இப்போது அதிகாலை மணி 4.30. வழக்கம்போல் நான்கு மணிக்கு எழுந்ததும் மறந்து போய் பாத் ரூம் லைட்டைப் போட்டுத் தொலைத்து விட்டேன். ஆரம்பித்து விட்டார் நைட் வாட்ச்மேன் ரங்கன். தண்ணீர்க் குழாயை அவர் அடிக்கிற அடிக்கிற அடியில் ஆயிரம் யானைகள் ஒன்று சேர்ந்து பிளிறுவது போல் இருக்கிறது. எங்கே தியானம் செய்வது ? சரி , இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் என்று வாயிற் கதவைத் திறந்து வெளியே வந்து "இப்படி நான்கு மணிக்கெல்லாம் தண்ணீர் அடிக்க வேண்டாம் ரங்கன் , நாம்தான் முழித்துக் கொண்டிருக்கிறோம் ; ஆனால் இந்த சத்தம் மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்குமே ?" என்றேன். ஆனால் ரங்கனோ நான் நினைத்ததை விட வில்லங்கமான ஆள் போலிருக்கிறது. "அசோஸியேஷனில்தான் சொல்கிறார்கள் சார்" என்று இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புச் சங்கத்தின் நிர்வாகிகளைச் சுட்டினார். அவர்களிடம் எங்கே நான் பேசுவது ? இந்த வாட்ச்மேனிடம் பேசுவதற்கே ஒரு வருடம் எடுத்துக் கொண்டேன். மேலும் நீங்கள் அஞ்சலி படம் பார்த்திருந்தீர்களானால் நான் சொல்வதைச் சரியாக புரிந்து கொள்ள முடியும். அதில் வரும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் பிரபு வருவார் இல்லையா ? அவரை அந்தக் குடியிருப்புவாசிகள் எப்படி எதிர்கொள்வார்கள் , ஞாபகம் இருக்கிறதா ? இல்லாவிட்டால் ஒரு சுலபமான உதாரணம். இஸ்ரேலில் உள்ள ஒரு யூதர் குடியிருப்பில் வாழும் ஒரே ஒரு பாலஸ்தீனியன் போலத்தான் இந்தக் குடியிருப்பில் நான்...ஏதோ அவந்திகா இருப்பதால் எப்படியோ ஓடுகிறது கதை. அது சரி , குடியிருப்புச் சங்க நிர்வாகிகள் நான் இரவு இரண்டு மணிக்கு எழுந்தால் இரண்டு மணிக்கும் , நான்கு மணிக்கு எழுந்தால் நான்கு மனிக்குமா தண்ணீர் அடிக்கச் சொன்னார்கள் ? இதை நான் வாட்ச்மேன் ரங்கனிடம் கேட்கவில்லை. இவ்வளவு கேட்டதே தப்பு என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்து இதை டைப் செய்ய ஆரம்பிக்கிறேன்.
யோகா செய்யவில்லையா ? இல்லை. அதுதான் இன்றைய கட்டுரையின் பொருளே.
அழகாய் இருக்கிறாய் ; பயமாய் இருக்கிறது என்ற கட்டுரையில் வந்துள்ள தாரா என்பவரின் கடிதத்தை இப்போது மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்தக் கட்டுரையை நன்றாக அனுபவிக்க முடியும்.
தாரா என்னைத் தொடர்பு கொண்டு இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும். அவருடைய புதல்வன் ராமுக்கு யக்ஞோபவீத நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க என் வீட்டுக்கு வந்தபோது பேசியதோடு சரி. திருச்சியில் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி நடந்த அன்றுதான் எனக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிகழ்ச்சி. என் மின்னஞ்சல் பெட்டி கொள்ளை போனது , என் பெயரில் ஆயிரக் கணக்கான டாலர்கள் கொள்ளையடிக்க நடந்த முயற்சி பற்றியெல்லாம் புகார் கொடுக்கச் சென்றிருந்தேன். தமிழ் நாட்டின் மிக உயர்ந்த சிபாரிசில் போயிருந்தாலும் நிர்வாக எந்திரம் என்பதன் அபத்தங்களைக் கடந்துதானே ஆக வேண்டும் ?
