கதை நேரம்

on Tuesday, April 7, 2009

எனக்குக் கதை கேட்கப் பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் யாரும் கதை சொல்வதில்லை. பெண்களும் குழந்தைகளும் என்னிடம் கதை கேட்பதுண்டு. ஆனால் என்னிடம்தான் சொல்வதற்குக் கதைகள் இருக்காது. காரணம் , நான் கேட்ட கதைகளெல்லாம் அவ்வப்போது மறந்து போய் விடும். என்னாலும் கதைகளை சொந்தமாக இட்டுக் கட்டிச் சொல்லத் தெரியாது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் உயிர்மையில் வந்திருந்த சல்மான் ருஷ்டியின் ' உலகின் புகலிடம் ' என்ற சிறுகதையைப் படித்துக்

கொண்டிருந்தேன். அப்போது அதிலிருந்த ஒன்றிரண்டு பீர்பால் கதைகளைப் படித்து , மொத்த பீர்பால் கதைகளையும் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. இணைய தளத்தில் தேடிய போது எஸ்.நிவேதா என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் (செட்டினாடு வித்யாஷ்ரம் , சென்னை) தொகுத்த பீர்பால் கதைகள் படிக்கக் கிடைத்தன. இந்தக் காலத்தில் சினிமாப் பாடல்களைப் பார்த்து , அந்தக் குத்து டான்ஸ்களைப் பயிற்சி செய்து பள்ளி ஆண்டு விழாக்களில் ஆடிக் காட்டும் மாணவ ' மணிகளி ' ன் இடையே இப்படிப் பட்ட மாணவிகளும் இருக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருந்தது. .

அந்தக் கதைகளைப் படித்த போது சமீபத்தில் என்னிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்வி ஞாபகம் வந்தது. கேள்வி கேட்டவர் ஒரு பேராசிரியை. கேள்வி: "ஒரு கட்டுரை எழுத உங்களுக்கு ஒரு மணி நேரம் ஆகுமா ? அல்லது , இரண்டு நேரம் ஆகுமா ?" நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை , சொன்னால் புரியாது என்பதனால்.

எழுதுவது என்பது சோதனைச் சாலையில் இருக்கும் ஒரு விஞ்ஞானியின் நிலையை ஒத்தது. எப்போது முடிவு தெரிகிறதோ அப்போதுதான் சோதனை முடியும். ஒரு எழுத்தாளர் இருக்கிறார் , அட்டைப் பெட்டி தயாரிப்பது போல் அரை மணிக்கு ஒரு கட்டுரையை எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கிறார். அட்டைப் பெட்டிகளுக்கும் பயன்பாடு உள்ளன என்பது வேறு விஷயம். ஆனால் நான் செய்வது அது அல்ல. அல்லது , அந்தப் பேராசிரியை செய்வது போல் மாணவர்களின் பெயர் ஜாபிதாவைத் தயாரித்துக் கொண்டிருப்பவன் அல்ல நான்.

ஸீரோ டிகிரியையும் , ராஸ லீலாவையும் எழுதி முடிக்க எனக்குத் தலா மூன்று வருடங்கள் ஆயின. கட்டுரை என்றால் ராப்பகலாக எழுதினால் மூன்று தினம் பிடிக்கும்.

