கமலும் நானும்

on Saturday, April 4, 2009

கடந்த முப்பது வருடங்களாக கமல்ஹாசனை கூர்ந்து கவனித்து வருகிறேன். அவருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருந்து வருவது போலவே தோன்றிக் கொண்டிருக்கும். எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் என்று ஒரு நண்பர் உண்டு. அவர் ஒரு நாள் சொன்னார். "நேற்று டீவில கமல் பேட்டி போட்டான். என்ன சாரு , அந்த கமல் உங்களை மாதிரியே பேசுறான். உடனே டக்னு சேனலை மாத்திட்டேன்." அவர் நேற்று என்று குறிப்பிட்ட தினம் தீபாவளி நாள். அந்த நன்னாளில் கமல் சில விஷயங்களை (உண்மைகளை)

பச்சையாகச் சொல்லிவிட்டாராம். இது போல் பல சந்தர்ப்பங்களில் பல நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். (அதுசரி , சினிமா நடிகர்களை ஏன் மக்கள் அவன் , இவன் என்று ஒருமையில் பேசுகிறார்கள் ?)

கமலோடு எனக்கு கடிதப் பரிமாற்றம் உண்டு. தொலைபேசியிலும் பேசியிருக்கிறேன். கார்த்திக் அப்போது சிறு பையன். கைத்தொலைபேசி வந்திராத நேரம். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் "டாடி , கமல்னு ஒருத்தர் போன் பண்ணினார்" என்றான். எனக்குப் புரிந்து விட்டது. "டேய் , அவர் ஒருத்தர் இல்லடா. கமல்ஹாசன். ஆக்டர்" என்றேன். அவன் அதற்கு , பாமரன் என் எழுத்துக்களை எவ்வாறு எதிர் கொள்கிறாரோ அதே தினுசில் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

மகாநதியை வெகுவாக சிலாகித்து 1993- இல் கணையாழியில் ஒரு நீண்ட விமர்சனம் எழுதியிருந்தேன். அதை கமல் படித்திருப்பாரோ இல்லையோ என்று ஒரு அவா உசாவியது என்னுள். பிறகு அந்த அவாவை ஒரு ஓரம் கடாசி விட்டேன். ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய அந்த அவாவுக்கு பதில் கிடைத்தது. என் நண்பர் தியோடர் பாஸ்கரன் தமிழில் வெளி வந்த சினிமா பற்றிய முக்கியமான கட்டுரைகளை ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார். அதில் மகாநதி பற்றிய என் கட்டுரையும் இருந்தது. ஒருநாள் தியோடர் பாஸ்கரன் போன் செய்து "உங்கள் கட்டுரை நன்றாக இருந்ததாக கமல் சொன்னார்" என்றார். அடிக்கடி கமல் வருத்தப் படுவதுண்டு , எழுத்தாளர்களுக்கும் திரையுலகக் கலைஞர்களுக்குமான தூரம் அதிகமாக இருக்கிறது என்று. ' அடக் கடவுளே , அந்த தூரம் 15 ஆண்டுகளா! ' என்று நினைத்துக் கொண்டேன். குருதிப் புனலைப் பற்றி நான் எழுதியிருந்த கடுமையான விமர்சனத்தை அவரிடம் காட்டியவர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டார்கள். பொதுவாக அதுதான் நம்மவர்கள் வழக்கம். (தியோடர் பாஸ்கரன் மட்டும் அந்த சினிமா புத்தகத்தைத் தொகுத்திருக்காவிட்டால் இன்னமும் கமல் என்னுடைய மகா நதி விமர்சனத்தைப் படித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது).

சினிமா நடிகர் என்றால் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அலசுவது 6 கோடித் தமிழ் மக்களின் வழக்கம். அதன்படி , நாம் விரும்புகிறோமோ இல்லையோ எல்லா நடிகர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நம் காதுகளில் வந்து விழும் செய்திகள். அப்படி , கமலைப் பற்றி விழுந்த விஷயங்கள் பலவும் என் வாழ்க்கைச் சம்பவங்கள் பலவற்றை ஒத்திருந்தன.