கமிஷனர் அலுவலகத்தில் அது இரண்டாவது நாள். முந்தின தினமே புகார் கொடுத்து விட்டேன். இது அந்தப் புகார் தொடர்பான மேல் தகவல்கள். இதை வாங்கி வைத்துக் கொள்ள ஒரு நிமிடம்தான் பிடிக்கும். ஆனாலும் அந்த உயர் அதிகாரியை நேரில் பார்த்துக் கொடுக்க வேண்டும். மதியம் இரண்டு மணிக்கு நேரம் கொடுத்திருந்தார். சரியான நேரத்தில் சென்று விட்டேன். 5 மணிக்கு வந்தார் அதிகாரி. அவருக்கு அவரை விட பெரிய அதிகாரியுடன் முக்கிய வேலை. மூன்று மணி நேரம் சிலை போல் அமர்ந்திருக்க வேண்டி வந்தது. முன்னதாகவே அவர் வர மூன்று மணி நேரம் ஆகும் என்று தெரிந்திருந்தால் எங்காவது போய் விட்டு வந்திருக்கலாம். ஆனால் அவர் எப்போது வருவார் என்றும் யாருக்கும் தெரியவில்லை. 5 நிமிடத்தில் வந்து விடுவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர்.
நானோ இதுவரை ஒரு மின்சாரக் கட்டண அலுவலகம் , ரேஷன் ஆஃபீஸ் போன்ற எந்த அரசாங்க அலுவலகத்திற்கும் சென்றது கிடையாது. யாருக்காகவும் 5 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் மண்டையில் தேள் , பூரான் , நட்டுவாக்களி எல்லாம் கொட்டும். வியாழக்கிழமை அன்று மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை பாபா கோவிலில் தண்டம் பிடித்து நிற்பதோடு சரி. இரண்டு மணி நேரம் நடக்கும் அந்த விசேஷ பூஜை. பூஜை முடிந்ததும் தண்டம் பிடித்த இரண்டு பேருக்கும் மாலை மரியாதையெல்லாம் செய்து இரண்டு ஆள் சாப்பிடுவது போல் வெண் பொங்கல் , சர்க்கரைப் பொங்கல் என்று பிரசாதமும் கொடுப்பார்கள்.
தண்டச் சோறு என்று திட்டுவார்களே , கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்னை யாரும் அப்படித் திட்டியதில்லை. பள்ளியில் படிக்கும் போதே தலையணை தலையணை சைஸுக்கு புத்தகங்களைக் கொண்டு வந்து சிம்னி விளக்கில் படித்து வீட்டில் உள்ளவர்களை மிரட்டியவன் நான். படிப்பிலும் முதல் மதிப்பெண் என்பதால் என்னை யாரும் அப்படித் திட்ட நேர்ந்ததில்லை. கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் திட்டுவது போல் தண்டம் பிடித்து நிற்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை அல்ல. இரண்டு மணி நேரம் ஆடாமல் அசையாமல் தண்டத்தைப் பிடித்தபடி நிற்க வேண்டுமென்றால் சும்மாவா ? பெண்டு நிமிர்ந்து விடும். இரண்டு மணி நேரம் நடக்கலாம் ; ஆனால் வெறுமனே ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அதை விடக் கஷ்டம் அர்ச்சகராக இருப்பது. தீபாராதனை என்று வாயால் சொல்கிறோம். அதைச் செய்து பார்த்தால் தான் தெரியும் கஷ்டம். பாபா கோவிலில் ராஜா என்று ஒரு குருக்கள் இருக்கிறார். அவர் எனது நீண்ட கால நண்பர். காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை. இடையில் நான்கு மணி நேரம் ஓய்வு. வயலில் வேலை பார்க்கும் ஒரு விவசாயியின் வேலையை விட இவருடைய வேலை கடினமானது என்பதைப் பக்கத்தில் நின்று பார்த்திருக்கிறேன். 108 தீபங்களுக்கும் நெய் ஊற்றி , ஏற்றி ஆராதனை காட்டும் போது அவர் தேகமே தீப்பிழம்பாகி தகிக்கும். சில சீனியர் குருக்கள்மார்கள் இருக்கிறார்கள். அவர்களின் வேலை வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம்.
