மாவோ. அதன் பின்னர் மாவோவும் மாறி, சீனாவும் மாறி விட்டது வேறு கதை. ஆனால், மாவோவின் சர்வாதிகாரத்தில் அவர் தனிமனித சுதந்திரத்தை அழித்ததுபோல், நூற்றாண்டுகளாக சீன மக்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருந்த கொசுக்களையும் அழித்துவிட்டார்.

இப்போது மீண்டும் சிங்கப்பூருக்கு வருவோம். சுகாதாரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் சாலை விதிகளுக்கும் அளிக்கப்படுகிறது. சாலை விதிகளை மீறினாலும் சிங்கப்பூரில் கடுமையான அபராதம் உண்டு. அப்பேர்ப்பட்ட சிங்கப்பூரில் இந்தியர்கள் வாழும் பகுதி ஒன்று உண்டு. அதன் பெயர் லிட்டில் இந்தியா. மிக அழகிய நகரமான சிங்கப்பூரில் அந்த லிட்டில் இந்தியா என்ற இடம் மட்டும் நம்முடைய சிந்தாதிரிப்பேட்டை மாதிரி இருக்கும். வெற்றிலைப் பாக்கு போட்டு மென்று எங்கே வேண்டுமானாலும் சிவப்பு சிவப்பாகத் துப்பி வைக்கலாம். பஸ் டிக்கெட், பாப்கார்ன் கவர், சாக்லெட் தாள் என்று சகல விதமான குப்பைகளையும் அப்படி அப்படியே போடலாம். பச்சை, சிவப்பு விளக்குகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை. லிட்டில் இந்தியாவுக்குள் நுழைந்தால் சிங்கப்பூரிலேயே ஒரு மன நோய் விடுதிக்குள் நுழந்து விட்டது போன்ற உணர்வு வருவதினின்றும் நீங்கள் தப்பிக்கவே முடியாது.

சிங்கப்பூர் அரசு இதை எப்படி விட்டு வைத்திருக்கிறது என்று நண்பரிடம் கேட்டேன். எத்தனை பேருக்குத்தான் அபராதம் போடுவது ? சிங்கப்பூரில் இந்தியர்களின் ஜனத்தொகை அதிகம். அவ்வளவு பேரைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு சிங்கப்பூரில் போலீஸ் கிடையாது. எனவே, லிட்டில் இந்தியா என்ற இந்தப் பகுதியில் மட்டும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் என்று சிங்கப்பூர் அரசு ‘ இந்தியர்களைத் தண்ணீர் ‘ தெளித்து விட்டுவிட்டது.

சமீபத்தில் நான் ஒரு அப்பர்மிடில்கிளாஸ் பகுதியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன். அப்போது மேல் மாடியில் குடியிருந்த வீட்டிலிருந்து பெண்களின் மாதவிடாய்த் துணி வந்து விழுந்து கொண்டிருந்தது. சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. மேலும், அந்தப் பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையும் அடைத்துக் கொண்டு தெருவெங்கும் அரை அடி உயரத்துக்கு சாக்கடை நீர் நரகலுடன் ஓடிக் கொண்டிருந்தது. எனக்குள்ள குறைந்த பட்ச செல்வாக்கைப் பயன்படுத்தி நகரசபைத் துப்புரவுத் தொழிலாளர்களை அழைத்து வந்தேன். அந்த மனிதர்கள் பாதாள சாக்கடைக்குள் முக்கி எழுந்தார்கள். ( இது போன்ரு மனிதர்களே சாக்கடைக்குள் முக்கி எழும் அவலமும் உலகத்திலேயே வேறு எங்கும் இருக்காது. மனித மலத்தைத் தலையில் சுமக்கும் அவலத்தைவிட கொடூரமானது பாதாள சாக்கடையில் மனிதர்கள் முக்கி எழுவது )

முக்கி எழுந்து தலையிலிருந்து கால் வரை சாக்கடையும் நரகலும் வழிந்தோட அந்தத் தொழிலாளர்கள் கூறியது “ வழிகளையெல்லாம் பெண்களின் தூரத் துணி அடைத்துக் கொண்டிருக்கிறது “

இந்தப் பிரச்சினையால் கடும் அல்லலுற்ற நான் சமீபத்தில் வீட்டையே விற்றுவிட்டு தெற்குச் சென்னையில் வந்து குடியேறினேன். ஒரு நாள் வீட்டுக்கு அருகிலிருக்கும் கடற்கரையை அதிகாலையில் பார்த்து ரசிக்கலாம் என்று என் மனைவி அவந்திகாவையும் அழைத்துக் கொண்டு ஆறு மணிக்கு வாக்கிங் சென்றேன்.

அந்த அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். என் வாழ்வில் ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சிகளில் முதன்மையானது அதுதான். மெரினா கடற்கரை உலகின் பெரிய கடற்கரைகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது. அவ்வளவு பெரிய மணல் பரப்பு முழுவதும் லட்சக்கணக்கான பாலிதீன் கவர்களும், சோளக் கதிர் கட்டைகளும் இன்ன பிற அசிங்கங்களும் நிரம்பிக் கிடந்தன.

கற்பனையில் யூகித்துப் பாருங்கள். ஐந்தாறு கிலோமீட்டர் பரப்பில் ஒரே குப்பைக் காகிதங்களாகவே சிதறிக் கிடக்கும் காட்சியை. அது ஒரு திங்கட்கிழமை காலை. எனவே, முந்தின விடுமுறை தினத்தில் மெரினா கடற்கரைக்கு வந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும் தின்று விட்டுப் போட்ட குப்பைதான் அது. சாதாரண ஞாயிறுகளில் 3 லட்சம், பண்டிகை தினங்களில் 7 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுகிறார்கள்.

இந்த அதிர்ச்சி சாதாரணம். இதைத் தொடர்ந்து வந்த அதிர்ச்சிதான் இன்னும் பயங்கரமானது. இந்தக் குப்பையைப் பார்க்க மனம் சகிக்காமல் நானும் அவந்திகாவும் கடலின் அருகே சென்றோம். அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே மலக்காடாக கிடந்தது. பின்னர், நண்பர்களிடம் இது பற்றிப் புலம்பிக் கொண்டிருந்த போது எம்ஜியார் சமாதியிலிருந்து பெசன்ட் நகர் மாதா கோவில் வரை ஒரே மலக்காடுதான் என்றார்கள். மலஜலம் கழிப்பதை மக்கள் இன்னும் முடித்திருக்கவில்லை. தொடர்ந்து அந்தக் காரியம் நடந்த வண்ணமே இருந்தது.

நானும் அவந்திகாவும் தலை தெறிக்க வீட்டுக்கு ஓடி வந்தோம். இதெல்லாம் வெளிக்குப்பை என்றால், உள்குப்பை இதைவிட இன்னும் பயங்கரம். கணினியுகம் தோன்றி திடீரென்று நிகழ்ந்த தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக அதிரடியான சமூக மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன.

இதம் முழுப் பயனை அனுபவிப்பது இளைய சமுதாயம். அதிலும் குறிப்பாக, இளம்பெண்கள். இது நாள் வரை, மிகக் குறுகலாக்கப்பட்ட சமூக வெளியில் (அடுப்பங்கரை அல்லது ஆஃபீஸ் அல்லது இரண்டும்) புழுங்கிக் கொண்டிருந்த பெண்களுக்கு இன்று மிகப் பரந்த உலகம் கண்முன்னே விரிந்து கிடக்கிறது. ‘சூரியன் மறைந்து இருள் கவியத் துவங்குவதற்குள் தங்கள் புத்திரிகள் வீட்டுக்குள் வந்து அடைந்து விட வேண்டும்; இல்லாவிட்டால் அவர்களின் கற்புக்கு ஆபத்து ’ என்று எண்ணி அதை நடைமுறைப் படுத்தி வந்த மத்திய தர வர்க்கம் இன்று தங்கள் பெண்கள் இரவு 7 மணிக்கு ஆஃபீஸ் சென்று, காலை 5 மணிக்குத் திரும்பி, பகல் முழுதும் உறங்கி மாலையில் கண் விழிப்பதை வாய் பொத்தி பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், தங்கள் செல்வ புத்திரிகள் இராக் கண் விழித்து, அமெரிக்க வாடிக்கையாளர்களுடன் பேசி, கொண்டு வந்து கொடுக்கும் 40 ஆயிரம், 50 ஆயிரம் என்ற சம்பளப் பணம்.

இந்த அபரிமிதமான பணம் இன்றைய இளம் பெண்களுக்கு எண்ணற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பது உண்மை. இதன் மூலம் காலம் காலமாக ஆண்களை எதிர்பார்த்துக் கிடந்த பெண்களின் அடிமைத்தனம் உடைந்து விட்டது. இன்று காலம், வெளி இரண்டும் பெண்ணின் கைவசப்பட்டு விட்டது. பொருளாதார ரீதியாகவும் விடுதலை கிடைத்து விட்டது. இது இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்குக் கிடைத்த அனுகூலம் என்றால், இதன் மறுபக்கமாக மிகப் பெரியதொரு வீழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பொருளாதார விடுதலையை அனுபவிப்பது நகர்ப்புற நடுத்தர வர்க்கம் மட்டுமே. சமீபத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நான் கண்ட காட்சி. மதியம் ஒரு மணி இருக்கும். ஒரு 70 வயதான முதியவர் கல் உடைத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் நின்று 10 நிமிடம் கவனித்தேன். அவர் பாட்டுக்கு இயந்திரத்தைப் போல் உடைத்துக் கொண்டேயிருந்தார். அவரை நெருங்கி “ எவ்வளவு கூலி ? “ என்று கேட்டேன். “ 50 ரூபாய் ” என்றார்.

இது ஒரு பக்கமிருக்க தகவல் தொழில் நுட்ப புரட்சியால் ஏற்பட்ட அனுகூலங்களோடு கூடவே நடந்த வீழ்ச்சிகளில் ஒன்று, ஆண் பெண் உறவுகளின் சிதைவு என்று சொல்லலாம். எங்கோ கண் காணாத தேசத்திலிருக்கும் ஒரு ஆடவனோடு ASL ( Age, Sex, Location ) என்ற மூன்று விபரங்களை மட்டும் பெற்றுக் கொண்டு லட்சக்கணக்கான வார்த்தைகளை அந்த ஆணும் பெண்ணும் பரிமாறிக் கொள்கின்றனர். இந்த லட்சக்கணக்கான வார்த்தைகளில் எத்தனை சதவிகிதம் உண்மை, எத்தனை சதவிகிதம் பொய் என்று இருவருக்குமே தெரியாது. அநேகமாக முக்கால்வாசி பொய்யாகவே இருக்கும்.

பெல்ஜியத்திலிருந்து ஒரு பெண் சாட்டில் வந்து “ ஜி ஸ்பாட் “ என்றால் என்ன ? என்று என்னைக் கேட்டால். விளக்கம் கூற ஆரம்பித்ததில் இரண்டு மணி நேரம் கடந்து போய் ஒரு Virtual கலவியே நடந்து முடிந்து விட்டது.

வெப்கேம் என்ற ஒரு சாதனத்தின் வழியே எதிராளியின் நிர்வாண உடலைப் பார்த்துக் கொண்டே சுய போகத்தில் ஈடுபடும் இளைஞர் சமூகம், இன்று பாலியல் உறவு என்பதை சொற்களாகவும், காட்சியாகவும் பதிலீடு செய்திருக்கிறது.

பாலியல் சுகம் என்பது ஸ்பரிச சம்பந்தத்திலிருந்து விலகி வெறும் வார்ததைக் கட்டமாக உருமாறியிருக்கிறது. காதல் என்பது வெறும் சரீர இச்சையாய் மாறி பெண்ணின் பாலுறுப்பு ஆணின் விந்தை வாங்கிக் கொள்ளும் கழிவறையாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் தேசம், இனம், மொழி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் இளைஞர் சமுதாயம் ஒரே விதமான வார்த்தைகளால் தங்கள் சரீர இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள முயன்று தோல்வி அடைந்து கொண்டிருக்கின்றன.

இங்கே வார்த்தைகள் என்பது முக்கியம். நீ, வா, போ, செல்லம், ச்சோ ச்வீட் என்கிறாற்போல் மொத்தம் 200 வார்த்தைகள் இருக்கலாம். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இந்த 200 வார்த்தைகள்தான் மாறி மாறிப் புழங்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, பெரூ தேசத்தில் லிமா நகரில் சாட் செய்யும் ஒரு இளைஞனின் என்பஞோல் வார்த்தகளும் சென்னையில் அமர்ந்து சாட் செய்யும் ஒரு யுவதியின் ஆங்கிலம் அல்லது தமிழ் வார்த்தைகளும், மொழி பெயர்த்துப் பார்த்தால் ஒரே வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

உதாரணமாக, என் உறவினர் வீட்டின் கணினி ஒன்றில் சந்தர்ப்பவசமாக அமர்ந்த போது ஒரு கணினி உரையாடலைக் காண நேர்ந்த்து. நான் ஒரு சமயம் என்னுடைய ஜப்பானியத் தோழியுடன் அடித்த அதே அரட்டை மொழிகள்; அச்சு அசலாக அதே வார்த்தைகள். ஆங்கிலத்துக்குப் பதிலாக தமிழ். அந்த இளைஞனுக்கு வயது 20 இருக்கலாம். இவ்வாறாக, இருநூறே வார்த்தைகள் கோடிக்கணக்கான தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு இந்தக் காற்றில் அலைந்து கொண்டிருக்கின்றன.