ஆனால் கமலை நான் நேரில் சந்த்திததில்லை. அப்படிச் சந்திக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் சமீபத்தில் மிக துரதிர்ஷடமான ஒரு இடத்தில் நிகழ்ந்தது. 27-2-2008 அன்று ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் சுஜாதா வீட்டில் நின்று கொண்டிருந்தேன். சுஜாதாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்தது. சுஜாதா இப்படி கண்ணாடிப் பேழையில் வைக்கப் பட்டிருக்கும் போதா இவர் வீட்டுக்கு வர நேர வேண்டும் என்ற வருத்தம் மேலிட்டது. ஏனென்றால் கடந்த ஒரு வருட காலமாக இந்த வீட்டைக் கடந்துதான் தினசரி காலை ஐந்தரை மணி அளவில் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குச் சென்று கொண்டிருந்தேன். தற்சமயம் யோகாவில் இறங்கி விட்டதால் வாக்கிங் செல்வதில்லை. தினமும் ஐந்து மணிக்குக் கிளம்பி

ராமகிருஷ்ணா மடம் சாலை வழியே சென்று மடத்தின் வெளியிலேயே நின்று (காலில் ஷூ ) பரமஹம்சருக்கு ஒரு ஸல்யூட் அடித்து விட்டு , நேரே சென்று இடப்பக்கச் சாலையில் திரும்பி நடந்து பாபா கோவிலின் வெளியே நின்றபடி ஓரிரு நிமிடம் தியானித்து விட்டு , நேரே போய் வலது பக்கம் திரும்பி அங்குள்ள குடிசைப் பகுதியைக் கடந்து இடப்பக்கம் திரும்பினால் சுஜாதா வசிக்கும் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை. ( 15 ஆண்டுகளுக்கு முன்னால் நான் மந்தைவெளி கல்லறைத் தெருவில் - செய்ன்ட் மேரீஸ் தெரு - இருந்தபோது இந்தப் பக்கம் அடிக்கடி வருவதுண்டு. அப்போது இந்தக் குடிசைப் பகுதியின் பெயர் காட்டு நாய்க்கன் குடியிருப்பு என்பதாக இருந்தது) அந்த சுந்தரம் சாலையைக் கடந்தால் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வரும். (என் வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் உண்டு!) அதைத் தொடர்ந்து வருவது நாகேஸ்வர ராவ் பூங்கா என்ற குட்டி சொர்க்கம்.

ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையைக் கடக்கும் போதெல்லாம் சுஜாதாவைப் பற்றிய ஏதாவது ஒரு நினைவு ஓடும். நமக்கு மிகப் பிடித்த ஒரு தமிழ் எழுத்தாளனோடு நாம் ஏன் நேரில் பழகாமால் இருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ஆனால் சுஜாதாவே இதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார். ஒரு நல்ல வாசகன் அவனுக்குப் பிடித்த எழுத்தாளனைச் சந்திக்க மாட்டான்.

கண்ணாடிப் பேழைக்குச் சற்றுத் தள்ளி நானும் கனிமொழியும் நின்று பேசி கொண்டிருக்கிறோம். ம்ஹூம். பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தவறு. இம்மாதிரி இடங்களில் என்ன பேசுவது ? வெறுமனே நின்று துக்கத்தைத் தின்று கொண்டிருந்தோம். அப்போது மதன் வந்தார். கை கொடுத்து என் பெயர் சொன்னேன். "நன்றாகத் தெரியும் ; சற்று முன்பே உங்களைச் சந்ததித்து விட்டேன் , கண்களால் ; இப்போதுதான் கை கொடுக்கிறேன்" என்று அவர் சொன்னதை ரசித்தேன். திரும்பினால் கமல். என் எதிரே நின்று கனிமொழியிடம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முகமன் கூறிப் பேசுவதும் செயற்கையாக இருக்கும். பேசாமல் இருப்பதும் செயற்கையாக இருக்கும். இரண்டாவது செயற்கையையே தெரிவு செய்தேன். கண்களும் சந்த்தித்துக் கொள்ளவில்லை.

இதற்கடுத்த இரண்டாவது நாள் சுஜாதா இரங்கல் கூட்டம் நாரத கான சபாவில் நடந்தது. நிறைய பேர் பேசினர். நானும் பேசினேன். எனக்குப் பின்னர் பேசிய கமல் "சாரு நிவேதிதா பேசியதையே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆரம்பித்து மேலும் சில விஷயங்களைச் சொன்னார். எனக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவன் ஞாபகம் வந்தது.