சரி , பாபா கோவிலிலிருந்து கமிஷனர் அலுவலகம் செல்வோம். அதிகாரி எப்போது வருவார் என்ற யூகமே இல்லாமல் மூன்று மணி நேரம். கவனிப்பெல்லாம் எனக்கு ராஜ கவனிப்புதான் . ஆனால் மூன்று மணி நேரம் காத்திருந்ததில் ராஜ பிளவையே வந்தது போல் ஆகி விட்டது எனக்கு. அபத்தத்தின் உச்ச கட்டமான சூழ்நிலை அது. எதற்காக அந்த இடத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன். யார் எனக்கு எந்தத் தீங்கு செய்தாலும் அதற்காக நான் காவல் நிலையம் செல்ல மாட்டேன். ஏனென்றால் , காவல் நிலையம் செல்வதே ஒரு தண்டனை. கஷ்டத்தையும் அனுபவித்து விட்டு காவல் நிலையம் சென்று மேலும் ஒரு கஷ்டத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்.
நான் யாருக்காகக் காத்திருந்தேனோ அந்த அதிகாரி வந்து புகாரைப் பார்த்துவிட்டு குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டதாகவும் , இத்தகவல்கள் மேற்கொண்டு எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறி என்னை ஒரு இன்ஸ்பெக்டரிடம் அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டருக்கு நான் யார் என்று தெரியுமா ? என்னை அமர வைத்து விட்டு என் எதிரிலேயே அவருடைய உதவியாளருக்கு இவ்விஷயம் பற்றி டிக்டேஷன் கொடுக்க ஆரம்பித்தார்.
சாரு நிவேதிதா என்ற ஒரு நபர்...
அந்த நேரம் பார்த்தா அவரை ஒரு அதிகாரி அழைக்க வேண்டும் ? எழுந்து சென்றார் இன்ஸ்பெக்டர். ஆறு மணி வரை அங்கே அமர்ந்திருந்தேன். அதற்கு மேல் பொறுமையில்லை. இன்ஸ்பெக்டரின் உதவியாளரிடம் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டுக் கிளம்பிவிட்டேன்.
அன்று இரவு எட்டு மணி அளவில் எனக்கு முதுகுத் தண்டின் கீழே வலி குடைய ஆரம்பித்தது. அந்த இடத்த்தில் இப்படி ஒரு வலியை அனுபவித்ததே இல்லை. வலியில் தேகமே நடுங்கியது. அவந்திகா தைலம் தடவி மஸாஜ் செய்து விட்டாள். ம்ஹூம் , பயனில்லை. வலி அதிகரித்துக் கொண்டே போனது. எதனால் இந்த வலி என்று புரிந்து விட்டது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக என்மீது வலிந்து திணிக்கப் பட்ட பிரம்மச்சரியம்தான் காரணம். அதனால் சென்ற வாரம் ஏற்பட்ட Blue balls வலியிலிருந்து தப்பிக்க சுயபோகத்தில் ஈடுபட நேர்ந்தது. வேறு என்ன வழி ? பாரியாள் காரைக்கால் அம்மையாரின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டாள். என்னைப் பொறுத்தவரை sex is a glass of water. வீட்டில் கிடைக்காவிட்டால் வெளியே கிடைக்கும். விலைக்கு அல்ல. தோழமை கொண்டு தருவோர் பலர் உண்டு. ஆனால் , அதில் இரண்டு சங்கடங்கள்...ஒன்று , வெளியே ' தண்ணீர் ' குடிப்பது இந்தியாவில் - முக்கியமாக - தமிழகத்தில் தடை செய்யப் பட்டிருக்கிறது. நானோ வாகனங்களே இல்லாத வெறும் சாலையாக இருந்தாலும் சிவப்பு விளக்கு விழுந்து விட்டால் பச்சை விளக்கு வரும் வரை நின்று கொண்டே இருப்பேன். அப்படிபட்டவன் இவ்வளவு பெரிய விஷயத்தில் சட்டத்தை மீறத் துணிவேனா ? இரண்டாவது , வி.எஸ்.நைப்பால் லண்டனில் இருந்த போது அடிக்கடி விலை மகளிரிடம் செல்வதுண்டாம். அது பற்றி வெளிப்படையாக எழுதியும் விடுவாராம். அதைப் படிக்கும் அவருடைய ( முதல்) மனைவி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இறந்து விட்டாராம். நான்தான் ஒரு விதத்தில் அவரது மரணத்திற்கே காரணம் என்று சமிபத்தில் கூறியிருக்கிறார் நைப்பால். அப்படிப் பட்ட பிரச்சினைகள் ஏதும் அவந்திகாவுக்கு வந்து விடகூடாது. அவளை நான் ஒரு தெய்வத்திற்கு நிகராக மதிக்கிறேன். அவள் பொருட்டு இந்த பிரம்மச்சரியத்தையும் ஏற்கலாம்தான். ஆனால் தேகம் ஒத்துழைப்பதில்லை.
