பின் தொடரும் நிழல் !

on Tuesday, April 7, 2009

அது ஒரு வியாழக் கிழமை ; காலை ஏழு மணி இருக்கும். வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த என் சகதர்மினி மீரா , திடீரென்று , "" வியாழக்கிழமையும் , அதுவுமா இப்படியா ஒரு வாயில்லா ஜீவனைக் கொல்றது... சாயி ராம்! '' என்று வருத்தத்துடன் சொன்னாள்.

"" என்னம்மா , என்ன சொல்கிறாய் ?'' என்று கேட்டபோது , என் கட்டிலுக்குக் கீழே நசுங்கிக் கிடந்த ஒரு மரவட்டையைக் காண்பித்தாள்.

ஆம்! தூங்கியெழுந்ததும் அந்தக் காரியத்தைச் செய்தவன் நான் தான். எனக்கு மரவட்டை என்றாலே பயம். கட்டிலை விட்டு எழுந்ததும் கீழே பார்த்தால் மரவட்டை. பயத்தில் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் , செருப்பைப் போட்டு அதை ஒரு நசுக்கு நசுக்கினேன். நரநரவென்ற சப்தத்துடன் செத்துப் போனது மரவட்டை. அதோடு அதை மறந்து போனேன்.

இப்போது மீரா சொன்னதும் , ஏதோ ஒரு கொலை செய்து விட்டது போல் தோன்றியது. வியாழக்கிழமை பாபாவுக்கு உகந்த நாள். இன்றைக்குப் பார்த்து இதை நான் செய்திருக்கக் கூடாது தான். ஆனால் , வெள்ளிக்கிழமை செய்திருந்தாலும் , இதையே தான் சொல்லியிருப்பாள் மீரா. என்ன , கடவுளின் பெயர் தான் மாறியிருக்கும்!

ஒருநாள் கூட தப்ப முடியாது. ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாள் தான். செய்தது தப்பு ; பேசாமல் ஒரு குச்சியால் எடுத்து , அதை வெளியே போட்டிருக்கலாம். அனாவசியமாக எந்த உயிரையும் இனி கொல்வதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அனாவசியமாக என்ற வார்த்தையைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் ஒரு தீவிர அசைவம் , உணவில் குறைந்த பட்சம் ஒரு சுட்ட கருவாடாவது இருக்க வேண்டும் என்று நினைப்பவன் ; இல்லாவிட்டால் , அது எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் இறங்காது. ஆனால் , அசைவ உணவைப் பொறுத்தவரை தமிழ்நாடு கொஞ்சம் பிரச்னையான இடம் தான். சிங்கப்பூரிலிருந்து என் நண்பர் கவுதம் இங்கே வந்த போதுதான் அதை உணர்ந்தேன்.

கவுதம் , சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர். அவருக்கு காபி , டீ தவிர மற்ற எல்லாவற்றிலும் அசைவம் இருக்க வேண்டும். காலையில் ஆப்பம் அல்லது இடியாப்பத்தோடு பாயா. கீரையில் நெத்திலி பொடி. பிரெட் என்றால் அதில் சார்டின் மீன்.

கவுதம் பரவாயில்லை. அவர் மகன் இன்னும் மோசம். ஒரு முறை , மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் போது , கவுதமின் மனைவி சென்னைவாசி என்பதால் , மனைவியையும் , மகனையும் சென்னையில் விட்டு விட்டு சென்றார்.

பையனுக்கு நம்மூர் உணவு பிடிக்கவில்லை. இங்கே அசைவக் காரர்கள் என்ன செய்கின்றனர் ? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் கறி வாங்கக் கிளம்புகின்றனர். அந்த நாட்களில் ஏதோ ரஜினியின் புதுப்படம் ரிலீஸ் ஆன மாதிரி மட்டன் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதெல்லாம் சைவர்களுக்குத் தெரியாத பிரச்னை. இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் , பெரும்பாலான கடைகளில் கிடைப்பது செம்மறி ஆடு.கடித்தால் ஜவ்வு மாதிரி , " சவுக் , சவுக் ' என்று மென்றுகொண்டே இருக்க வேண்டியது தான். நூற்றில் ஒரு கடையில் தான் வெள்ளாடு கிடைக்கும்.

நிலமை இப்படியிருக்க , கவுதமின் பையன் சாப்பாட்டில் தொட்டுக் கொள்ள ரத்தப் பொறியல் கேட்பான்.

கவுதமின் மாமனார் ஒரு கோடீஸ்வரர். இருந்தாலும் , ரத்தப் பொரியலுக்கு எங்கே போவர் ? அதெல்லாம் நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்காது. முனியாண்டி விலாசில் வாங்கிக் கொடுக்க அவர்களுக்கு பயம்.

" ரத்தப் பொரியல் இல்லாவிட்டால் , மூளை வறுவல் கொடுங்கள்! ' என்று அடம் பிடித்துள்ளான் பையன்.

ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது ; போய் பார்த்தேன். சிங்கப்பூரில் கொழு , கொழு என்று இருந்தவன் இப்போது இளைத்துத் துரும்பாக மாறியிருந்தான்.

மூளை , ரத்தம் எல்லாம் கூடப் பரவாயில்லை... வேர்க்கடலையில் சென்னாங்குனி போட்டுக் கேட்கிறான்.

சென்னாங்குனி மீன் நம் விரல் நகம் சைசுக்கு இருக்கும். மலேசியா , பர்மா போன்ற கிழக்காசிய நாடுகளில் வேர்க்கடலையில் கூட சென்னாங்குனி மீனைப் போட்டுத் தான் சாப்பிடுவர்.