***

இரண்டு மாதங்களுக்கு முன்னால் நிக்கியும் , அவர் தோழி ஒருவரும் , பாலு அய்யேயெஸ்ஸும் பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் அமர்ந்திருந்தனர். பின்னர் அங்குள்ள தக்ஷண் ரெஸ்தொராந்த் சென்றனர். நிக்கியும் தோழியும் பேசிக் கொண்டிருக்கும் போது பாலு என்ன செய்வான் , பாவம். நானும் இல்லை. சுற்றும் முற்றும் பராக்குப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். நாங்கள் எப்போதும் அமர்வது வலப்பக்க மூலை என்பதால் வலப் பக்கம் திரும்பினால் வெறும் சுவர்தான் தெரியும் என்பதால் இடப்பக்கம் திரும்பியிருக்கிறான். இடப்பக்கம் இரண்டு இளம் பெண்கள். இளம் பெண்கள் என்றால் 17, 18 வயது டீன் ஏஜ் பெண்கள். இவன் வெறித்து வெறித்துப் பார்க்க , ஒரு பெண் இவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தி , சைகையிலேயே ' என்ன ?' என்று கேட்டிருக்கிறாள். உடனே எக்கச்சக்கமாக மிரண்டு போன பாலு , இந்தப் பக்கம் திரும்பி விட்டான். ஆனால் எவ்வளவு நேரம் சுவரையே பார்த்துக் கொண்டிருப்பது ? திரும்பவும் இடப்பக்கம். திரும்பவும் அந்தப் பெண் - அதே பெண் - பாலுவைப் பார்த்து புருவத்தை உயர்த்த , திடீர் துணிச்சல் பெற்ற பாலுவும் புருவத்தை உயர்த்தியிருக்கிறான். அதற்கு அந்தப் பெண் திரும்பவும் புருவத்தை உயர்த்த - எவ்வளவு நேரம்தான் புருவத்தைப் புருவத்தை உயர்த்திக் கொண்டிருப்பது , புருவம் வலிக்காதா ? - பாலு நேரடியாக அந்தப் பெண்ணீடம் "இங்கே பாருங்கள் ஸிஸ்டர்...இந்த ரெண்டு பேர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு போர் அடிக்கிறது. நீங்கள்தான் கொஞ்சம் என் மீது இரக்கப் பட்டு இங்கே வந்து உட்காருங்களேன்" என்று கூப்பிட அந்த இரண்டு பெண்களும் மகா பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்து விட்டு இந்த இடத்துக்கு வந்து விட்டனர் (ஸிஸ்டர்தான் அந்த நகைச்சுவை). அப்போதுதான் அவர்கள் சாப்பிட்டும் முடித்திருந்தார்கள். (அவர்கள் சாப்பிட்டதற்கு அவர்கள்தான் பைசா கொடுத்தார்கள் என்றார் நிக்கி).

உடனே எல்லோரும் பல காலம் பழகியதைப் போல் பழக ஆரம்பித்து விட்டார்கள். இரண்டு பேரில் ஒருத்தியின் பெயர் அங்கிதா. கிழக்காசிய நாடு ஒன்றைச் சேர்ந்த தமிழ்ப் பெண். சற்று பூசினாற் போன்ற தேகம். வெரி செக்ஸி. இரண்டாமவள் குஜராத்தி சேட் வீட்டுப் பெண். அல்கா. இரண்டு பேரும் இங்கே ஒரு கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறார்கள். இருவருமே சொன்னது , நிக்கியையும் பாலுவையும் போன்ற அருமையான , இனிமையான நபர்களைத் தங்கள் வாழ்விலேயே பார்த்ததில்லை.

மறுநாள் பாலு ஈ.சி.ஆர். ரோட்டில் ஏதோ வேலையாக காரில் சென்று கொண்டிருக்கிறான். காலை பத்து மணி. அங்கிதாவிடமிருந்து போன். எங்கே இருக்கிறீர்கள் என்றதும் சொல்லியிருக்கிறான். "அடடா , எங்களிடமும் சொல்லியிருக்கலாம் அல்லவா ? இங்கே நாங்கள் சும்மாதானே போர் அடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் ?" இவன் பதிலுக்கு மதியம் கூப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டான். மதியம் போன். அங்கிதா. "ஓ , சங்கிதா (பாலுவுக்கு அங்கிதா என்றெல்லாம் சொல்ல வராது) , இப்போ நான்

கொஞ்சம் சரக்கு சாப்பிட்டுவிட்டேன். ஈவ்னிங் கூப்பிடுகிறேன்." மாலையும் அங்கிதாவிடமிருந்து போன். "அட்டா , சங்கிதா...இப்போ சரக்கு கொஞ்சம் ஜாஸ்தியாப் போய்டுச்சு...நாளைக்குக் கூப்பிடுறேன்."