என் மருத்துவரிடம் சென்று ப்ளூ பால்ஸ் பிரச்சினையைப் பற்றி விளக்குவதும் சாத்தியமில்லை. அந்த ஆயுர்வேத மருத்துவர் 24 வயதே நிரம்பிய ஒரு அழகிய - இந்த அழகிய என்ற வார்த்தையை delete செய்து விடவும் - இளம் பெண். அவர் நாடி பிடிக்க என் கைகளைத் தொட்டு விட்டு அடுத்து ரத்த அழுத்தம் பார்ப்பார். 160/120 காட்டும். (ஆனால் மறுநாள் வேறு இடத்தில் பார்த்தால் 130/90 என்று வரும்). 160/120 ஐப் பார்த்து அதிர்ச்சியுற்று , " ஓ...ரொம்ப அதிகமாக இருக்கிறதே ? என்ன காரணம் ? ஏதேனும் பதற்றமா ? இங்கே என்னைப் பார்க்க அவசரமாக வந்தீர்களா ?" என்று பல கேள்விகள் கேட்பார் டாக்டர். அவரை நான் பார்ப்பதும் , அவர் என் நாடியைப் பார்ப்பதும்தான் பிரச்சினை என்று அவரிடம் எப்படிச் சொல்ல முடியும் ? டாக்டரிடமும் இன்னும் சிலரிடமும் உண்மையை மறைக்காமல் விளம்ப வேண்டும் என்பார்கள். ஆனால் இப்படி ஒரு இளம் பெண்ணிடம் போய் என் பிரம்மச்சரியம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றோ , இதனால் நான் படும் ப்ளூ பால்ஸ் அவஸ்தை பற்றியோ எப்படிச் சொல்வது , சொல்லுங்கள்.
உருட்டுத் தடியால் அடித்தது போல் வலிக்கும். அதிலிருந்து தப்பிக்க சுய போகம். 5 நாளில் ஏழெட்டு முறை. அதோடு யோகா. ஆக , யோகமும் போகமும் சேர்ந்து விட்டதால்தான் குழப்பம். அதுதான் இந்தத் தண்டுவட வலியில் கொண்டு வந்து விட்டது என்று நினைக்கிறேன். அதோடு சேர்ந்து கொண்டது கமிஷனர் அலுவலத்தில் காத்திருந்ததும்.
ஆங்கில மருத்துவர்கள் கூறுவார்கள் , சுய போகத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று. அதில் எனக்கு ஒரு சிறிதும் உடன்பாடு கிடையாது. சுயபோகம் செய்துவிட்டு யோகா செய்தால் எனக்கு ஜூரம் வந்து விடும். நான் மதுவை விட்டதற்கு மற்றொரு காரணமும் இதுதான். மது அருந்திய மறுநாள் யோகா செய்தால் ஜூரம் வந்து விடும். 4 கி.மீ. நடக்கலாம். ஆனால் யோகா நடையை விடக் கடினமானது.