கணினி போதாதென்று, கைத்தொலைபேசி வழியாகவும் இந்த வெற்று வார்த்தைகள் பரிமாறப் பட்டு வருகின்றன. காதருகே கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டிராத எந்த ஒரு இளம் பெண்ணையும் என்னால் காண முடியவில்லை.

ஒரு நாள் நடு இரவு ஒரு மணிக்கு மேல் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். முன்பின் தெரியாத ஒரு இளம்பெண்ணுக்கு லிஃப்ட் கொடுக்க வேண்டி வந்தது. அந்தப் பெண் காரில் வந்த அரைமணி நேரமும் விடாமல் தன் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டே வந்தாள். விடைபெறும் போது கூட பேச்சை விடவில்லை.

காலை ஐந்து மணிக்கு பார்க்கில் நடந்து கொண்டிருக்கும் போது, கூடவே நடக்கும் பெண் கைத்தொலைபேசியை அந்த ஒரு மணி நேரமும் காதிலேயே வைத்தபடி பேசிக் கொண்டே நடக்கிறாள்.

இப்படி சாலையைக் கடக்கும் போதும், பஸ்ஸிலும், ரயிலிலும், உணவருந்தும் போதும், ஏன் கவுண்டரில் அமர்ந்து ஒரு வாடிக்கையாளருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது கூட இளம் பெண்கள் கைத்தொலைபேசி மூலம் ஏற்கனவே சொன்ன அந்த 200 வார்த்தைகளாலான வாக்கியங்களையே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கின்றனர்.

காரல் மார்க்ஸ் சொன்ன எட்டு மணி நேர உழைப்பு காணாமல் போய் இந்தக் கணினி யுக இளைஞர்கள் 18 மணி நேரம் உழைக்கிறார்கள். அலுப்பையும் சோர்வையும் போக்கிக் கொள்ள ஒரு நாள் குடிக்கிறார்கள்.

ஒவ்வொரு மனித வாழ்க்கையும் உள்ளீடற்ற வெற்று வார்த்தைக் கூட்டங்களாக மாறி அலைகின்றன. தனிமையை விரட்ட ஏதேதோ செய்கிறார்கள். Colouring என்ற ஒன்று. தலைமயிரை வண்ணமடித்துக் கொள்வது. இதற்குக் குறைந்த பட்ச செலவு ரூ. 2000. Straightening என்ற ஒன்று. தலை மயிரை முள்ளம் பன்றியைப் போல் மேல் நோக்கி நீட்டச் செய்வது. இதற்குக் குறைந்த பட்ச செலவு ரூ.3000. இஸ்பஹானி சென்டரில் உள்ள பெளன்ஸ் என்ற கடை சென்னை வாழ் இளைஞர்களிடையே இன்று மிகவும் பிரபலம்.

பாதி ஜட்டி வெளியே தெரிய தொப்புளிலிருந்து கீழே ஒரு சாண் இறங்கியிருக்க வேண்டும் ஜீன்ஸ். பெண்ணாக இருந்தால் ஆணுக்குப் பின்னே பைக்கில் காலத்தூக்கிப் போட்டு அமர்ந்தால் புட்டம் முழுவதும் வெளியே தெரியவேண்டும். பேண்டீஸ் என்பது வெறும் ஒரு நூல் கயிறு தான். வட்டமாக ஒரு மெல்லிய கயிறு. இந்த வட்டத்தில் இரண்டு முனைகளிலிருந்து ஊஞ்சல் போல் தொங்கும் மற்றொரு மெல்லிய கயிறு. இந்த நூல் கயிற்றின் விலை ரூ.500.

இவ்வைகையான வாழ்க்கை முறையின் பிறப்பிடம் அமெரிக்கா. அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட இந்தக் கலாச்சார அவலம் இன்று உலகம் பூராவும் பரவி விட்டது. ஐரோப்பா மட்டுமே விதி விலக்கு. ஃபிரான்ஸின் கிராமப் புறங்களில் இன்னமும் ரயிலில் ஏறுவதற்குப் பயப்படும் பெண்களை நான் சந்தித்திருக்கிறேன்.

இன்றைய கால கட்டத்தின் ஆன்மீக வீழ்ச்சிக்கும், உலகின் ஆன்மீக வறட்சிக்கும் சாட்சியாக விளங்குவது அமெரிக்கா. இதற்கு ஒரே உதாரணம் தருகிறேன்.

ஒரு அமெரிக்க மருத்துவமனை. ஒரு விபத்தில் வலது கை துண்டாகிப் போன ஒருவன் வலியால் அலறித் துடித்த படி இடது கையால் தனது மருத்துவக் காப்பீட்டுப் படிவத்தை மிகுந்த சிரமத்துக்கிடையே பூர்த்தி செய்து கொண்டிருக்கிறான். பூர்த்தி செய்யாவிட்டால் மருத்துவ உதவி கிடைக்காது. இதைவிடக் கோரமான காட்சிகளை இந்திய நாட்டின் அரசு மருத்துவமனைகளில் ஒருவர் பார்க்க முடியும். இதைத்தான் ஆன்மீக வறட்சி என்று கூறினேன்.

அமெரிக்காவை தனது மாடலாகக் கொண்ட இந்திய இளைஞர் சமூகம் இத்தகையதொரு ஆன்மீக வறட்சியில் தான் இன்று சிக்கிக் கொண்டிருக்கிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் திபெத்திய புத்த பிக்குகள் எட்டாவது பெரும் பாவம் என்று கருதப்பட்ட திரிஸ்தித்தியாவினால் (சோகம்) பாதிக்கப்பட்டனர். திரிஸ்தித்தியாவை உண்டாக்குவது boredom. ஒரு பிக்கு ஒரு தேவதையை வசப்படுத்தி அதனிடம் தன் பிரச்சினையைக் கூறினான். அவன் திரிஸ்தித்தியாவினால் அவதிப்படும் போதெல்லாம் அந்த தேவதை அவனை வெளியே அழைத்துச் சென்றது. கண்காணாத தூர தேசங்களுக்கெல்லாம் அவனை அழைத்துச் சென்றது அந்த தேவதை. அங்கேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றும். ஆனால் மடாலயத்துக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்து விடும். ஆனால் ஆச்சரியகரமாக இந்தப் பயணங்களெல்லாம் அவனுடைய திரிஸ்தித்தியாவைக் குறைப்பதற்க்கு பதிலாக அதிகப்படுத்தவே செய்தது. இப்போது அவனுடைய boredom இன்னும் தீவிரமாகி அது ஒரு ontological தன்மையை அடைந்தது. துக்கத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டான் அந்த பிக்கு. இப்போது அந்த தேவதையுடன் வெளியே செல்லும் ஒவ்வொரு பயணமும் அவனது துக்கத்தை அதிகரிப்பதாகவே இருந்தது. இந்த நிலையில் அவனுக்கு அந்த மடாலயமும், சக பிக்குகளும், பிரார்த்தனையின் போது கிடைக்கும் தெய்வத்தின் தரிசனமும் எல்லாமே ஒரு மாயத் தோற்றமாகத் தெரிய ஆரம்பித்தது. அவனது உலகம் கேளிக்கை என்ற விஷத்தின் மூலமாக வெற்றிடமாக்கப்பட்டது. இதன் பிறகு 1200 ஆண்டுகள் கழித்து ஃபிரான்ஸில் பாஸ்கல் என்ற ஒருவர் . Pensees என்ற நூலை எழுதினார். அதில் கேளிக்கை என்ற ஒரு அத்தியாத்தில் அவர் பின்வருமாறு எழுதினார்.

மனிதனின் எல்லாத் தீமைகளும் அவனுடைய ஒரே ஒரு தன்மையிலிருந்து தான் உருவாகின்றன. அந்த ஒரே ஒரு தன்மை என்னவென்றால், அவனால் ஒரு தனி அறையில் தனித்து இருக்க முடியாது என்ற இயலாமைதான்.

சென்ற ஆண்டு ( 2006 ) கிறிஸ்துமஸ் சமயத்தில் ஃபிரான்ஸிலுள்ள லூர்து மாதாவை தரிசிக்க் ஒரு யாத்திரை மேற்கொண்டேன். தெற்கு ஃபிரான்ஸின் கோடியில் ஸ்பெய்ஸ் எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிற்றூர் லூர்த். நான் லூர்துக்கு 170 கி.மீ. தூரத்திலுள்ள துலூஸ் என்ற நகரில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நண்பருடன் லூர்த் சென்றேன். கிறிஸ்துமஸ் தினம். அப்போது எனக்கு பாவ்லோ கோயலோவின் ஞாபகம் வந்தது. அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். அவர் அங்கேதான் லூர்துக்குப் பக்கத்தில் ஸந்த் மர்த்தீன் என்ற கிராமத்தில் தங்கியிருப்பதாக அறிந்திருக்கிறேன். ஸந்த் மர்த்தீன் லூர்திலிருந்து 15 கி.மீ. தூரம்தான் என்பதால் அவரைச் சந்திக்கலாம் என்று கிளம்பினோம். முன் கூட்டியே அவரிடம் சந்திப்பு குறித்து அனுமதி பெற்றிருக்கவில்லையெனினும் ஒரு நப்பாசையால் சென்றோம். பல மைல் விஸ்தீரணத்துக்குப் பரந்திருக்கும் புல்வெளியின் நடுவே ஒரு சிறிய வீடு. வீடு பூட்டியிருந்தது. கிறிஸ்துமஸூக்கு அவரும் எங்காவது கிளம்பியிருக்கலாம். ஸந்த் மர்த்தீன் ஒரு கிராமம் தான் என்றாலும் கூட பக்கத்து வீடே ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. ஸந்த் மர்த்தீனில் ஒரு பேக்கரி கூட கிடையாது. ப்ரெட் வாங்க வேண்டும் என்றாலும்கூட பாவுலோ கோயலோ 15 கி.மீ. தாண்டி லூர்துக்குத்தான் செல்ல வேண்டும். மனிதர் ஒரு டி.வி. பெட்டியுடனும் (500 சேனல்களாம்) கணினியுடனும் தன்னந்தனியாக அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ஒரே பொழுதுபோக்கு வில்வித்தை பழகுவது.

சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பனி போர்த்த மலைகள். கிறிஸ்துமஸ் மரங்கள் வெண் பனியைப் போர்த்திக் கொண்டிருந்தன. சாலையோரத்தில் பயணிகள் ஓய்வெடுக்க பெஞ்சுகளும் நிழற்குடைகளும் இருந்தன. அங்கே அது நிழற்குடை அல்ல. பனிக்குடை என்று சொல்ல வேண்டும். பஞ்சுப் பொதிகளாய் ஸ்நோ விழுந்து கொண்டிருந்தது. ஐரோப்பாவில் ஸ்நோ விழாமல் கிறிஸ்துமஸே இல்லை.

மதியம் மணி மூன்று இருக்கும். நண்பர் “ மது அருந்தலாமா ? “ என்று கேட்டார். நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு மெதுவாக நடந்து பாவுலோ கோயலோவின் வீட்டுப் புல்வெளிக்கு வந்து அமர்ந்தேன். பனியால் நண்பரின் உருவம் நிழலைப் போல் தெரிந்தது.

கண்களை மூடினேன். வாழ்வில் முதல் முறையாக விழித்திருக்கும் போதே கண்களை மூடியது அப்போது தான். வித்தியாசமாக இருந்தது. பனி சூழ்ந்த ஒரு சாலையில் தனியே சென்று கொண்டிருக்கும் ஒரு பனி உருவம். பிறகு, பனி அந்தச் சாலையை முழுமையாகப் பார்வையிலிருந்து மறைத்தது. எங்கும் ஒரே வெண்மை. அப்போது என் மனம் என்னிடம் ஏதோ பேசியது. உன்னிப்பாக கவனித்தேன். உன் கண்களை உற்று நோக்கு என்றது மனம். மனதின் குரல் ஒரு உபதேசியின் குரலைப் போலிருந்தாலும் பேச்சு என்னவோ கிசுகிசுப்பான் தொனியிலிருந்தது. அந்தக் குரலின் சொல் வழி தொடர்ந்தேன். கருணை என்ற வார்த்தை சுவாசத்தில் ஓடியது. அதன் பின்பு மனம் என்னைச் செவிகளின் அருகே அழைத்துச் சென்று ஞானம் என்றது. சிறிது நேரம் அமைதிக்குப் பின்னர், என்னை வாயின் பக்கம் கொண்டு வந்து பொறுமை என்றது. புரிந்து கொண்டு மெளனமானேன். அதன் பிறகு எந்த சப்தமும், எந்த அசைவும் இல்லாத பூரண மெளனம். எவ்வளவு நேரம் கடந்ததென்று தெரியவில்லை. திடீரென்று பிரக்ஞை திரும்பிய போது மனம் என் இதயத்தை ஸ்பரிசித்து அன்பு, அன்பு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது.