சொன்னபடி மறுநாள் சந்த்தித்திருக்கின்றனர். பார்க் ஷெரட்டன். வெஸ்ட்மின்ஸ்டர். அந்தப் பெண்களுக்குக் குடிக்கும் பழக்கம் இல்லை. (ஆச்சரியம்). அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடல் இது.

சங்கீதா நிக்கியிடம் கேட்கிறாள். "அந்த லேடி யார் , உங்கள் மனைவியா ?"

" ஐய்யய்யோ , அந்தப் பெண்ணுக்கு 25 வயசுதான் இருக்கும். என் வயசு 50. அவள் எப்படி என் மனைவியாக இருக்க முடியும் ?"

" என்னது , உங்கள் வயது ஐம்பதா , நம்பவே முடியவில்லையே ?"

" என் மகன் வயசே 25. வேலையில் இருக்கிறான்."

" அடடா , அப்போ அவனையே நாங்கள் · ப்ரண்ட்ஸா வச்சுக்கிறோம். அவன் போட்டோவைக் காட்டுங்கள். உங்கள் செல் போனில் இருக்கும்தானே ?"

" சீ...சீ..என் வில்லன் போட்டொவை நானே எப்படி வைத்திருப்பேன் ?"

" ஓ காட்...இந்த அளவுக்கு நகைச்சுவையாகப் பேசும் ஆட்களை நாங்கள் பார்த்ததே இல்லை."

இதையெல்லாம் கேட்டுக் கேட்டு என் நவ துவாரத்திலும் புகை வர ஆரம்பித்தது. ஒரு அளவு இல்லையா ? 18 வயதுப் பெண்களா தோழிகள் ?

***

சென்ற வாரத்தில் ஒரு நாள் நானும் , பாலுவும் , நிக்கியும் வெஸ்ட்மின்ஸ்டரில் அமர்ந்திருந்தோம். அப்போது அந்தப் பெண்களைப் பற்றிய கதை ஓடிக் கொண்டிருந்தது. நான் ' பேரர் ' ஆறுமுகத்திடம் ஒரு பேனாவும் காகிதமும் கேட்டு இதைக் குறித்துக் கொண்டேன். (எனக்கு ஞாபக மறதி அதிகம்). Dakshin. Two girls. Baalu & Nikki. இவ்வளவுதான் குறிப்பு. இது போதும். மற்றதையெல்லாம் ஞாபகத்திலிருந்து அள்ளிவிடலாம். அப்போது வந்தார்கள் அந்த இரண்டுப் பெண்களும். நான் என் வழக்கமான இடத்தை விட்டு வேறொரு நாற்காலிக்கு மாறினேன்.

என் இடத்தில் அம்ர்ந்த அங்கிதா , அந்த இடத்தில் இருந்த குறிப்பேட்டைப் பார்த்து விட்டு "இது என்ன டூ கேர்ள்ஸ் ? தக்ஷண் ? யார் அது நிக்கி ?" என்று எங்களைப் பார்த்துக் கேட்க , நாங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டு பேச்சை மாற்றினோம். நிக்கி என்னை ஒரு விதமாகப் பார்த்தான். ' என்னென்ன பிரச்சினையெல்லாம் கொடுக்கிறாய் பார்த்தாயா ?' என்பது போல் இருந்தது அவன் பார்வை.

அவர்கள் இருவரும் என்னை அங்கிள் என்று அழைக்காமல் , சாரு என்று பெயர் சொல்லி அழைத்தது என் தவப்பயன் என்றுதான் என்று சொல்ல வேண்டும்.

அப்போது அந்த அல்கா என்னைப் பார்த்து "நீங்கள் கமல் போலவே இருக்கிறீர்கள்" என்று சொன்னாள். ஒரு முறை அல்ல. நான்கைந்து முறை சொன்னாள். கிளம்பும் போது அவர்கள் ரெஸ்ட் ரூம் சென்றிந்த தருணத்தில் நிக்கி என்னிடம் சொன்னான். "அந்த அல்கா என்ன , ஒரேயடியாக உளறுகிறாள் ?" " என்ன ?" " உன்னைப் போய் கமல் , கமல் என்கிறாள். இடியட். நீ சாதாரணமாக நடக்கும் போதே குடித்து விட்டு நடக்கிறாயா , குடிக்காமல் நடக்கிறாயா என்று தெரியாது. அப்படி நடப்பாய். உன்னைப் போய் கமல் என்கிறாள். லூஸு ..."

நிக்கி இப்படிச் சொன்னது ஒரு பழி வாங்குதலுக்காகத்தான். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

***

29.3.2008.


Source : www.charuonline.com

0 comments:

Post a Comment