ஆஸ்கார் ஒயில்டு இறந்ததற்குக் கூட இந்த சுய போகம் ஒரு காரணம். Dandy யாக வாழ்ந்த ஒருவனை ஹோமோசெக்ஸ் குற்றத்துக்காக சிறையில் போட்டு கடினமான உடல் உழைப்புக்கு ஆட்படுத்தினார்கள். ஒயில்டோ அது வரை ஒரு பிரபுவாக வாழ்ந்தவன். சிறையில் காற்றாலையில் வேலை. கிட்டத்தட்ட செக்கிழுப்பதைப் போன்ற வேலை அது. செக்குக்குப் பதிலாகக் காற்றாலை. தனிமை , குளிர் , கடுமையான உடல் உழைப்பு - இந்த மூன்றின் சுமையையும் அவன் சுய போகம் என்ற ஒன்றின் மூலமாகவே கடக்க முற்பட்டான். அதுவே அவனுடைய மரணத்துக்குக் காரணமாக இருந்தது.
இரவு எட்டு மணிக்குத் தொடங்கிய தண்டுவட வலி ஒன்பது மணியளவில் தாள முடியாமல் போக , அலோபதி மருத்துவரான சாயி ரமணனிடம் ஓடினேன். வாழ்க்கை வரலாற்றையெல்லாம் சொல்லாமல் தண்டுவட வலியைப் பற்றி மட்டும் சொன்னேன். ஒரு ஊசி போட்டார். நரம்பை வலுப்படுத்தும் ஒரு மாத்திரையும் , வைட்டமின் மாத்திரயும் கொடுத்தார். அரைமணி நேரத்தில் சரியாகி விட்டது. (அந்தத் தருணத்தில்தான் நாகர்கோவிலிலிருந்து அந்தச் சிறுபத்திரிகை அன்பர் எனக்கு போன் செய்து மிரட்டி டார்ச்சர் கொடுத்தார்).
இங்கே ஆங்கில மருத்துவம் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். என் நண்பன் குணசேகரனுக்கு ஆங்கில மருத்துவமே பிடிக்காது. ஐந்தரை அடி உயரத்துக்கு 100 கிலோ இருந்தான். போய் கொழுப்பை சோதனை செய்து பார் என்றால் ஆங்கில மருத்துவம் பற்றித் திட்டி லெக்சர் கொடுப்பான். என்னைப்போல் நீயும் பை பாஸ் அறுவை சிகிச்சைக்குத் தான் போகப் போகிறாய் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். பிறகு என் ஆலோசனைப் படி பட்டை அடிப்பதை நிறுத்திவிட்டு , தினமும் காலையில் பட்டைப்பொடியை ( Cinnamon) தேனில் கலந்து சாப்பிட்டு 65 கிலோவுக்கு வந்து விட்டான்.
மது அருந்தினால் கொழுப்பு குறையும் ; ரத்தம் இறுகாமல் நீர்க்கும். இந்தக் காரியங்களெல்லாம் இதயத்துக்கு நல்லது. ஆனால் நம் ஆட்கள் மது அருந்தினால் மகா மட்டமான எண்ணெயில் முக்கி வறுத்த கோழி ஒரு கிலோவை அல்லவா விழுங்கி வைக்கிறார்கள் ?
ஆனால் குணசேகரன் இப்போது மனநல மருத்துவரை நாடிச் சென்று கொண்டிருப்பதாக வள்ளுவர் சொன்னார். (வள்ளுவர் பற்றி ஏற்கனவே அறிமுகப் படுத்தியிருக்கிறேன்). காரணம் என்னவென்றால் , மது அருந்துவதை நிறுத்திவிட்டதால் நண்பர்கள் யாரையும் சந்திப்பதில்லை. தனிமை. மன உளைச்சல். இன்ன பிற. "இதைவிட அவன் எங்களோடு சேர்ந்து தண்ணியே அடித்துக் கொண்டிருக்கலாம் சாரு" என்றார் வள்ளுவர்.