கண் விழித்தபோது நண்பர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். “ நீங்கள் போய் ஒன்றரை மணி நேரமாகிறது. பயந்தே போனேன். இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? “ என்று கேட்டார் நண்பர்.

” சும்மா இருந்தேன் “ என்றேன் அவரிடம். துலூஸூக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது ” நீங்கள் மதுபானத்தில் விருப்பமுள்ளவராயிற்றே ? ஏன் சாப்பிடவில்ல ? “ என்று கேட்டார் நண்பர்.

அவருக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தேன்.

ஒரு ஊரில் ஒரு ஆள் தாசி வீடே கதி என்று கிடந்தான். எல்லா தாசி வீட்டுக்கும் போகாமல் தேவதேவி என்ற ஒரே தாசியிடம் அடிமையாய்க் கிடந்தான். அவள் நடந்து சென்றால் அவளுக்கு நிழல் வேண்டுமென, குடையை அவள் முகத்துக்கு நேரே நின்றபடி பிடித்துக் கொண்டு பின்னோக்கி நடப்பான் அந்த தாசன். ஊராரின் பரிகசிப்பைப் பற்றி அவன் சிறிதும் கவலைப்படவில்லை.

ஒரு நாள் அந்த ஊருக்குத் தன் சீடர்களுடன் வந்து சேர்ந்தார் ஸ்ரீராமானுஜர். சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இப்படி வினோதமான முறையில் ஒரு பெண்ணுக்குக் குடை பிடித்துக்கொண்டு போகும் அவனைப் பார்த்து ஆச்சரியமுற்று சீடர்களிடம் அவன் யாரென வினவினார். அவர்கள் விபரம் சொல்லவே, அவனை நான் பார்க்க வேண்டுமே என்று கேட்டார் உடையவர்.

அழைத்து வரப்பட்டான் அந்த் தாசன். “ ஏன் இப்படிச் செய்கிறீர் ? “ என்று கேட்ட ராமானுஜரிடம் அவன், “ நீங்களாக இருந்தாலும் அப்படித்தான் குடை பிடிப்பீர்கள். அந்தப் பெண்ணின் கண்களின் அழகு அப்படி. அவ்வளவு அழகிய கண்களை நீங்கள் இந்த உலகிலேயே காண முடியாது “ என்கிறான் தாசன்.

உடனே ராமானுஜர் “ அந்த ஸ்த்ரீயின் கண்களைவிட அழகிய கண்களை நான் உமக்குக் காண்பித்தால் என்ன செய்வீர் ? “ என்று கேட்டார். அதற்கு தாசன் இவளை மறந்து விட்டு அந்தக் கண்களை உடையவருக்கு அடிமையாகி விடுவேன் என்கிறான்.

ஸ்ரீராமானுஜர் அந்த தாசனுக்குக் காண்பித்த கண்கள் சாட்சாத் ஸ்ரீமந்நாராயணனுடையது. அவ்வளவுதான். அந்த தாசர் பின்னாளில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகி தொண்டரடிப் பொடி ஆழ்வார் என அழைக்கப்பட்டார். கதையைச் சொல்லி முடித்து விட்டு, “ கண்களை மூடி மனதின் குரலைக் கேட்கத் துவங்கினால் தனிமை என்ற நோயின் பிடியிலிருந்து மீள முடியும் “ என்றேன்.

சிந்தாதிரிப் பேட்டைக்கு வழி என்ன ?

on Saturday, April 4, 2009

அன்புமிக்க சாரு அவர்களுக்கு ,

முதல் வரியிலேயே கடிதத்தை அழித்து விட்டால் மிக்க சந்தோஷம்.

கேள்வி பதில் கட்டுரை மிக அருமை. ஒஷோவைப் பற்றிய தங்களின் கருத்து கல்வெட்டு உண்மை. ஆனால் அவரைப் புரிந்து கொள்ள மனிதனுக்கு நீண்ட வாசிப்பும் , வாழ்வின் அனுபவங்களும் தேவை என்று நினைக்கிறேன். புரியாத வயதில் ஒஷோவைப் படித்த நான் , புரிந்து கொள்ளாமலே படிக்க நேரிட்ட கொடுமையை என்னவென்று சொல்லுவது.

உண்மைச் சிந்தனைவாதிகளை ( எழுத்தாளனை ) இவ்வுலகம் உதாசீனப்படுத்தியே வந்திருக்கின்றது. ஆனால் அவனின் எழுத்துக்கள் என்றும் சாகா வரம் பெற்றவை. உங்களை பாரதியின் மறு உருவமாகவே பார்க்க நேரிடுகிறது என்று சொல்ல வந்தால் என்னை யாருடனும் ஒப்பிடுவது எனக்குப் பிடிக்காது என்ற தங்களின் பேச்சைக் கேட்டவனாதலால் சொல்ல முடியவில்லை என்றாலும் , நமக்குத் தெரிந்தவர்களுடன் தான் சிலரை ஒப்பிட்டு நோக்கிவது தமிழர் மரபு என்பதால் , வேறு வழியின்றி சொல்ல வேண்டிய நிலைக்கு ஆட்பட வேண்டியதாகி உள்ளது.

கடைசி வரியில் இந்தக் கடிதத்தை அழித்துவிட்டால் மிக்க சந்தோஷம்.

குறிப்பு : இது உங்களை வாசிக்கும் தங்கவேலின் கடிதம். உங்களது இணைய தள நிர்வாகியின் கடிதம் அல்ல. எப்படி என்னால் என் குழந்தைக்கு தந்தையுமாய் , மனைவிக்கு கணவனுமாய் இருக்கின்றேனோ அதுபோல எடுத்துக்கொள்ளவும்.

சுவாசிக்கும்

தங்கவேல்

ஒப்பீடு செய்யும்போது ஒரு பிரச்சினை இருக்கிறது. என் எழுத்தைப் பிடிக்காதவர்களுக்கு அது நகைச்சுவையாக இருக்கும். எழுத்துலகம் இன்று அப்படித்தான் இருக்கிறது. சினிமா உலகத்தைப் போல. எக்ஸ் நடிகரின் ரசிகர்கள் ஒய் நடிகரின் போஸ்டரில் சாணி அடிக்க , ஒய் நடிகரின் ரசிகர்கள் எக்ஸ் நடிகரின் போஸ்டரில் சாணி அடிப்பார்கள். எனக்கு வள்ளுவர் என்று ஒரு நண்பர் இருக்கிறார். ஊர் கோவை. ஒரு முறை ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை அடித்த விதத்தில் ஒரு முறை சிறை சென்று வந்திருக்கிறார். ஆனால் நல்லவர். 35 கிலோதான் இருப்பார். குடி. குடிப்பதை நிறுத்தினால் என்னைப் படிப்பதையும் நிறுத்தி விடுவார். இதே போல் முன்பு ஒரு நண்பர் இருந்தார். குடியை நிறுத்தினார். அதோடு படிப்பதையும் நிறுத்தி விட்டார். பரவாயில்லை என்கிறேன். வள்ளுவர் கேட்பதில்லை. அகில உலக சாரு நிவேதிதா ரசிகர் மன்றம் என்ற ஒரு அமைப்பு வைத்திருக்கிறார்.

உறுப்பினர் எண்ணிக்கை 2. ஒன்று அவர். மற்றொன்று அடியேன். நேற்று அவர் என்னிடம் அந்த ஏ.கே.எம்.மின் தொலைபேசி எண்ணைக் கேட்டார். எதற்கு என்றேன். திட்ட என்றார். ஏ.கே.எம். என் மீது அநியாயமாக அவதூறு செய்கிறாராம். அப்படிப் பார்த்தால் ஏ.கே.எம்மின் ரசிகர்கள் அவரிடம் என் தொலைபேசி எண்ணைக் கேட்டால் என் கதி என்னாவது ? இதற்கெல்லாம் முடிவேயில்லை. கத்தி எடுத்தால் கத்தியில்தான் சாவு. வேண்டாம் வன்முறை.

ஒப்பீடு என்றதும் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகம் வருகிறது. சுஜாதா இரங்கல் கூட்டம் என்று அழைத்திருந்தனர். ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீனிவாசகாந்தி நிலையம். அங்கேதான் முன்பெல்லாம் கணையாழி மாதாந்திரக் கூட்டம் நடக்கும். கூட்டத்தின் தலைவர் இந்திரா பார்த்தசாரதி ' யார் வேண்டுமானாலும் பேசலாம் ' என்றார். முதலில் பேசியவர் க்ரேஸி மோகன். 20 நிமிடம். பேசியதும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்கும் பொறுமையின்றி உடனே கிளம்பிச் சென்று விட்டார். அடுத்து வந்த எஸ். வைத்தீஸ்வரன் ஒரு நீண்ட கட்டுரையையே வாசித்தார். ஒரு வரி கூட புரியவில்லை. 20 நிமிடம். அடுத்து வந்தவர் ஏதேதோ சொன்னார். மூட்டு வலி , உயர் ரத்த அழுத்தம் , கொலஸ்ட்ரால் என்று பல வார்த்தைகள் காதில் விழுந்தன. 20 நிமிடம். அடுத்து வந்தவர்தான் அட்டகாசம். சுஜாதாவின் வாரிசு திருப்பூர் கிருஷ்ணன்தான் என்று தீர்மானாமாகச் சொன்னார். 20 நிமிடம். மணி ஏழரை ஆகி விட்டது. கூட்டத்தில் இருந்த அத்தனை பேருமே சுஜாதா பற்றிய தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்ததை அவர்கள் முக பாவத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது எழுந்த இந்திரா பார்த்தசாரதி "இனி பேசுபவர்கள் மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசலாம். அப்போதுதான் எல்லோரும் பேச முடியும்" என்ற ஜனநாயக பூர்வமான தனது முடிவை அறிவித்தார். எனக்கு பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜீயின் ஞாபகம் வந்தது. எழுந்து வெளியே வந்தேன். கூட்டத்தின் அமைப்பாளர் " நீங்கள் பேசவில்லையா ?" என்று கேட்டார். ஏதோ வாய்க்கு வந்ததை அவரிடம் உளறிவிட்டு நடந்தேன். இன்னும் இருந்திருந்தால் சுஜாதாவை இன்னும் யார் யாரோடெல்லாம் ஒப்பீடு செய்திருப்பார்கள் என்று தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். அரிய வாய்ப்பை இழந்து விட்டேன். பொடிநடையாக நடந்தே வீட்டுக்கு வந்தேன். அப்படி வரும்போது தான் அந்த முழு நிலவைப் பார்த்தேன். (இல்லாவிட்டால் குகை மனிதன் எப்படி முழு நிலவைப் பார்த்திருக்க முடியும் ? நான்தான் குகையை விட்டு வெளியிலேயே வருவதில்லயே ?)

புரிகிறதா தங்கவேல் ? ஒப்பீடு செய்தால் இதுதான் பிரச்சினை. பாரதிக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும் ? அவன் ஒரு அஞ்சாநெஞ்சன். பிரிட்டிஷ்காரனின் துப்பாக்கியையே துச்சமாக நினைத்தவன். நானோ ஒரு அல்ப பயந்தாங்கொள்ளி. ஏதாவது பெரிய விஷயங்களுக்கு பயந்தாலாவது பரவாயில்லை. கேவலம் ஒரு கரப்பான்பூச்சியைத் தூக்கி என் மீது போட்டீர்களானால் மூர்ச்சையடைந்து விழுந்து விடுவேன். சிருஷ்டிகரம் என்று எடுத்துக் கொண்டால் அதிலும் தோல்விதான். பாரதி ஒரு ஆசுகவி. நின்ற இடத்தில் நினைத்த மாத்திரத்தில் கவிதை மழை பொழிவான். நமக்கோ அதி பயங்கர கற்பனை வறட்சி. என்னால் ஒரு 10- ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற ஒரு சரித்திர நாவலை எழுத முடியுமா ? வாய்ப்பே இல்லை.