பீர்பாலிடம் அக்பர் ஒருமுறை "நம் தேசத்தில் எத்தனை குருடர்கள் இருப்பார்கள் ?" என்று கேட்டார். "இதோ எண்ணிச் சொல்கிறேன் , ஜஹான் பனா!" என்று கூறிய பீர்பால் நகரின் பிரதான அங்காடியில் சென்று அமர்ந்து கொண்டு செருப்புத் தைக்க ஆரம்பிக்கிறார். அதைப் பார்த்த பலரும் "என்ன செய்கிறீர்கள் பீர்பால் ?" என்று கேட்க , ஒரு குறிப்பேட்டை எடுத்து , தன்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டவர்களின் பெயர்களை எழுதி கொண்டு வருகிறார் பீர்பால். இதைக் கேள்விப்பட்ட அக்பரும் அங்காடிக்கு வந்து "என்ன செய்து கொண்டிருக்கிறாய் பீர்பால் ?" என்று கேட்க , அவர் பெயரும் குறிப்பேட்டில் ஏறுகிறது. மறுநாள் அரசவை கூடிய போது குருடர்களின் பட்டியலை அக்பரிடம் கொடுக்கிறார் பீர்பால். பட்டியலின் கடைசியில் தன் பெயரும் இருக்கக் கண்ட அக்பர் மிகவும் கோபப்பட்டு கேட்க , " நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைக் கண்களால் பார்த்த பிறகும் மற்றவர்களைப் போலவே நீங்களும் அந்தக் கேள்வியைக் கேட்டீர்கள் ; அதனால்தான் உங்கள் பெயரையும் சேர்க்க வேண்டியதாயிற்று" என்கிறார் பீர்பால்.

பேராசிரியையின் கேள்வியைக் கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்த கதை இதுதான்.

பீர்பால் எப்படி அக்பரின் அரசவையில் சேர்ந்தார் என்பது பற்றிய கதை இது:

மகேஷ் தாஸ் என்பவன் அக்பரின் தேசத்தைச் சேர்ந்த ஒரு குடிமகன். ஒருநாள் வேட்டைக்குச் சென்று திரும்பிய அக்பருக்கு வழிகாட்டி உதவினான் மகேஷ். அதற்குப் பிரதியாகத் தன் மோதிரம் ஒன்றைப் பரிசளித்த அக்பர் , அரண்மனைக்கு வந்தால் அங்கே அவனுக்கு நல்லதொரு வேலையும் தருவதாகச் சொல்கிறார் அக்பர்.

அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் செல்கிறான் மகேஷ் தாஸ். காவலாளி விடவில்லை. பிறகு மோதிரத்தைக் காண்பித்தவுடன் ' இவன் பெரிய பரிசு ஒன்றைத்தான் வாங்கச் செல்கிறான் ; அதில் நாமும் கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் என்ன ?' என்று நினைக்கும் காவலாளி "உன்னை உள்ளே விட்டால் உனக்குக் கிடைக்கும் பரிசில் எனக்கும் பாதி பங்கு தர வேண்டும்" என்று சொல்லி உள்ளே விடுகிறான். (ஆக , இந்தியாவில் அந்தக் காலத்திலேயே லஞ்சம் இருந்திருக்கிறது).

உள்ளே சென்ற மகேஷ் தாஸ் அக்பரைச் சந்தித்து மோதிரத்தைக் காண்பிக்க , " உனக்கு என்ன பரிசு வேண்டும் , கேள் ?" என்று கேட்க , "50 கசையடிகள் வேண்டும்" என்கிறான் மகேஷ். ' இவனுக்கு என்ன பைத்தியமா ?' என்று நகைக்கின்றனர் சபையோர். ஆச்சரியமுற்ற அக்பரும் "ஏன் இப்படிக் கேட்கிறாய் ?" என்று கேட்க , " பரிசை வாங்கிக் கொண்டு சொல்கிறேன்" என்கிறான் மகேஷ். 25 கசையடிகள் முடிந்ததும் நிறுத்தச் சொல்லி மீதி அடிகளை வாயிற்காப்போனுக்குத் தரும்படி கூறுகிறான் மகேஷ். அப்போதுதான் மன்னருக்கு விஷயம் விளங்குகிறது. வாயிற்காப்போனுக்கு 50 கசையடிகளும் , 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்த அக்பர் , மகேஷின் புத்தி சாதுர்யத்தை வியந்து அவனைத் தன் பிரதான மந்திரியாக ஆக்கிக் கொள்கிறார். அந்த மகேஷ் தாஸ் தான் பீர்பால்.

இப்படிப் பல கதைகளைத் தொகுத்திருக்கும் நிவேதாவுக்கு என் வாழ்த்துக்கள்.


Source : http://www.charuonline.com

0 comments:

Post a Comment