***
நான் மட்டும் தண்டுவட வலிக்கு ஆங்கில மருத்துவரை நாடாமல் சித்த மருத்துவரையோ , ஆயுர்வேத மருத்துவரையோ நாடியிருந்தால் என் கதி அதோகதி தான். இம்மாதிரி வலியின் கொடுமையில் பல பேர் தற்கொலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையெல்லாம் முடிந்து மறுநாள் காலை எழுந்து டைப் செய்து கொண்டிருந்தேன். ஒன்பது மணி இருக்கும். "தாராவின் நம்பரைக் கொடு ; அவரிடம் பேச வேண்டும்" என்று வந்தாள் அவந்திகா.
" என்ன பேசப் போகிறாய் ?"
" உன் மின்னஞ்சல் பெட்டிக்குள் நுழைந்த திருடன் எல்லோரிடமும் பணம் கேட்கும் விஷயம் பற்றித்தான்."
" நீயே பேசிக்கொள் ; இது சம்பந்தமாக நான் யாரோடும் பேசத் தயாராக இல்லை" என்று சொல்லி தொலைபேசி எண்ணைக் கொடுத்தேன்.
நண்பர்கள் சிலர் நான் எழுதுவதைப் படிப்பதில்லை. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எதுவும் தெரிந்து கொள்வதும் இல்லை. அது பற்றி எனக்குப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சமயத்தில் எனக்கு போன் செய்து கீழ்க்கண்டவாறு டார்ச்சர் கொடுப்பார்கள்.
" என்ன சாரு , எப்படி இருக்கீங்க ?"
' ம்ம்ம்...நல்லா இருக்கேன்."
" ம்ம்ம்...அப்புறம் ?"
" ம்ம்ம்...சொல்லுங்க..."
" என்ன ஒன்னும் சத்தத்தையே காணும் ?"
" அப்படீன்னா ?"
" எழுதறதே இல்ல போல்ருக்கு இப்போல்லாம் ?"
" ராஸ லீலா படிச்சீங்களா ?"
" கேள்விப் பட்டேன். இன்னும் வாங்கலே. அது என்னா 400 ரூ. விலை போட்டிருக்காங்க ?"
" அநியாயம்தான் , என்ன பண்றது ? 40 ரூ தான் போடச் சொன்னேன்... ஆனா இந்த மனுஷ்யபுத்திரன் நான் என்ன சொன்னாலும் அதுக்கு எதிராத்தான் செய்றாரு..."
" ஆமாமா , அவர் ஒரு மாதிரின்னுதான் நானும் கேள்விப்பட்டிருக்கேன்...ம்...அப்புறம் ஒன்னும் எழுதலியா ?"
" எங்கே எழுதறது ? குடிக்கவும் கும்மாளம் போடுறதுக்கும்தானே நேரம் சரியா இருக்கு ?"
" குடியைக் குறைச்சுடுங்க சாரு...ஹெல்த்துக்கும் நல்லதில்ல..."
" அதுதான் பார்க்கிறேன்...முடில்லன்னா எதாவது டி-அடிக்ஷன் செண்டர்ல சேர்ந்துட வேண்டியதுதான்..."
இப்படியே போகும் உரையாடல். கீழ்ப்பாக்கம் மென்ட்டல் அஸைலத்திலிருந்து சுவரேறிக் குதித்துத் தப்பி வந்ததும் நேராக சாரு நிவேதிதாவின் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து போன் செய்து விடுவார்கள் படுபாவிகள்.
எனக்கு தாரா போன்ற நெருங்கிய நண்பர்களைப் பற்றி மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பற்றி அவரிடமிருந்து எந்த விசாரிப்பும் இல்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே அவருக்குத் தெரியாது போலும் என்று விட்டு விட்டேன்.
தாராவிடம் பேசி விட்டு அவந்திகா போனை என்னிடம் கொடுத்தாள். இதுபோல் போனை கொடுக்கக் கூடாது என்று பலமுறை அவளை நான் எச்சரித்திருக்கிறேன். இருந்தாலும் கேட்க மாட்டாள்.