அடுத்து மொழி ஞானம். பாரதிக்கு ஆங்கிலம் , சமஸ்கிருதம் , இந்தி , உர்தூ , · ப்ரெஞ்ச் என்று ஏகப்பட்ட மொழிகள் அத்துப்படி. அந்தந்த மொழிகளில் புலமையுடன் எழுதக்கூடியவன். (அப்படியிருந்தும் ஒரு பொய் சொல்லிவிட்டான். தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று. எனக்குத் தெரிந்து அரபி மொழி போல் இனிமையான மொழி இந்த

உலகத்திலேயே கிடையாது. சரி , அவன் காலச் சூழ்நிலை அப்படி. ஆனால் ஒரு கவிஞன் என்பவன் காலம் , மொழி , இனம் , மதம் போன்ற எல்லா அடையாளங்களையும் மீறியவனாக இருக்க வேண்டும்). நானோ மொழி விஷயத்தில் ரொம்பவும் பேஜார். நான்கைந்து மொழிகளோடு பரிச்சயம் இருந்தாலும் எந்த மொழியிலும் எழுதும் அளவுக்கு வணங்க மாட்டேன் என்கிறது புத்தி.

இதற்கு முன்பும் பல நண்பர்கள் இது போல் என்னை பாரதியோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். என்ன காரணம் என்றுதான் புரியவில்லை. புரியாத விஷயங்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதுவும் இன்று ஏப்ரல் முதல் தேதி வேறு.

***

விஷாலைப் போட்டு நொக்கி எடுத்து விட்டார்களாம். யாரையோ அழகி என்று சொல்லிவிட்டேனாம். ஜொள்ளு விடுவதற்கு அளவு இல்லையா , அது இது என்று கேட்டு அவனை சில நண்பர்கள் உண்டு இல்லை என்று பண்ணியிருக்கிறார்கள். எய்தவன் நான் இருக்க அம்பு மாட்டிக் கொண்டு விட்டது. அழகை ரசிப்பதற்குக் கூட இவ்வளவு பிரச்சினையா ? சரி

சாமிகளா , இனிமேல் யாரையும் அழகி என்று சொல்லவில்லை , போதுமா ?

***

இந்தியாவில் இன்னும் நடுவிரலை உயர்த்திக் காண்பிக்கும் வழக்கம் அவ்வளவாக புழக்கத்திற்கு வரவில்லை. நான் என் மோதிர விரல் பிரச்சினை பற்றி எழுதியிருந்தேன் அல்லவா ? என் நண்பர் கணேஷ் தன் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு , தனி கேபின் என்பதால் சற்று தைரியமாக தனக்குத்தானே நடு விரலை உயர்த்தி உயர்த்திப் பார்த்திருக்கிறார். ஆனால் அது ஒரு கண்ணாடி கேபின். எதிரே அமர்ந்திருந்த பெண் இதைக் கவனித்து விட்டு கணேஷிடம் வந்து "என் மீது உனக்கு ஆசை இருந்தால் அதை இப்படித்தான் சொல்வதா ? இடியட். சாயங்காலம் 8 மணிக்கு போன் பண்ணு. பாஷா போகலாம்" என்றாளாம். "உங்களால் என்னென்ன பிரச்சினை எல்லாம் வந்து சேருகிறது பாருங்கள்" என்று திட்டினார் கணேஷ்.

***

குஷ்வந்த் சிங்கின் சமீபத்திய ஜோக் ஒன்று:

ஜட்ஜ்மெண்ட் டே என்றால் எது தெரியுமா ?

ரக்ஷாபந்தனும் , வேலண்டைன் தினமும் ஒரே நாளில் வருவதுதான்.

***

எம். கோவிந்தனை அறிவீர்களா ? மலையாள இலக்கிய உலகின் மேதைகளில் ஒருவர். அவருடைய பாம்பு என்ற சிறுகதையைத் தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள். அவர் இங்கே சென்னையிலுள்ள சிந்ததிரிப்பேடையில்தான் வாழ்ந்தார். அவரை நான் அவரது அந்திமக் காலத்தில் பல முறை சந்த்தித்திருக்கிறேன். உலக இலக்கியமும் வரலாறும் கற்றறிந்த அவர்

மிகச் சாதாரணமான ஆனந்த் போன்ற எழுத்தாளர்களை எப்படி வளர்த்து விடுகிறார் என்றெல்லாம் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். இங்கே ஆனந்த் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். அவர் புத்திஜீவிகளால் பெரிதும் மதிக்கப் படுபவர். தத்துவார்த்தமாக எழுதுபவர் எனப் பெயர் எடுத்தவர். எந்த இலக்கிய சர்ச்சைகளிலும் ஈடுபட மாட்டார். மிக

முக்கியமாக , என் எழுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக மலையாளத்தில் அதிக அளவில் அறியப் பட்டுள்ள நிலையில் என் எழுத்தின் மீது மரியாதையும் , மதிப்பும் கொண்டவர். ஆனால் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆனந்தின் எழுத்து பிடிக்காது. அவருடைய ஆள்க் கூட்டம் , மரண சர்ட்டிஃபிகேட் போன்ற நாவல்களெல்லாம் சராசரி ரகத்தைச் சேர்ந்தவை.

என்னுடைய குணம் என்னவென்றால் என் எழுத்தை சிலாகிக்கிறீர்கள் என்பதற்காக நான் உங்கள் எழுத்தைப் பற்றிப் புகழ்ச்சியாகச் சொல்ல மாட்டேன். ஆனால் ஒருவர் என் எழுத்தை மலம் எனத் திட்டினாலும் அவர் எழுத்தை நான் அணுகுவதற்கு என் மீதான அவருடைய விமர்சனம் ஒருபோதும் தடையாக இருக்ககாது.

எம். கோவிந்தனும் நானும் ஒரு bi-lingual பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் போய் விட்டார்.

எனக்கு மலையாளம் தெரியாவிட்டாலும் எப்படி மலையாள இலக்கியத்தைப் படிக்கிறேன் என்றால் , ஒன்று , மொழிபெயர்ப்பு. ஆனால் எனக்குப் பிடித்த பல மலையாள எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பில் கிடைப்பதில்லை. எனவே , என்னுடைய மலையாள நண்பர்களை வைத்துக் கொண்டு அவர்களைப் படிக்கச் செய்து புரிந்து கொள்வேன். இப்படித்தான் ஒரு பெண் எனக்கு மலையாளம் படிப்பிக்கிறேன் என்று வந்தாள். முதலில் அவள் எடுத்த புத்தகம் என்ன தெரியுமா ? மலையாளத்தில் வெளியாகியுள்ள கொக்கோக சாஸ்திரம். அப்புறம் மலையாளமா கற்க முடியும் ? ( மேல் விபரங்களுக்கு ராஸ லீலாவைப் படிக்கவும்).

இப்படி மலையாள சாகித்யகர்த்தாக்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றி ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். உடனே கிளம்பினான் ஏ.கே.எம். "நீ பொய் சொல்கிறாய். நீ எம். கோவிந்தனை சந்திக்கவே இல்லை." நானோ எம். கோவிந்தனைச் சந்தித்ததற்கு சாட்சியாக போட்டோ எதுவும் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. "அது எப்படி அவ்வளவு தீர்மானமாகச் சொல்கிறாய் நான் அவரைச் சந்தித்ததில்லை என்று ?" அதற்கு ஏ.கே.எம். கேட்டான். "சரி , சிந்தாதிரிப் பேட்டையில் அவர் வீட்டுக்கு எப்படிப்

போக வேண்டும் , வழி சொல் ?"

" அடப் பாவி. யாராவது சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு வீட்டுக்கு வழி சொல்ல முடியுமா ? ஏதோ ஒரே கார் ரிப்பேர் பட்டறையாக இருக்கும். அந்தக் கடைகளுக்கு மேலே மாடியில் இருந்தது அவர் வீடு. பின்னால் கூவம்" என்றேன்.

" இதிலிருந்தே தெரிந்து விட்டது நீ அவரைச் சந்த்திததில்லை என்று. அவர் வீட்டு அடையாளமே வேறு."

உண்மையில் எனக்கு இங்கே மந்தைவெளியில் நார்ட்டன் சாலையில் என் வீடு உள்ள இடத்தை ஆட்டோக்காரரிடம் சொல்வதற்குள்ளாகவே போதும் போதும் என்றாகி விடும்.

ஒவ்வொரு முறையும் தப்புத் தப்பாகவே சொல்லுவேன். அதற்காக நான் என் வீட்டில் வசிக்கவில்லை என்று அர்த்தமாகுமா என்ன ?

" அது சரி சாரு , ஒன்று கேட்டால் நீ திட்டக் கூடாது" என்று ஒருநாள் ஆரம்பித்தாள் அவந்திகா.

" சே , சே...உன்னை எப்போது திட்டியிருக்கிறேன் ? தாராளமாகக் கேள்" என்றேன். (ச்சும்மா வசனம். எக்குத் தப்பாகக் கேட்டால் வாயில் என்ன வருகிறது என்றே பார்க்காமல் திட்டி விடுவேன். ' பிரபந்தம் , திவ்யப் பிரபந்தம் கேட்பது போல் இருக்கிறது ' என்று தலையில் அடித்துக் கொள்வாள் அவந்திகா).

" நிதானமாக இருக்கும் போதே இப்படி வழி சொல்லத் தடுமாறுகிறாயே ; தண்ணி அடித்து விட்டு எப்படி மிகச் சரியாக வீட்டுக்கு வந்து விடுகிறாய் ?"

" அதுதான் எனக்கும் 15 வருடங்களாகத் தெரியவில்லை. எல்லாம் பாபாவின் அருள்தான்" என்றேன்.

ஒருமுறை புதுச்சேரியில் வெங்கியின் கெஸ்ட் ஹவுஸிலிருந்து வெளியே வந்து ஆட்டோ பிடித்து "மந்தைவெளி" என்று சொன்னதாக மறுநாள் வெங்கி சொன்னான்.

சரி , அது என்ன ஏ.கே.எம் ? ஏதாவது புரிகிறதா ?

***

1.4.2008.


Source : www. charuonline.com

கேள்வி பதில்

கேள்வி பதில் என்று ஒரு பகுதியை ஆரம்பிக்கலாம் என்று தோன்றிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் பாபுராவ் பட்டேலின் ( 1904-82) கேள்வி பதில் பகுதியை மிக விருப்பமாகப் படிப்பேன். அவர் அந்தக் காலத்தில் இருந்த ஜன சங்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது அரசியல் கருத்துக்களைத் தவிர மற்ற எல்லா விதத்திலும் அவர் என்னை வெகுவாக் கவர்ந்தவராக இருந்தார். மிகத் தேர்ந்த ஜோதிடர். ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை மணந்து கொண்டார் ; அதற்குப் பிறகு ஒரு நடிகையை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். (ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்!) திரைப்பட விமர்சகர் ; இயக்குனர் ; பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் ; புகழ் பெற்ற பத்திரிகையாளர் , ஹோமியோபதி மருத்துவர் என்று பல பெருமைளைக் கொண்டவர் பாபுராவ் பட்டேல். 1935- இல் ஃபிலிம் இந்தியா என்ற சினிமா பத்திரிகையைத் துவக்கினார். பின்னர் இது மதர் இந்தியா என்ற அரசியல்

பத்திரிகையாக மாறியது. நான் என்னுடைய கல்லூரிப் பருவத்தில் மதர் இந்தியாவைத் தவறாமல் படித்து வந்திருக்கிறேன். அதில் அவருடைய கேள்வி பதில் பகுதி பக்கம் பக்கமாக வெளி வரும். அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்வி பதில்கள்:

கே: உங்கள் சிந்தனைகளைச் சேகரித்துக் கொள்வதற்காகத்தான் அதிகம் பேருடன் பழகுகிறீர்களா ?

ப: நான் குப்பை பொறுக்குபன் அல்ல. நான் ஒரு சிந்தனையாளன். என் சிந்தனை தன் சிறகுகளை விரித்து இந்த உலகமெங்கும் பறந்து செல்கிறது. அச்சிந்தனையோடு இணையான அலைவரிசையைக் கொண்டவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள் ; சிலர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். அந்த அலைவரிசையில் இல்லாதவர்கள் அதை இழந்து விடுகிறார்கள்.

கே: சினிமாவில் நுழைவதற்கு ஒரு சுலபமான வழி சொல்லுங்களேன் ?

ப: உங்கள் ஊரில் உள்ள மிக அழகான பெண்ணைப் பிடித்து அழைத்துக் கொண்டு சினிமா கம்பெனி பக்கம் செல்லுங்கள். இது தவிர , இன்னொரு வழியும் இருக்கிறது. அது கொஞ்சம் கடினமான வழி.

கே: நம் நடிகைகளில் எத்தனை பேர் கன்னிப் பெண்கள் ?

ப: கன்னித் தன்மை கொண்ட நடிகைகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. மேலும் , இந்த நவீன யுகத்தில் கன்னித் தன்மை என்பது ஒரு புராதன கால வஸ்துவாகி விட்டது. வேண்டுமானால் கிராமங்களில் போய் தேடிப் பாருங்கள் ; ஒருவேளை கிடைக்கலாம்.

