கேள்வி பதில் என்று ஒரு பகுதியை ஆரம்பிக்கலாம் என்று தோன்றிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் பாபுராவ் பட்டேலின் ( 1904-82) கேள்வி பதில் பகுதியை மிக விருப்பமாகப் படிப்பேன். அவர் அந்தக் காலத்தில் இருந்த ஜன சங்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது அரசியல் கருத்துக்களைத் தவிர மற்ற எல்லா விதத்திலும் அவர் என்னை வெகுவாக் கவர்ந்தவராக இருந்தார். மிகத் தேர்ந்த ஜோதிடர். ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை மணந்து கொண்டார் ; அதற்குப் பிறகு ஒரு நடிகையை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். (ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்!) திரைப்பட விமர்சகர் ; இயக்குனர் ; பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் ; புகழ் பெற்ற பத்திரிகையாளர் , ஹோமியோபதி மருத்துவர் என்று பல பெருமைளைக் கொண்டவர் பாபுராவ் பட்டேல். 1935- இல் ஃபிலிம் இந்தியா என்ற சினிமா பத்திரிகையைத் துவக்கினார். பின்னர் இது மதர் இந்தியா என்ற அரசியல்
பத்திரிகையாக மாறியது. நான் என்னுடைய கல்லூரிப் பருவத்தில் மதர் இந்தியாவைத் தவறாமல் படித்து வந்திருக்கிறேன். அதில் அவருடைய கேள்வி பதில் பகுதி பக்கம் பக்கமாக வெளி வரும். அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்வி பதில்கள்:
கே: உங்கள் சிந்தனைகளைச் சேகரித்துக் கொள்வதற்காகத்தான் அதிகம் பேருடன் பழகுகிறீர்களா ?
ப: நான் குப்பை பொறுக்குபன் அல்ல. நான் ஒரு சிந்தனையாளன். என் சிந்தனை தன் சிறகுகளை விரித்து இந்த உலகமெங்கும் பறந்து செல்கிறது. அச்சிந்தனையோடு இணையான அலைவரிசையைக் கொண்டவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள் ; சிலர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். அந்த அலைவரிசையில் இல்லாதவர்கள் அதை இழந்து விடுகிறார்கள்.
கே: சினிமாவில் நுழைவதற்கு ஒரு சுலபமான வழி சொல்லுங்களேன் ?
ப: உங்கள் ஊரில் உள்ள மிக அழகான பெண்ணைப் பிடித்து அழைத்துக் கொண்டு சினிமா கம்பெனி பக்கம் செல்லுங்கள். இது தவிர , இன்னொரு வழியும் இருக்கிறது. அது கொஞ்சம் கடினமான வழி.
கே: நம் நடிகைகளில் எத்தனை பேர் கன்னிப் பெண்கள் ?
ப: கன்னித் தன்மை கொண்ட நடிகைகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. மேலும் , இந்த நவீன யுகத்தில் கன்னித் தன்மை என்பது ஒரு புராதன கால வஸ்துவாகி விட்டது. வேண்டுமானால் கிராமங்களில் போய் தேடிப் பாருங்கள் ; ஒருவேளை கிடைக்கலாம்.
பாபுராவ் பட்டேலின் சினிமா விமர்சனங்களும் , அரசியல் விமர்சனங்களும் மிகக் கூர்மையானவை. புகழ் பெற்ற இயக்குனர் V. சாந்தாராமின் நவ்ரங்க் ( 1959) படத்தைப் பற்றி பாபு ராவ் எழுதினார்: "இது ஒரு வயதான ஆளின் மென்ட்டல் மாஸ்டர்பேஷன்."
***
தமிழில் கேள்வி பதில் என்று எடுத்துக் கொண்டால் எனக்குப் பிடித்த பகுதி குமுதத்தின் அரசு பதில்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அரசு பதில்களை விரும்பிப் படித்து வருகிறேன். எஸ்.ஏ.பி.யை மிகவும் கூர்ந்து கவனித்து வந்தவன் நான். என் நண்பன் நிக்கியிடம் அடிக்கடி சொல்லுவேன் , என்னிடம் ஒரு வாரப் பத்திரிகையின் பொறுப்பு கொடுக்கப் பட்டால் அதை ஒரு வருட காலத்தில் என்னால் 5 லட்சம் பிரதிகள் அளவுக்குக் கொண்டு வர முடியும் என்று. அந்த அளவுக்கு எஸ்.ஏ.பி.யின் நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது ஒரு அலுவலகத்துக்கு தினசரி காலை 10 மணிக்குச் செல்லும் மனநிலையை இழந்து விட்டேன். எஸ்.ஏ.பி.யின் மறைவுக்குப் பிறகும் கூட அரசு பதில்களின் சுவாரசியம் குன்றாமல் இருந்து வருவது பாராட்டுகுரியதுதான்.