" சாரு...நீங்கள் மலேஷியா போயிருப்பதாகவும் , பணத்துக்குக் கஷ்டப்படுவதாகவும் நேற்று இரவு எனக்கு ஒரு மெயில் வந்தது...பதறிப் போய் விட்டேன்..."
" தாரா , தயவு செய்து அது பற்றி இப்போது நான் பேசும் நிலையில் இல்லை. பிறகு பேசுவோம்..."
" ம்ம்...அவந்திகாவை விட்டுப் பேசச் சொல்லும்போதே நினைத்தேன்...அதனால்தான் உங்களிடம் போனை கொடுக்கச் சொன்னேன்..."
" நான் அவளைப் பேசச் சொல்லவில்லை...நாம் அப்புறம் பேசலாம்..."
" அதுசரி...ஏன் உபநயனத்துக்கு வரவில்லை ? ரொம்பவும் எதிர்பார்த்தேன்..."
" நான் அன்றைய தினம் பூராவும் போலீஸ் கமிஷனர் ஆபீஸில் இருந்தேன்..."
" சாரு...நீங்கள் மலேஷியாவில் 4 நாட்கள் பட்டினி என்றதுமே ஒருக்கணம் பதறிவிட்டேன்..."
" அது பற்றி நான் இப்போது எதுவும் பேசக் கூடிய மனநிலையில் இல்லை...நாம் அப்புறம் பேசலாம்..."
" இருந்தாலும் அந்த ஹலோவிலிருந்து அது நீங்கள் இல்லை ; வேறு ஏதோ ஆள் என்று தெரிந்து விட்டது. இருந்தாலும் பதறினது உண்மைதான்..."
" இதோடு இந்த விஷயம் பற்றி 500 பேர் பேசி விட்டார்கள். நான் எக்கச்சக்கமான மன உளைச்சலில் இருக்கிறேன். நீங்கள் வேறு டார்ச்சர் கொடுக்காதீர்கள். தயவு செய்து என் இணைய தளத்தைப் படித்துவிட்டுப் பேசுங்கள்..."
" ஓ , இணைய தளம் வேறு நடத்துகிறீர்களா ? அதன் முகவரி என்ன ?"
சொன்னேன்.
" ஓகே...பார்க்கிறேன் சாரு...புதிதாக இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ?"
" இதோ பாருங்கள் தாரா...நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. நீங்கள் என் இணைய தளத்தைப் பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்..."
" பார்க்கிறேன்...அப்புறம் அந்த மின்னஞ்சல் திருடனைப் பற்றி போலீஸில் புகார் செய்யுங்கள் சாரு..."
அந்த அறிவுரையைக் கேட்டதும் " Look... I dont want to talk to you now..." என்று உச்சஸ்தாயியில் குலைத்துவிட்டு அவந்திகாவிடம் போனைக் கொடுத்தேன்.
திருடனையே கண்டுபிடித்து விட்ட பிறகு போலீஸில் புகார் கொடுக்கச் சொல்லி அறிவுரை! இதைக் கேட்டவுடன் எனக்கு மயானக் கொல்லை பூசாரியின் நினைவே வந்தது. கிராப்புறக் கோவில்களில் மயானக் கொல்லை என்று ஒரு திருவிழா நடக்கும். அப்போது கோவில் பூசாரி ஆடு , மாடு , கோழி எல்லாவற்றின் கழுத்தையும் வாயாலேயே கடித்து ரத்ததைக் குடிப்பார்.
அவந்திகாவுக்குப் புரிந்து விட்டது நிலைமை. பயந்து போய் தாராவிடம் இரண்டொரு வார்த்தைகள் உளறி விட்டு போனை வைத்து விட்டு "சாரு இப்போது டிஸ்டர்ப்டாக இருக்கிறார் ; பிறகு பேசுகிறேன் என்று சொல்கிறார் தாரா" என்றாள். "என்னது , டிஸ்டர்ப்டாக இருக்கேனா ? இன்னும் ஒரு நிமிடம் நீ இங்கே நின்றால் நடப்பதே வேறு" என்று கத்தினேன்.