பாபுராவ் பட்டேலின் சினிமா விமர்சனங்களும் , அரசியல் விமர்சனங்களும் மிகக் கூர்மையானவை. புகழ் பெற்ற இயக்குனர் V. சாந்தாராமின் நவ்ரங்க் ( 1959) படத்தைப் பற்றி பாபு ராவ் எழுதினார்: "இது ஒரு வயதான ஆளின் மென்ட்டல் மாஸ்டர்பேஷன்."

***

தமிழில் கேள்வி பதில் என்று எடுத்துக் கொண்டால் எனக்குப் பிடித்த பகுதி குமுதத்தின் அரசு பதில்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அரசு பதில்களை விரும்பிப் படித்து வருகிறேன். எஸ்.ஏ.பி.யை மிகவும் கூர்ந்து கவனித்து வந்தவன் நான். என் நண்பன் நிக்கியிடம் அடிக்கடி சொல்லுவேன் , என்னிடம் ஒரு வாரப் பத்திரிகையின் பொறுப்பு கொடுக்கப் பட்டால் அதை ஒரு வருட காலத்தில் என்னால் 5 லட்சம் பிரதிகள் அளவுக்குக் கொண்டு வர முடியும் என்று. அந்த அளவுக்கு எஸ்.ஏ.பி.யின் நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது ஒரு அலுவலகத்துக்கு தினசரி காலை 10 மணிக்குச் செல்லும் மனநிலையை இழந்து விட்டேன். எஸ்.ஏ.பி.யின் மறைவுக்குப் பிறகும் கூட அரசு பதில்களின் சுவாரசியம் குன்றாமல் இருந்து வருவது பாராட்டுகுரியதுதான்.

எனக்கு 14 வயது இருக்கும் போது அரசுவுக்கு ஒரு கேள்வியை அனுப்பி வைத்தேன். நான் எதிர்பாராத விதமாக அந்தக் கேள்வி பிரசுரமும் ஆகி விட்டது. அவ்வளவுதான். எங்கள் ஊரே என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டது. ஏனென்றால் , அந்த ஏடாகூடமான கேள்வியை என் சொந்தப் பெயரில் அனுப்பி வைத்திருந்தேன். என் சினேகிதர்களின் வீட்டில் எல்லாம் என்னை உள்ளே விடவே மறுத்தார்கள். அந்தச் சமயத்தில் என் அம்மா தான் என் பாதுகாப்புக்கு வந்தார்கள். "அவன் என்ன கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டான். அவர் ஒரு ஆண் பிள்ளைதானே ?" சமூகத்தில் ஆண் பிள்ளையாக இருப்பதன் அனுகூலத்தை அன்று நான் உணர்ந்தேன். நான் அரசுவிடம் கேட்ட அந்தக் கேள்வி இது தான்: "எனக்கு எப்போது பார்த்தாலும் செக்ஸ் உணர்வு அதிகமாகவே இருந்து கொண்டிருக்கிறது ; அது பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி , கோவில் கர்ப்பக்கிரகமாக இருந்தாலும் சரி. இதற்கு என்ன செய்யலாம் ?" எஸ்.ஏ.பி. என்ன பதில் சொன்னார் என்று ஞாபகம் இல்லை.

***

கேள்வி பதில் விஷயத்தில் சில எதிர்பார்க்காத இடங்களிலிருந்தெல்லாம் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. திரைப்படங்களில் நல்ல பாடல்கள் மட்டுமே எழுதக் கூடியவர் (ஆய்த எழுத்து) என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வைரமுத்து குமுதம் கேள்வி பதிலில் ரொம்பவே அசத்தி விட்டார். அயிரை மீன் குழம்பு வைக்கும் விதம் பற்றி அவர் எழுதியிருந்ததைப் படித்து அப்படியே எனக்கு நாவில் ஜலம் வந்து விட்டது. ஆனால் நான் பெரிதும் எதிர்பார்த்த பால குமாரன் பதில்கள் Horrible!

சுஜாதாவை விட்டு விடலாம். ஏனென்றால் அவர் எது எழுதினாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும்.

சரி , இப்போது அடியேனின் கேள்வி பதில் பகுதி:

அன்பு சாருவுக்கு

உங்கள் கட்டுரைகளை தினமும் இணையத்தில் வாசித்து வருகிறேன். பாலியல் குறித்த உங்கள் பார்வை மிகக் கூர்மையாக உள்ளது. இந்தியர்களின் வாழவின் சகல அம்சங்களிலும் அடக்கி வைக்கப் பட்ட காமமே தெரிகிறது என்பதைத் தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். நான் ஓஷோவை விரும்பி வாசிக்கக் கூடியவன். உங்கள் கருத்தும் ஓஷோவின் கருத்தும் பாலியல் விஷயத்தில் மிகச் சரியாகப் பொருந்துவதை கவனித்து வியந்திருக்கிறேன். சூ · பி தத்துவத்தையும் , வைணவத்தையும் ஆழ்ந்து படிப்பவர் நீங்கள். உங்கள் வாழ்வில் ஓஷோவின் தத்துவம் ஏதாவது பாதிப்பைச் செய்திருக்கிறதா ?

அன்புடன் ,

அருண்.

15 ஆண்டுகளுக்கு முன்பு என் திருச்சி நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் மாணிக்கம்தான் எனக்கு ஓஷோவை எனக்கு அறிமுகம் செய்தனர் , ஒரு கேஸட்டின் வழியாக. முதலில் அவர் குரலைக் கேட்டு அசந்து போனேன். அப்படியே கேட்போரை வசியம் செய்யக் கூடிய குரல். அடுத்து அவரது ஆங்கில உச்சரிப்பு. ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் எந்த ஆங்கில உச்சரிப்பைக் கிண்டல் செய்வார்களோ அதே உச்சரிப்பு. ஆனால் அவர் சொல்லும் விஷயம்...அப்படியே என் மனதில் நான் என்ன நினைக்கிறேனோ அதை அவர் பேசிக் கொண்டிருந்தார். அன்றே நான் ஓஷோவைப் படிப்பதையோ , கேட்பதையோ விட்டு விட்டேன். ஏனென்றால் அவரைப் படித்தால் எனக்கு நானே plagiarist என்று தோன்றும். ஆனால் இப்போது , குறைந்த பட்சம் , எனக்கு மட்டுமாவது நான் ப்ளேஜியரிஸ்ட் அல்ல என்று தெரியும் அல்லவா ? இதே போல் ஸில்வியா ப்ளாத்தையும் நான் படிப்பதில்லை. ஏனென்றால் , என் மனதில் என்ன ஓடுகிறதோ அதே வார்த்தைகளைத்தான் அவரும் எழுதி வைத்திருக்கிறார்.

ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார் என அறியப் பட்டது ஒரு சோகம். என்னிடம் ஒரு கட்டுரை கேட்ட ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் தயங்கிய குரலில் "கட்டுரையில் செக்ஸ ¤ ம் குடியும் வேண்டாம்" என்று கூறினார். வருத்தமாக இருந்தது. என்னைப் பற்றி அவர் மனதுள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தையே அவர் என்னிடம் தெரிவிக்கிறார். உண்மையில் அந்த பிம்பத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஓஷோ ஒரு தத்துவவாதி. நான் ஒரு எழுத்தாளன். அவ்வளவுதான் வித்தியாசம்.

30.3.2008.

Source : www.charuonline.com


கமலும் நானும்

கடந்த முப்பது வருடங்களாக கமல்ஹாசனை கூர்ந்து கவனித்து வருகிறேன். அவருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருந்து வருவது போலவே தோன்றிக் கொண்டிருக்கும். எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் என்று ஒரு நண்பர் உண்டு. அவர் ஒரு நாள் சொன்னார். "நேற்று டீவில கமல் பேட்டி போட்டான். என்ன சாரு , அந்த கமல் உங்களை மாதிரியே பேசுறான். உடனே டக்னு சேனலை மாத்திட்டேன்." அவர் நேற்று என்று குறிப்பிட்ட தினம் தீபாவளி நாள். அந்த நன்னாளில் கமல் சில விஷயங்களை (உண்மைகளை)

பச்சையாகச் சொல்லிவிட்டாராம். இது போல் பல சந்தர்ப்பங்களில் பல நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். (அதுசரி , சினிமா நடிகர்களை ஏன் மக்கள் அவன் , இவன் என்று ஒருமையில் பேசுகிறார்கள் ?)

கமலோடு எனக்கு கடிதப் பரிமாற்றம் உண்டு. தொலைபேசியிலும் பேசியிருக்கிறேன். கார்த்திக் அப்போது சிறு பையன். கைத்தொலைபேசி வந்திராத நேரம். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் "டாடி , கமல்னு ஒருத்தர் போன் பண்ணினார்" என்றான். எனக்குப் புரிந்து விட்டது. "டேய் , அவர் ஒருத்தர் இல்லடா. கமல்ஹாசன். ஆக்டர்" என்றேன். அவன் அதற்கு , பாமரன் என் எழுத்துக்களை எவ்வாறு எதிர் கொள்கிறாரோ அதே தினுசில் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

மகாநதியை வெகுவாக சிலாகித்து 1993- இல் கணையாழியில் ஒரு நீண்ட விமர்சனம் எழுதியிருந்தேன். அதை கமல் படித்திருப்பாரோ இல்லையோ என்று ஒரு அவா உசாவியது என்னுள். பிறகு அந்த அவாவை ஒரு ஓரம் கடாசி விட்டேன். ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய அந்த அவாவுக்கு பதில் கிடைத்தது. என் நண்பர் தியோடர் பாஸ்கரன் தமிழில் வெளி வந்த சினிமா பற்றிய முக்கியமான கட்டுரைகளை ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார். அதில் மகாநதி பற்றிய என் கட்டுரையும் இருந்தது. ஒருநாள் தியோடர் பாஸ்கரன் போன் செய்து "உங்கள் கட்டுரை நன்றாக இருந்ததாக கமல் சொன்னார்" என்றார். அடிக்கடி கமல் வருத்தப் படுவதுண்டு , எழுத்தாளர்களுக்கும் திரையுலகக் கலைஞர்களுக்குமான தூரம் அதிகமாக இருக்கிறது என்று. ' அடக் கடவுளே , அந்த தூரம் 15 ஆண்டுகளா! ' என்று நினைத்துக் கொண்டேன். குருதிப் புனலைப் பற்றி நான் எழுதியிருந்த கடுமையான விமர்சனத்தை அவரிடம் காட்டியவர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டார்கள். பொதுவாக அதுதான் நம்மவர்கள் வழக்கம். (தியோடர் பாஸ்கரன் மட்டும் அந்த சினிமா புத்தகத்தைத் தொகுத்திருக்காவிட்டால் இன்னமும் கமல் என்னுடைய மகா நதி விமர்சனத்தைப் படித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது).

சினிமா நடிகர் என்றால் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அலசுவது 6 கோடித் தமிழ் மக்களின் வழக்கம். அதன்படி , நாம் விரும்புகிறோமோ இல்லையோ எல்லா நடிகர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நம் காதுகளில் வந்து விழும் செய்திகள். அப்படி , கமலைப் பற்றி விழுந்த விஷயங்கள் பலவும் என் வாழ்க்கைச் சம்பவங்கள் பலவற்றை ஒத்திருந்தன.

ஆனால் கமலை நான் நேரில் சந்த்திததில்லை. அப்படிச் சந்திக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் சமீபத்தில் மிக துரதிர்ஷடமான ஒரு இடத்தில் நிகழ்ந்தது. 27-2-2008 அன்று ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் சுஜாதா வீட்டில் நின்று கொண்டிருந்தேன். சுஜாதாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்தது. சுஜாதா இப்படி கண்ணாடிப் பேழையில் வைக்கப் பட்டிருக்கும் போதா இவர் வீட்டுக்கு வர நேர வேண்டும் என்ற வருத்தம் மேலிட்டது. ஏனென்றால் கடந்த ஒரு வருட காலமாக இந்த வீட்டைக் கடந்துதான் தினசரி காலை ஐந்தரை மணி அளவில் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குச் சென்று கொண்டிருந்தேன். தற்சமயம் யோகாவில் இறங்கி விட்டதால் வாக்கிங் செல்வதில்லை. தினமும் ஐந்து மணிக்குக் கிளம்பி

ராமகிருஷ்ணா மடம் சாலை வழியே சென்று மடத்தின் வெளியிலேயே நின்று (காலில் ஷூ ) பரமஹம்சருக்கு ஒரு ஸல்யூட் அடித்து விட்டு , நேரே சென்று இடப்பக்கச் சாலையில் திரும்பி நடந்து பாபா கோவிலின் வெளியே நின்றபடி ஓரிரு நிமிடம் தியானித்து விட்டு , நேரே போய் வலது பக்கம் திரும்பி அங்குள்ள குடிசைப் பகுதியைக் கடந்து இடப்பக்கம் திரும்பினால் சுஜாதா வசிக்கும் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை. ( 15 ஆண்டுகளுக்கு முன்னால் நான் மந்தைவெளி கல்லறைத் தெருவில் - செய்ன்ட் மேரீஸ் தெரு - இருந்தபோது இந்தப் பக்கம் அடிக்கடி வருவதுண்டு. அப்போது இந்தக் குடிசைப் பகுதியின் பெயர் காட்டு நாய்க்கன் குடியிருப்பு என்பதாக இருந்தது) அந்த சுந்தரம் சாலையைக் கடந்தால் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வரும். (என் வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் உண்டு!) அதைத் தொடர்ந்து வருவது நாகேஸ்வர ராவ் பூங்கா என்ற குட்டி சொர்க்கம்.

ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையைக் கடக்கும் போதெல்லாம் சுஜாதாவைப் பற்றிய ஏதாவது ஒரு நினைவு ஓடும். நமக்கு மிகப் பிடித்த ஒரு தமிழ் எழுத்தாளனோடு நாம் ஏன் நேரில் பழகாமால் இருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ஆனால் சுஜாதாவே இதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார். ஒரு நல்ல வாசகன் அவனுக்குப் பிடித்த எழுத்தாளனைச் சந்திக்க மாட்டான்.

கண்ணாடிப் பேழைக்குச் சற்றுத் தள்ளி நானும் கனிமொழியும் நின்று பேசி கொண்டிருக்கிறோம். ம்ஹூம். பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தவறு. இம்மாதிரி இடங்களில் என்ன பேசுவது ? வெறுமனே நின்று துக்கத்தைத் தின்று கொண்டிருந்தோம். அப்போது மதன் வந்தார். கை கொடுத்து என் பெயர் சொன்னேன். "நன்றாகத் தெரியும் ; சற்று முன்பே உங்களைச் சந்ததித்து விட்டேன் , கண்களால் ; இப்போதுதான் கை கொடுக்கிறேன்" என்று அவர் சொன்னதை ரசித்தேன். திரும்பினால் கமல். என் எதிரே நின்று கனிமொழியிடம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முகமன் கூறிப் பேசுவதும் செயற்கையாக இருக்கும். பேசாமல் இருப்பதும் செயற்கையாக இருக்கும். இரண்டாவது செயற்கையையே தெரிவு செய்தேன். கண்களும் சந்த்தித்துக் கொள்ளவில்லை.

இதற்கடுத்த இரண்டாவது நாள் சுஜாதா இரங்கல் கூட்டம் நாரத கான சபாவில் நடந்தது. நிறைய பேர் பேசினர். நானும் பேசினேன். எனக்குப் பின்னர் பேசிய கமல் "சாரு நிவேதிதா பேசியதையே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆரம்பித்து மேலும் சில விஷயங்களைச் சொன்னார். எனக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவன் ஞாபகம் வந்தது.

***

இரண்டு மாதங்களுக்கு முன்னால் நிக்கியும் , அவர் தோழி ஒருவரும் , பாலு அய்யேயெஸ்ஸும் பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் அமர்ந்திருந்தனர். பின்னர் அங்குள்ள தக்ஷண் ரெஸ்தொராந்த் சென்றனர். நிக்கியும் தோழியும் பேசிக் கொண்டிருக்கும் போது பாலு என்ன செய்வான் , பாவம். நானும் இல்லை. சுற்றும் முற்றும் பராக்குப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். நாங்கள் எப்போதும் அமர்வது வலப்பக்க மூலை என்பதால் வலப் பக்கம் திரும்பினால் வெறும் சுவர்தான் தெரியும் என்பதால் இடப்பக்கம் திரும்பியிருக்கிறான். இடப்பக்கம் இரண்டு இளம் பெண்கள். இளம் பெண்கள் என்றால் 17, 18 வயது டீன் ஏஜ் பெண்கள். இவன் வெறித்து வெறித்துப் பார்க்க , ஒரு பெண் இவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தி , சைகையிலேயே ' என்ன ?' என்று கேட்டிருக்கிறாள். உடனே எக்கச்சக்கமாக மிரண்டு போன பாலு , இந்தப் பக்கம் திரும்பி விட்டான். ஆனால் எவ்வளவு நேரம் சுவரையே பார்த்துக் கொண்டிருப்பது ? திரும்பவும் இடப்பக்கம். திரும்பவும் அந்தப் பெண் - அதே பெண் - பாலுவைப் பார்த்து புருவத்தை உயர்த்த , திடீர் துணிச்சல் பெற்ற பாலுவும் புருவத்தை உயர்த்தியிருக்கிறான். அதற்கு அந்தப் பெண் திரும்பவும் புருவத்தை உயர்த்த - எவ்வளவு நேரம்தான் புருவத்தைப் புருவத்தை உயர்த்திக் கொண்டிருப்பது , புருவம் வலிக்காதா ? - பாலு நேரடியாக அந்தப் பெண்ணீடம் "இங்கே பாருங்கள் ஸிஸ்டர்...இந்த ரெண்டு பேர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு போர் அடிக்கிறது. நீங்கள்தான் கொஞ்சம் என் மீது இரக்கப் பட்டு இங்கே வந்து உட்காருங்களேன்" என்று கூப்பிட அந்த இரண்டு பெண்களும் மகா பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்து விட்டு இந்த இடத்துக்கு வந்து விட்டனர் (ஸிஸ்டர்தான் அந்த நகைச்சுவை). அப்போதுதான் அவர்கள் சாப்பிட்டும் முடித்திருந்தார்கள். (அவர்கள் சாப்பிட்டதற்கு அவர்கள்தான் பைசா கொடுத்தார்கள் என்றார் நிக்கி).

உடனே எல்லோரும் பல காலம் பழகியதைப் போல் பழக ஆரம்பித்து விட்டார்கள். இரண்டு பேரில் ஒருத்தியின் பெயர் அங்கிதா. கிழக்காசிய நாடு ஒன்றைச் சேர்ந்த தமிழ்ப் பெண். சற்று பூசினாற் போன்ற தேகம். வெரி செக்ஸி. இரண்டாமவள் குஜராத்தி சேட் வீட்டுப் பெண். அல்கா. இரண்டு பேரும் இங்கே ஒரு கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறார்கள். இருவருமே சொன்னது , நிக்கியையும் பாலுவையும் போன்ற அருமையான , இனிமையான நபர்களைத் தங்கள் வாழ்விலேயே பார்த்ததில்லை.

மறுநாள் பாலு ஈ.சி.ஆர். ரோட்டில் ஏதோ வேலையாக காரில் சென்று கொண்டிருக்கிறான். காலை பத்து மணி. அங்கிதாவிடமிருந்து போன். எங்கே இருக்கிறீர்கள் என்றதும் சொல்லியிருக்கிறான். "அடடா , எங்களிடமும் சொல்லியிருக்கலாம் அல்லவா ? இங்கே நாங்கள் சும்மாதானே போர் அடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் ?" இவன் பதிலுக்கு மதியம் கூப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டான். மதியம் போன். அங்கிதா. "ஓ , சங்கிதா (பாலுவுக்கு அங்கிதா என்றெல்லாம் சொல்ல வராது) , இப்போ நான்

கொஞ்சம் சரக்கு சாப்பிட்டுவிட்டேன். ஈவ்னிங் கூப்பிடுகிறேன்." மாலையும் அங்கிதாவிடமிருந்து போன். "அட்டா , சங்கிதா...இப்போ சரக்கு கொஞ்சம் ஜாஸ்தியாப் போய்டுச்சு...நாளைக்குக் கூப்பிடுறேன்."

சொன்னபடி மறுநாள் சந்த்தித்திருக்கின்றனர். பார்க் ஷெரட்டன். வெஸ்ட்மின்ஸ்டர். அந்தப் பெண்களுக்குக் குடிக்கும் பழக்கம் இல்லை. (ஆச்சரியம்). அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடல் இது.

சங்கீதா நிக்கியிடம் கேட்கிறாள். "அந்த லேடி யார் , உங்கள் மனைவியா ?"

" ஐய்யய்யோ , அந்தப் பெண்ணுக்கு 25 வயசுதான் இருக்கும். என் வயசு 50. அவள் எப்படி என் மனைவியாக இருக்க முடியும் ?"

" என்னது , உங்கள் வயது ஐம்பதா , நம்பவே முடியவில்லையே ?"

" என் மகன் வயசே 25. வேலையில் இருக்கிறான்."

" அடடா , அப்போ அவனையே நாங்கள் · ப்ரண்ட்ஸா வச்சுக்கிறோம். அவன் போட்டோவைக் காட்டுங்கள். உங்கள் செல் போனில் இருக்கும்தானே ?"

" சீ...சீ..என் வில்லன் போட்டொவை நானே எப்படி வைத்திருப்பேன் ?"

" ஓ காட்...இந்த அளவுக்கு நகைச்சுவையாகப் பேசும் ஆட்களை நாங்கள் பார்த்ததே இல்லை."

இதையெல்லாம் கேட்டுக் கேட்டு என் நவ துவாரத்திலும் புகை வர ஆரம்பித்தது. ஒரு அளவு இல்லையா ? 18 வயதுப் பெண்களா தோழிகள் ?

***

சென்ற வாரத்தில் ஒரு நாள் நானும் , பாலுவும் , நிக்கியும் வெஸ்ட்மின்ஸ்டரில் அமர்ந்திருந்தோம். அப்போது அந்தப் பெண்களைப் பற்றிய கதை ஓடிக் கொண்டிருந்தது. நான் ' பேரர் ' ஆறுமுகத்திடம் ஒரு பேனாவும் காகிதமும் கேட்டு இதைக் குறித்துக் கொண்டேன். (எனக்கு ஞாபக மறதி அதிகம்). Dakshin. Two girls. Baalu & Nikki. இவ்வளவுதான் குறிப்பு. இது போதும். மற்றதையெல்லாம் ஞாபகத்திலிருந்து அள்ளிவிடலாம். அப்போது வந்தார்கள் அந்த இரண்டுப் பெண்களும். நான் என் வழக்கமான இடத்தை விட்டு வேறொரு நாற்காலிக்கு மாறினேன்.

என் இடத்தில் அம்ர்ந்த அங்கிதா , அந்த இடத்தில் இருந்த குறிப்பேட்டைப் பார்த்து விட்டு "இது என்ன டூ கேர்ள்ஸ் ? தக்ஷண் ? யார் அது நிக்கி ?" என்று எங்களைப் பார்த்துக் கேட்க , நாங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டு பேச்சை மாற்றினோம். நிக்கி என்னை ஒரு விதமாகப் பார்த்தான். ' என்னென்ன பிரச்சினையெல்லாம் கொடுக்கிறாய் பார்த்தாயா ?' என்பது போல் இருந்தது அவன் பார்வை.

அவர்கள் இருவரும் என்னை அங்கிள் என்று அழைக்காமல் , சாரு என்று பெயர் சொல்லி அழைத்தது என் தவப்பயன் என்றுதான் என்று சொல்ல வேண்டும்.

அப்போது அந்த அல்கா என்னைப் பார்த்து "நீங்கள் கமல் போலவே இருக்கிறீர்கள்" என்று சொன்னாள். ஒரு முறை அல்ல. நான்கைந்து முறை சொன்னாள். கிளம்பும் போது அவர்கள் ரெஸ்ட் ரூம் சென்றிந்த தருணத்தில் நிக்கி என்னிடம் சொன்னான். "அந்த அல்கா என்ன , ஒரேயடியாக உளறுகிறாள் ?" " என்ன ?" " உன்னைப் போய் கமல் , கமல் என்கிறாள். இடியட். நீ சாதாரணமாக நடக்கும் போதே குடித்து விட்டு நடக்கிறாயா , குடிக்காமல் நடக்கிறாயா என்று தெரியாது. அப்படி நடப்பாய். உன்னைப் போய் கமல் என்கிறாள். லூஸு ..."

நிக்கி இப்படிச் சொன்னது ஒரு பழி வாங்குதலுக்காகத்தான். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

***

29.3.2008.


Source : www.charuonline.com

ஹெல்த் எப்படி இருக்கு ?

on Monday, March 30, 2009

எஸ்.ராமகிருஷ்ணன் மீது எனக்குப் பொறாமையாக உள்ளது. எப்படி இந்த மனிதரிடம் பேசும் எல்லா மனிதர்களும் அற்புதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று. இவர் காசிக்குச் சென்றாலும் சரி, கரந்தட்டாங்குடி சென்றாலும் சரி, இவரிடம் பேசும் மனிதர்கள் அற்புதம் அற்புதமாகவே பேசுகிறார்கள். ஆனால் என் கதை ?

அது எப்படித்தான் தேர்ந்தெடுத்து என்னிடம் வந்து சேர்கிறார்களோ தெரியவில்லை. நேற்று என் தோழி ஆனந்தி கேட்டாள். “ விஜய் டிவியில் உங்களைப் பார்த்தேன். அவந்திகா ரொம்ப அழகு. நீங்கள் ஒன்றும் தியாகம் செய்து விடவில்லை ” இந்த் ஆனந்தி எனக்கு 30 போன் செய்தால் ஒரே ஒரு முறை அவள் போனை எடுப்பேன்.