எனக்கு 14 வயது இருக்கும் போது அரசுவுக்கு ஒரு கேள்வியை அனுப்பி வைத்தேன். நான் எதிர்பாராத விதமாக அந்தக் கேள்வி பிரசுரமும் ஆகி விட்டது. அவ்வளவுதான். எங்கள் ஊரே என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டது. ஏனென்றால் , அந்த ஏடாகூடமான கேள்வியை என் சொந்தப் பெயரில் அனுப்பி வைத்திருந்தேன். என் சினேகிதர்களின் வீட்டில் எல்லாம் என்னை உள்ளே விடவே மறுத்தார்கள். அந்தச் சமயத்தில் என் அம்மா தான் என் பாதுகாப்புக்கு வந்தார்கள். "அவன் என்ன கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டான். அவர் ஒரு ஆண் பிள்ளைதானே ?" சமூகத்தில் ஆண் பிள்ளையாக இருப்பதன் அனுகூலத்தை அன்று நான் உணர்ந்தேன். நான் அரசுவிடம் கேட்ட அந்தக் கேள்வி இது தான்: "எனக்கு எப்போது பார்த்தாலும் செக்ஸ் உணர்வு அதிகமாகவே இருந்து கொண்டிருக்கிறது ; அது பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி , கோவில் கர்ப்பக்கிரகமாக இருந்தாலும் சரி. இதற்கு என்ன செய்யலாம் ?" எஸ்.ஏ.பி. என்ன பதில் சொன்னார் என்று ஞாபகம் இல்லை.
***
கேள்வி பதில் விஷயத்தில் சில எதிர்பார்க்காத இடங்களிலிருந்தெல்லாம் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. திரைப்படங்களில் நல்ல பாடல்கள் மட்டுமே எழுதக் கூடியவர் (ஆய்த எழுத்து) என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வைரமுத்து குமுதம் கேள்வி பதிலில் ரொம்பவே அசத்தி விட்டார். அயிரை மீன் குழம்பு வைக்கும் விதம் பற்றி அவர் எழுதியிருந்ததைப் படித்து அப்படியே எனக்கு நாவில் ஜலம் வந்து விட்டது. ஆனால் நான் பெரிதும் எதிர்பார்த்த பால குமாரன் பதில்கள் Horrible!
சுஜாதாவை விட்டு விடலாம். ஏனென்றால் அவர் எது எழுதினாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும்.
சரி , இப்போது அடியேனின் கேள்வி பதில் பகுதி:
அன்பு சாருவுக்கு
உங்கள் கட்டுரைகளை தினமும் இணையத்தில் வாசித்து வருகிறேன். பாலியல் குறித்த உங்கள் பார்வை மிகக் கூர்மையாக உள்ளது. இந்தியர்களின் வாழவின் சகல அம்சங்களிலும் அடக்கி வைக்கப் பட்ட காமமே தெரிகிறது என்பதைத் தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். நான் ஓஷோவை விரும்பி வாசிக்கக் கூடியவன். உங்கள் கருத்தும் ஓஷோவின் கருத்தும் பாலியல் விஷயத்தில் மிகச் சரியாகப் பொருந்துவதை கவனித்து வியந்திருக்கிறேன். சூ · பி தத்துவத்தையும் , வைணவத்தையும் ஆழ்ந்து படிப்பவர் நீங்கள். உங்கள் வாழ்வில் ஓஷோவின் தத்துவம் ஏதாவது பாதிப்பைச் செய்திருக்கிறதா ?
அன்புடன் ,
அருண்.
15 ஆண்டுகளுக்கு முன்பு என் திருச்சி நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் மாணிக்கம்தான் எனக்கு ஓஷோவை எனக்கு அறிமுகம் செய்தனர் , ஒரு கேஸட்டின் வழியாக. முதலில் அவர் குரலைக் கேட்டு அசந்து போனேன். அப்படியே கேட்போரை வசியம் செய்யக் கூடிய குரல். அடுத்து அவரது ஆங்கில உச்சரிப்பு. ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் எந்த ஆங்கில உச்சரிப்பைக் கிண்டல் செய்வார்களோ அதே உச்சரிப்பு. ஆனால் அவர் சொல்லும் விஷயம்...அப்படியே என் மனதில் நான் என்ன நினைக்கிறேனோ அதை அவர் பேசிக் கொண்டிருந்தார். அன்றே நான் ஓஷோவைப் படிப்பதையோ , கேட்பதையோ விட்டு விட்டேன். ஏனென்றால் அவரைப் படித்தால் எனக்கு நானே plagiarist என்று தோன்றும். ஆனால் இப்போது , குறைந்த பட்சம் , எனக்கு மட்டுமாவது நான் ப்ளேஜியரிஸ்ட் அல்ல என்று தெரியும் அல்லவா ? இதே போல் ஸில்வியா ப்ளாத்தையும் நான் படிப்பதில்லை. ஏனென்றால் , என் மனதில் என்ன ஓடுகிறதோ அதே வார்த்தைகளைத்தான் அவரும் எழுதி வைத்திருக்கிறார்.
ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார் என அறியப் பட்டது ஒரு சோகம். என்னிடம் ஒரு கட்டுரை கேட்ட ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் தயங்கிய குரலில் "கட்டுரையில் செக்ஸ ¤ ம் குடியும் வேண்டாம்" என்று கூறினார். வருத்தமாக இருந்தது. என்னைப் பற்றி அவர் மனதுள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தையே அவர் என்னிடம் தெரிவிக்கிறார். உண்மையில் அந்த பிம்பத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஓஷோ ஒரு தத்துவவாதி. நான் ஒரு எழுத்தாளன். அவ்வளவுதான் வித்தியாசம்.
30.3.2008.
Source : www.charuonline.com
0 comments:
Post a Comment