" ம்க்கும்...பெரிய இவன்னு நினைப்பு..."என்று பழிப்பு காட்டிவிட்டு நகர்ந்தாள் அவந்திகா. சூடு கொஞ்சம் தணிந்தது.
மறுநாள் காலைய சரியாக ஏழு மணிக்கு போன் செய்து "குட் மார்னிங் சாரு" என்றார் தாரா.
" குட் மார்னிங்."
" ஹெல்த் இப்போ எப்படி இருக்கு சாரு ?"
அந்த நேரத்திலும் என் ரத்த அழுத்தம் மேலே ஜிவ்வென்று எகிறியது.
" இன்னுமா நீங்கள் இணைய தளத்தைப் படிக்கவில்லை ?"
" இல்லே சாரு...நேரமே இல்லை...இப்போ உங்க ஹெல்த் எப்படியிருக்கு ? பரவால்லேல்ல ?"
" தாரா...உங்க கிட்ட நேற்றே சொன்னேன்...என் இணைய தளத்தைப் படித்துவிட்டுப் பேசுங்கள் என்று...ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று கூட இல்லை...உங்களிடம் லேப்டாப்பும் இருக்கு...இந்த தினசரிகளைப் பீராய்கிறோம் இல்லையா...எந்தப் பாலம் இடிந்து விழுந்து எத்தனை பேர் செத்தாங்க...எந்த மந்திரி ரேப் சார்ஜில் ராஜினாமா பண்ணினார்...எத்தனை விவசாயிங்க தற்கொலை செஞ்சுக் கிட்டாங்கன்னு தினமும் பார்க்கிறோம்ல..அப்படிப் பீராய்ந்தால் கூடப் போதும் , நான் என்ன செஞ்சுக் கிட்டிருக்கேன்னு தெரியும்...இணைய தளத்தில் உங்கள் கடிதம் கூட வெளியாகியிருக்கு..."
இந்த உரையாடல் முடிந்து சில மணி நேரம் சென்று தாரவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.
' எந்தக் கட்டுரையில் என் கடிதம் ?'
கட்டுரைத் தலைப்பைக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.
ஒரு மணி நேரம் கழித்து தாராவிடமிருந்து வந்த குறுஞ்செய்தி இதோ:
" ஒரு வேண்டுகோள்:
கீழ்க்கண்டவைகளை தயவுசெய்து மாற்றுங்கள்:
ராம் பி.இ. இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.
நான் பிரின்ஸிபல் அல்ல ; டீன்."
என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு சுரணையற்ற , self-centred ஆன எதிர்வினையைச் சந்தித்ததில்லை என்றே சொல்லவேண்டும்.
தாராவுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:
ராமின் ஹைட் , வேய்ட் , பைஸப்ஸ் அளவு , இடுப்பு அளவு , அவனுடைய பொழுதுபோக்கு , அவன் படிக்கும் கல்லூரி முகவரி போன்ற விபரங்களையும் கொடுத்தால் இணைய தளத்தில் வெளியிட வசதியாக இருக்கும்.
***
கட்டுரையை முடித்து விடுகிறேன். இப்போது தாராவிடமிருந்து இரண்டு எதிர்வினைகளுக்கு சாத்தியம் இருக்கிறது. ஒன்று , அவர் இதைப் படிக்கப் போவதில்லை. (ஏனென்றால் , நான் இது பற்றி அவரிடம் சொல்வதாக இல்லை). இரண்டு , அவர் தப்பித் தவறி படிக்க நேர்ந்தால் மேலே நான் கேட்டுள்ள விபரங்களையும் அனுப்பி வைத்தாலும் வைப்பார்.
என்னைப் பாராட்டுகிறீர்கள் என்பதால் பதிலுக்கு என்னிடம் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். நான் அப்படிப் பட்டவன் அல்ல. உங்கள் வாழ்விலும் சிந்தனையிலும் கொஞ்சமாவது சுரணையுணர்வோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் என்னைத் திட்டினாலும் நான் உங்களைப் பாராட்டுவேன்.
Source : http://www.charuonline.com/
0 comments:
Post a Comment