“ நீ என்ன பொம்பளை ஜெயமோகனா ? ” என்று குலைத்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டேன்.

இன்று காலை மீண்டும் பேசியவள் தன்னை இதுவரை யாருமே இவ்வளவு மோசமாக திட்டியதில்லை என்று கூறி மேலும் சிலது சொன்னாள். எனக்கே ஜெயன் மீது பாவமாகப் போய்விட்டது. பொதுவாக நான் பேசுவதே இல்லை. அவந்திகாவிடம் கூட ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசுவேன். (கொலப் பசி பசிக்குது; சீக்கிரம் கவனிம்மா)

எனக்கு தொலைபேசி அழைப்புகளும் அவ்வளவாக வருவதில்லை. சில நாட்களில் ஒன்றிரண்டு அழைப்புகள் கூட வராது. திடீரென்று யோசித்துப் பார்ப்பேன். ‘ காலையிலிருந்து நாம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அல்லவா ? ‘ என்று. இப்படியே பல தினங்கள் செல்லும், ஒரு வார்த்தை பேசாமல்.

இது எனக்குப் பிடித்திருக்கிறது. அதுவும் குறுஞ்செய்தி வசதி வந்தபிறகு எப்போதாவது பேசும் மனிதர்கள் கூட குறுஞ்செய்தியே அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

இந்தியர்கள் அதிகம் பேசுகிறார்கள். அதிலும் மலையாளிகளை இந்த விஷயத்தில் யாருமே அடித்துக் கொள்ள முடியாது. ஒருமுறை பாலக்காட்டிலிருந்து என் நண்பர் ஒருவர் ஆஸ்துமா காரணமாக மூச்சு விட முடியாமல் போய் அவசரமாக ‘ஐக்யூ ’ வில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அத்தகவலை எனக்குத் தெரிவிக்க போன் செய்து 10 நிமிடம் பேசினார். ஏகேஎம் அதிகம் பேசுவதற்குக் கூட இதுதான் காரணம் என்று தோன்றுகிறது. ஏகேஎம் பற்றிப் பிறகு சொல்கிறேன்.

நான் ஆட்டோவில் செல்பவனாதலால் இந்த ஆட்டோ டிரைவர்களின் பேச்சினால் வேறு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். என் முகத்தைப் பார்த்தாலே பேச வேண்டும் என்று தோன்றும் போலிருக்கிறது. நேற்று ஒரு ஆட்டோக்காரர் ‘ அறுபத்து மூவர் விழா ‘ வில் அவருடைய ஸ்டாண்டில் என்னென்ன அய்ட்டங்கள் சமைத்து மக்களுக்கு வழங்கினார்கள் என்றும், அடுத்த ஸ்டாண்டில் என்னென்ன அய்ட்டங்கள் சமைத்து வழங்கினார்கள் என்றும் நான் செல்லுமிடம் சேரும் வரை விலாவரியாக விளக்கிக் கொண்டு போனார். (மயிலையில் அறுபத்து மூவர் விழா அன்று யாரும் வீட்டில் சமைக்க மாட்டார்கள். மயிலை முழுவதும் மூலைக்கு மூலை அன்னதானம் நடந்து கொண்டிருக்கும்).

இவருடைய ஸ்டாண்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை எல்லாம் போட்டிருக்கிறார்கள். மாலையில் சர்பத். கூட பிஸ்கட். ஒரு ஐயரை வைத்தே சமைத்திருக்கிறார்கள். அந்த ஐயரின் பெயர் கூட சொன்னார். எனக்கு மறந்து தொலைந்து விட்டது.

ஆனால் என்ன இருந்தாலும் அடுத்த ஸ்டாண்டில் போட்ட அய்ட்டங்கள்தான் வெகு அருமையாக இருந்ததாம். அவர்கள் பிரிஞ்ஜி, வாங்கிபாத், பிஸிபேளாபாத் போன்ற அரிதான அய்ட்டங்களைத் தயாரித்திருக்கிறார்கள். மேற்கண்ட சப்ஜெக்ட் பற்றி அரை மணி நேரம் பேசி விட்டு பின்னர், இந்த ஆண்டு அறுபத்து மூவர் விழா பங்குனியின் ஆரம்பத்திலேயே வந்து விட்டதென்றும், அறுபத்து மூவர் விழா மட்டுமல்ல, ஈஸ்டர், தீபாவளி போன்ற பண்டிகைகள் கூட முன்கூட்டியே வந்து விட்டதென்றும் ஆச்சரியத்துடன் சொன்னார். அதை விட ஆச்சரியத்துடன் இந்த ஆண்டு ஃபெப்ருவரியில் 29 ஆம் தேதியும் வந்தது என்றார். ” எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்குல்ல சார் ? “ என்று அவர் காலம் ( Time ) பற்றி உரையாற்ற ஆரம்பித்த போது என் இடம் வந்து விட்டது.

என் மாமனாரின் சுப ஸ்வீகாரத்துக்காக முந்தா நாள் சின்மயா நகர் சென்ற போது - ஒரு மணி நேர ஆட்டோ பயணம் – வேறொரு ஆட்டோக்காரர் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்.

ஏதேதோ சொல்கிறார்; ஏதேதோ பேசுகிறார். வாயை மூடவே இல்லை. பேச்சு. பேச்சு. பேச்சு. ட்ராபிக் பற்றி பேச்சு. சென்னை நகர வெய்யில் பற்றி பேச்சு. அரசியல்வாதிகளின் ஊழல் பற்றி பேச்சு. ( இந்த சப்ஜெக்ட் பற்றி பேசாத ஆட்டோகாரரே கிடையாது என்று சொல்லலாம் ).

எனக்கு மண்டையில் ஆயிரம் வண்டுகள் பறப்பது போல் இருந்தது. ஒரு கட்டத்தில் ‘ ம் ‘ போடுவதே ஏதோ 100 கிலோ எடையை ‘ தம் ‘ கட்டி தூக்குவது போல் இருந்தது.

ஒரு கட்டத்தில் ‘ ம் ‘ கொட்டுவதை நிறுத்தி விட்டு கைத்தொலைபேசியில் பழைய குறுஞ்செய்திகளில் தேவையில்லாததை ‘ டெலீட் ‘ செய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனாலும் ஆட்டோக்காரர் விடாமல் பேசிக் கொண்டுதான் இருந்தார் – நான் சின்மயா நகர் சென்று சேரும் வரை.

ஒரு நாள் ஈரோட்டிலிருந்து ஒரு அன்பர் என்னைப் போனில் அழைத்தார். அழைத்தவரை எனக்கு முன்பின் தெரியாது. என் எழுத்தைப் படித்துவிட்டு என்னுடன் பேச வேண்டும் போல் தோன்றியிருக்கிறது. எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து விட்டார். சரி. என்ன பேசினார் தெரியுமா ?

“உங்கள் இயற்பெயர் என்ன சார் ? “

“இயற்பெயரா ? என்னை எல்லோரும் சாரு என்றுதான் அழைக்கிறார்கள். அது தான் என் இயற்பெயர் “ என்றேன்.

” அது எப்படி சார் ? உங்கள் அப்பா அம்மா வைத்த பெயர் அதுவா ? ”

” அம்மா வைத்த பெயர் வேறு; அப்பா வைத்த பெயர் வேறு .... “

(அப்பா வைத்த பெயரை நிச்சயமாக வெளியே சொல்ல முடியாது; உதயசூரியன்)

” ஓ.... ஆனாலும் இயற்பெயர் என்று ஒன்று இருக்க வேண்டுமே சார்? ”

“இல்லை. பெயரை மாற்றிக் கொண்டு விட்டேன். எனக்கு வரும் செக் கூட சாரு நிவேதிதா என்ற பெயரில் தான் வருகிறது..... ”

“சரி சார்..... இதற்கு முன்னால் ஒரு பெயர் இருந்திருக்க வேண்டுமே....அது தான் இயற்பெயர்... அந்த இயற் பெயர் என்ன ? ”

“இதோ பாருங்கள் மிஸ்டர்.... அந்த இயற்பெயர் உங்களுக்கு எதற்கு ? “

“இல்லை சார்.... தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு ஆர்வம். ”

“அதைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு என்ன ஆகப் போகிறது ? ”

“உங்கள் எழுத்து மீதுள்ள ஆர்வம்தான் சார் காரணம்.... ”

“அப்படியானால் சாரு நிவேதிதாதான். அது தான் என் இயற்பெயர் “

“சார்.... என்ன சார் இது? உங்கள் அம்மா அப்பா அப்படித்தான் உங்களை அழைப்பார்களா ? ”

“என் அம்மா, அப்பாவை நான் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் பார்ப்பது வழக்கம். அதிலும் என் அம்மா இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அப்பா கூப்பிடும் பெயர் உங்களுக்கு எதற்கு ? ”

-இப்படியே இயற்பெயர் என்ற அந்த சனியன் பிடித்த விஷயத்தை பற்றியே 10 நிமிடம் நடந்தது உரையாடல். கடைசிவரை அவர் கேட்டதை நான் சொல்லவில்லை.

5 நிமிடம் கழித்து மீண்டும் அவரே போன் செய்தார்.

“சார், கண்டு பிடித்து விட்டேன். உங்கள் இணய தளத்தில் அறிவழகன் என்று போட்டிருக்கிறதே, அது தானே உங்கள் இயற்பெயர் ? ”

இதற்கு அடுத்து ஐந்து நிமிடம் போல் என் அப்பாவையும், இயற்பெயர் என்ற விஷயத்தையும், அறிவு அழகு போன்ற விஷயங்களையும் திட்டு திட்டு என்று திட்டித் தீர்த்தேன்.

பிறகு, அந்த நம்பரை ‘ ஸேவ் ’ செய்து அதில் ‘ டார்ச்சர் ‘ என்று குறித்து வைத்திருக்கிறேன்.

வேறொரு வகையான டார்ச்சர் இருக்கிறது. ஒரு நாள் ஒரு அன்பர் தொலைபேசியில் அழைத்து “ ஹெல்த் எப்படி இருக்கு ? ” என்றார்.

“என் ஹெல்த்துக்கு என்ன பிரச்சினை? ” என்று சூடாக கேட்டேன்.

‘ போன் செய்து இப்படி என்னுடைய ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறார்களே ‘ என்ற கோபம் ஏறியது.

“இல்லை சார். சர்ஜரி செய்திருக்கிறீர்களே, அதனால் கேட்டேன் ”

“சர்ஜரி செய்து இரண்டு வருடம் ஆகிறது. இப்போது என்ன அதற்கு ? ”

“இல்லை சார்....உஷாராக இருக்க வேண்டுமே, அதனால் கேட்டேன் “

அவருடைய நண்பர் ஒருவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம்; அதற்குப் பிறகு எப்போதுமே ரொம்ப கவனமாகத்தான் இருக்கிறாராம். அவர் கூறிய விஷயம் கவனம் அல்ல; மரண பயம்.

நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் பேர் இருதய அறுவை சிகிச்சை செய்தவுடன் ஆளே மாறிப் போய் விடுகிறார்கள். எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குகிறார்கள். பால குமாரனின் கேள்வி பதிலைப் பாருங்கள். மனிதர் 100 வயதைத் தாண்டிய – ஏதோ ஒரு படு பயங்கரமான நோயினால் தாக்குண்டவரைப் போல் தன் தினசரி வாழ்வு பற்றி பதில் சொல்கிறார்.

நான் அந்த அன்பரிடம் சொன்னேன். எனக்கு இதயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உடம்பில் கொழுப்பு கூடி ரத்தக் குழாயை அடைத்து விட்டதால் வேறு ஒரு ‘ வழி ‘ செய்திருக்கிறார்கள். இனிமேல் நான் கொழுப்பு கூடிய பொருட்களை சாப்பிடக் கூடாது. அவ்வளவுதான்.

இதை எவ்வளவு விளக்கியும் அவருக்குப் புரியவில்லை. ஏதோ ஒரு எய்ட்ஸ் நோயாளியிடம் பேசுவது போலவே பேசிக்கொண்டிருந்தார். நான் இம்மாதிரி சமயங்களில் பொதுவாக இணைப்பைத் துண்டித்து விடுவேன். ஆனால் அன்றைய தினம், இது எவ்வளவு தூரம் தான் போகிறது, பார்த்து விடுவோம் என்ற நிலையில் இருந்தேன். அரை மணி தூரம் சென்றது அந்த உரையாடல்.

பேசி முடித்ததும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். ‘மற்றவர் மீது அக்கறை காட்டுகிறோம் ’ என்ற நினைப்பிலேயே மற்றவர்களை எப்படி சித்ரவதைக்கு ஆளாக்குகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் ஒரு திருமண விருந்தின் போது சிக்கனும் சப்பாத்தியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த என் மைத்துனர் ஏதோ தீயை மிதித்து விட்டவரைப் போல் பதறிப் போய் “ நான் வெஜ்ஜெல்லாம் சாப்பிடலாமா? ” என்று அலறினார்.

பிறகு அவரும் மேற்கண்ட ஹெல்த் லெக்சரை அரைமணி நேரம் கொடுத்தார்.

நான் சொன்னேன், “ தயிர், ஆவக்காய் ஊறுகாய், வடாம், அப்பளம், மூன்று வேளையும் சோறு, நெய் போன்ற விஷயங்கள் தான் ஆபத்தானவை. சிக்கன் அல்ல ”

உடல் நலம் பற்றி மக்கள் பலவிதமான தவறான நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு இப்படி என்னைப் போன்ற ஆத்மாக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நடிகர் குடிக்க மாட்டார்; சிகரெட் புகைக்க மாட்டார். காப்பி, டீ கூட கிடையாது. அவரும் நானும் ஒரு நாள் போட் க்ளப்பில் அவர் காரினுள் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு பேரும் சாப்பிடுவதற்கு அவர் ஐஸ்கிரீம் வாங்கி வந்திருந்தார். அதில் கால் கிலோ அளவுக்கு போட்டிருந்தது முந்திரிப் பருப்பு.

ஒரு ஆஃப் பாட்டில் பிராந்தி குடித்திருந்தால் கூட அவ்வளவு கொழுப்பு என் உடம்பில் சேர்ந்திருக்காது. ஒரு வாரத்திற்கு கடும் பத்தியம் கிடந்து அந்த முந்திரிப் பருப்பை சமன் செய்தேன்.

யார் பேச ஆரம்பித்தாலும் ‘ஹெல்த் எப்படி இருக்கு? ’ என்ற டார்ச்சருடன் தான் ஆரம்பிக்கிறார்கள். எப்படி இவர்களை தவிர்ப்பது என்று தெரியவில்லை.

பேச்சு மட்டுமல்ல; சமயங்களில் பிறர் விடும் கொட்டாவி கூட பிரச்சினையாக இருக்கிறது எனக்கு. எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பின் இரண்டு வாட்ச்மேன்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதில் நைட் வாட்ச்மேனாக இருப்பவர் பெயர் வரதன். சினிமா சான்ஸ் தேடி ஆந்திராவிலிருந்து சென்னை வந்த லட்சக்கணக்கான ஜனங்களில் ஒருவர். முயற்சியில் தோல்வியுற்று வாட்ச்மேனாகி விட்டார்.

நான் இப்படி கெட்ட கனா கண்டு நடு நிசியில் விழித்துக் கொண்டு விடுகிறேன் அல்லவா ? உடனே சிறிது நேரத்தில் குழாயில் தண்ணீர் அடிக்க ஆரம்பித்து விடுவார் வரதன். அது ஒரு ஓட்டைக் குழாய். சத்தத்தில் எங்கள் குடியிருப்பே அதிரும். தண்ணீரை அடித்து வாசலில் நாங்கள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றுவார். தினமும் இப்படி இரண்டு மணிக்கா தண்ணீர் அடிக்கிறார் என்ற சந்தேகம் வந்தது. இல்லை. நான் நான்கு மணிக்கு எழுந்தால் நான்கு மணிக்கு குழாய் நாராசம் செவிகளில் பாயும். சில சமயங்களில் தூங்கிபோய் ஆறு மணிக்கு எழுந்தால் ஆறு மணிக்கு குழாய் சப்தம் கேட்கும். அப்போது தான் தெரிந்தது; வரதன் நான் எழுந்து விளக்கைப் போட்டால் என்னை ‘இம்ப்ரெஸ் ’ செய்வதற்காக இந்த வேலையைச் செய்கிறார் !

இதனால் நான் விளக்கையே போடாமல் இருட்டிலேயே பல் துலக்கி விட்டு இருட்டிலேயே யோகாவை ஆரம்பித்துப் பார்த்தேன். ஆனால் வரதன் ஒரு சூரப்புலி. நான் எழுந்து விட்டதை எப்படியே அறிந்து கொண்டு குழாயை உடைக்க ஆரம்பித்து விடுவார்.

அடுத்த பிரச்சினை: பாட்டு. பெருங்குரலெடுத்து பழைய தமிழ்ப் பாடல்களை பாடுவார். பாடாத நேரங்களில் ஊருக்கே கேட்பது போல் கொட்டாவி விடுவார்.

‘ இப்படிக் கொட்டாவி விட்டு என் தூக்கத்தைக் கெடுக்காதே ‘ என்று எங்களுக்கெல்லாம் பாதுகாவலனாக இருக்கும் ஒரு நைட் வாட்ச்மேனிடம் போய்ச் சொல்ல முடியுமா ? ம்ஹூம். நான் படித்த மார்க்ஸ், எங்கெல்ஸெல்லாம் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். இந்த ஒரு ஆளாலேயே வீட்டை மாற்றி விடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

* * *

சமயங்களில் எந்த விதமாகவும் தப்பிக்க முடியாதபடி சிலரிடம் மாட்டிக் கொண்டு விடுவோம். அந்த குஜராத்திகாரர் அறுவைத்திலகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மாட்டினால் ஒரு மணி நேரத்திற்கு பின்னி பெடல் எடுத்து விடுவார் என்று சொல்லியிருக்கிறாள் அவந்திகா. அவர் என்னுடைய சொந்தக்காரர். குஜராத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்றால் அவர் என் மைத்துனியின் மகனின் மாமனார். காதல் திருமணம்.

அவந்திகாவின் தந்தை இறந்த அன்று வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அன்றைய தினசரி என் கையில் இருந்தது. வந்தார் அந்த சேட்.

‘ ஆகா, ஆபத்து நெருங்கிவிட்டதே ‘ என்ற கவலையுடன் நெளிய ஆரம்பித்தேன். எப்படித் தப்பிக்கலாம் என்று மனம் பல்வேறு வழிகளை யோசிக்க ஆரம்பித்தது.

“என்ன செய்கிறீர்கள் ? ”

“ரைட்டர் ”

“ஓ...ரைட்டர் ! ”

நல்ல வேளை, தமிழர்களைப் போல் ‘ எந்த போலீஸ் ஸ்டேஷன் ? ‘ என்று கேட்கவில்லை. ஆனால் வேறு விதமாக ஆரம்பித்து விட்டார் சேட்.

“என்ன எழுதுவீர்கள் ? துப்பறியும் நாவலா, மர்ம நாவலா ? சமூகமா, அரசியலா? ”

“எல்லாம் எழுதுவேன் ” என்று சொல்லி வைத்தேன். ஆனால் அவரோ அடுக்கடுக்காய் இதே போல் நூறு, இரு நூறு கேள்விகளை வைத்திருந்தார் போலிருக்கிறது. எடுத்துச் சரமாரியாய் வீச ஆரம்பித்தார்.

‘குஜராத், இமாசலப் பிரதேசம், திரிபுரா என்று கண்காணாத இடங்களிலிருந்தெல்லாம் வந்து டார்ச்சர் கொடுக்கிறார்களே! ’ என்று எண்ணியபடி அங்குமிங்கும் விழித்தேன். நல்ல காலமாக அவரது சகதர்மினி வந்து சேட்ஜீயை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

அவர் இடம் காலியாக இருந்தது. யார் வந்து அமரப் போகிறார்களோ என்ற கவலையுடன் இருந்தேன். நல்ல வேளையாக அங்கே வந்து அமர்ந்தார். என் ஷட்டகர்(மைத்துனரின் கணவர்). ஷட்டகர் என்னை மாதிரி. அதிகம் பேச மாட்டார்.

ஆனால் நமக்கென்று ஒரு சாபம் இருக்கிறதே, அது வேலை செய்யும் அல்லவா?

ஆரம்பித்தார் ஷட்டகர். ” உங்களை மாதிரி தான் நானும்.... ”

“ அப்படியா, எப்படி ? ”

“ எப்போதும் படித்துக் கொண்டேதான் இருப்பேன் ”

“ ஓ... என்ன படிப்பீர்கள் ? ”

“ குமுதம், விகடன் ..... “

மேலும் அவ்ர் சொன்னதையெல்லாம் எழுதினால் நீங்கள் என்னை அடிக்க வந்து விடுவீர்கள். அதனால் சுருக்கமாகத் தருகிறேன்.

படிப்புதான் எனக்கு உயிர். கல்லூரியிப் பருவத்திலெல்லாம் நான் படிக்காத புத்தகமே கிடையாது. புத்தக்ப் புழு. எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பேன். இப்போதெல்லாம் எங்கே சார் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறது ? மனைவி குழந்தை என்று ஒரே பிரச்சினை. படிக்க வேண்டும் சார். படிப்பு தான் வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் போது கவிதை கூட எழுதுவேன் தெரியுமா ? உங்களைப் போலவேதான் நானும். புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழேயே வைக்க மாட்டேன்.

அந்த நேரம் பார்த்து என் மைத்துனி வந்தாள். எந்த மைத்துனியுடனும் நான் ஹலோ என்ற வார்த்தைக்கு மேல் அடுத்த வார்த்தை பேசியதில்லை. அதுவும் இந்த மைத்துனியிடம் – கடைசி மைத்துனி – ஹலோ கூட சொல்ல மாட்டேன். லேசாக ஒரு முறுவல். அவ்வளவுதான். (அழகிகளோடு எதற்கு வம்பு என்று தான்).

இது மரணம் நிகழ்ந்த வீடு. இந்த இடத்தில் சம்பிரதாயமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எங்கள் அருகே வந்து அமர்ந்த மைத்துனியிடம் “ என்ன, உங்கள் கணவர் பயங்கரமாகப் படிப்பாராமே ? “ என்றேன்.

” ஐயோ.... புத்தகத்தை எடுத்து விட்டார் என்றால் அப்புறம் கிட்டத்தில் நெருங்கவே முடியாது “ என்றாள்.

பிறகு தன் கணவரிடம் “ எப்போ ஊருக்கு ? “ என்றாள்.

அவர் மிக அடங்கின குரலில், “ இன்னிக்கு நைட் “ என்றார். அவரும் அவளிடம் பேசும் போது என்னைப் போலவே தலையைத் தாழ்த்திக் கொண்டு ஏதோ ஒரு அந்நியருடன் பேசுவதைப் போல் பேசியதை கவனித்தேன்.

உடனே எழுந்து போய் விட்டாள் மைத்துனி. ஷட்டகரும் பழைய படி சகஜ நிலைக்குத் திரும்பி வந்து மீண்டும் ஆரம்பித்தார்.

“ சீரியலுக்கெல்லாம் எழுதுவதில்லையா ? “

“ சே சே... அதெல்லாம் பக்கா கமர்ஷியல். நான் எழுதுவது சீரியஸ் “

“ சீரியஸ்னா ? “

“ லிட்ரேச்சர் “

” எனக்கு கூட லிட்ரேச்சர் என்றால் உயிர். காலேஜ் படிக்கும் போது லிட்ரேச்சர்தான் எப்போதும். ஹேமா ஆனந்த தீர்த்தன், தமிழ் வாணன், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன்..... அதிலும் அந்த சாண்டில்யன் இருக்கிறாரே, பக்கம் பக்கமாய் என்னமாய் வர்ணிப்பார் மனுஷன். ... அடடா... இப்போது எங்கே சார் நேரம் கிடைக்கிறது.... மனைவி, குழந்தை என்று ஒரே பிரச்சினை..... ”

” ........................ “

“ சினிமாவுக்கு எழுதுவதில்லையோ ? “

“ ரஜினி, கமல், ஷங்கர் என்று எல்லோரும் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நான் தான் ஒரேயடியாக மறுத்து விட்டேன் “ (சும்மா கப்ஸா)

“ அட, என்ன சார் நீங்க ? சுஜாதா பெரிய ஆளானதே ஷங்கர் படத்துல எழுதித்தானே சார். எழுதுங்க சார்.... ”

இப்படியே இந்த உரையாடல் ஒரு மணி நேரம் தொடர்ந்தது.

அவர் நகர்ந்ததும் அந்த இடத்தில் வந்து அமர்ந்தாள் ஷட்டகரின் மகள் பூஜா.

“ என்ன கிளாஸ் படிக்கிறே செல்லம் ? “ என்றேன் பூஜாவிடம்.

“ ஐயோ, என்ன பெரீப்பா இது ? இதோட ஒரு 30 பேர் இதே கேள்வியைக் கேட்டுட்டா.... இப்போ நீங்க ! சரி. சொல்றேன். செகண்ட் ஸ்டாண்டர்ட் “

“ ஓ... ஐ ’ ம் ஸாரி செல்லக் குட்டி. இனிமே யார்ட்டேயும் இந்தக் கேள்வியைக் கேட்கலே, சரியா ? “

“ நோ... நோ... எல்லார்ட்டயும் கேளுங்க. என்கிட்ட மட்டும் கேட்காதீங்க “


Date : 26.03.2008


Courtesy : http://www.charuonline.com/