கவுதமின் பையனைப் பார்த்த போது தான் நான் ஏன் இப்படி ஒரு மீன் பைத்தியமாக இருக்கிறேன் என்பதே எனக்கு விளங்கியது. காரணம் , என் அம்மாச்சி அம்மாவைப் பெற்ற பாட்டி ஒரு பர்மீஸ் காரி. என் அம்மா வழித் தாத்தா ரங்கூனில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு பர்மாக்காரியையே மணம் செய்து கொண்டிருந்தார்.

சின்ன வயதில் அவரைப் பார்த்திருக்கிறேன். சட்டையை உள்ளே விட்டு லுங்கியை அதற்கு மேல் கட்டிக் கொள்வார். "யார்ரா இது பைத்தியம் ?' என்று அப்போது , நினைத்துக் கொள்வேன். பர்மாவின் தேசிய உடை லுங்கி தான். சென்ற ஆண்டு தாய்லாந்து சென்றிருந்த போது , பர்மாவுக்கும் விசிட் அடித்தேன். நரகத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது ; முக்கியமாக , செக்ஸ் தொழில்.

உலகில் எல்லா நாடுகளிலும் அந்தத் தொழில் செழிப்பாகவே நடந்து கொண்டிருந்தாலும் , பர்மாவுக்கும் , மற்ற நாடுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதை கவனித்தேன்.

பர்மாவின் செக்ஸ் தொழிலாளிகள் முக்கால்வாசிப் பேர் சிறுமிகள். 12 வயதிலிருந்து 16 வயது இருக்கலாம். அதிலும் , ஒரு நாள் யாங்கூன் நகரின் பிரதான சந்தை வழியே நடந்து கொண்டிருந்த போது , என்னை இன்பத்துக்கு அழைத்த சிறுமியின் வயது 10 தான் இருக்கும். பணத்தைக் கொடுத்து விட்டு பேசிப் பார்த்தபோது , அது சிறுமி அல்ல ; சிறுவன் என்று தெரிந்தது. பணத்துக்காக சிறுமி வேடம் போட்டிருக்கிறான்.

நான் கொடுத்த தொகை நம்மூர் பணத்தில் ரூ. 50. அதற்கே என் காலைத் தொட்டு வாங்கிக் கொண்டான் சிறுவன்! ஆனால் , அதற்குப் பிறகு நடந்தது தான் பர்மியர்களின் இயல்பை எனக்குக் காட்டியது. அவனுக்குத் தெரிந்த பத்து , இருபது ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு , அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினேன்.கிளம்பும்போது பணத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்தான் சிறுவன். ஒன்றும் செய்யாமல் வாங்கிக் கொள்ள மாட்டானாம்! ஒருகணம் ஆடிப் போய் விட்டேன். பிறகு வற்புறுத்தி அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தேன். பிறகு தாய்லாந்து திரும்பிய போது தான் தெரிந்தது அந்நாட்டிலுள்ள பாதி செக்ஸ் தொழிலாளிகள் பர்மாவிலிருந்து இறக்குமதியானவர்கள் என்று.

தாய்லாந்து இப்போது வேகமாக முன்னேறி வருவதால் அங்குள்ள பெண்கள் இந்தத் தொழிலுக்கு வருவதில்லையாம். ஜாடையில் பர்மியப் பெண்களுக்கும் , " தாய் ' பெண்களுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை என்பதால் , " இறக்குமதி ' கன ஜோராக நடந்து வருகிறது. ஜாடை என்றதும் ஞாபகம் வருகிறது ; பர்மாவில் என்னிடம் எல்லாரும் பர்மிய மொழியிலேயே பேசத் துவங்கி விட்டனர். உங்களுக்கு முற்பிறவி என்பதில் நம்பிக்கை இருக்கிறதோ , இல்லையோ , இந்த ஜீன் விஷயத்தை நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பெண் சொன்ன விபரம் கேட்பதற்கே பயங்கரமாக இருந்தது.

செப்டம்பர் மாதம் 15, 1997. நூறு பேர் கொண்ட ராணுவத் துருப்பு ஒன்று , ஒரு பர்மிய கிராமத்தினுள் நுழைகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களை இப்படித் தேடுவது அங்கே அடிக்கடி நடக்கும் விஷயம். அப்படித் தேடும் போது ராணுவத்தினர் அந்த இடத்திலுள்ள பெண்களைக் கற்பழித்துக் கொன்று விடுவது வழக்கம். இதையெல்லாம் அங்கே யாரும் தட்டிக் கேட்க முடியாது. மீறிக் கேட்டால் ராணுவம் துப்பாக்கியால் தட்டி விடும். இதற்குப் பயந்து அந்த கிராமத்தினர் அனைவரும் ஒரு காட்டுக்குள் சென்று பதுங்கி விட்டனர். ஆனால் , தீவிரமான தேடுதலுக்குப் பிறகு அவர்கள் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டனர்.

பெண்கள் 40; ஆண்கள் 50. ஆண்கள் அனைவரையும் கட்டிப் போட்டு , அவர்கள் முன்னிலையில் அந்த 40 பெண்களையும் ஒருவர் பாக்கி விடாமல் ராணுவத்தினர் கற்பழித்திருக்கின்றனர். இரண்டு இரவுகளும் , இரண்டு பகல்களும் நீண்டது அந்த வன்கலவிச் சம்பவம்.

பிறகு , அத்தனை பேரையும் சுட்டுக் கொன்றது ராணுவம். இதில் தப்பிப் பிழைத்த ஒரே ஒரு பெண் பர்மிய எல்லையைக் கள்ளத்தனமாகக் கடந்து தாய்லாந்து வந்து விட்டாள். பாங்காக்கின் சிவப்பு விளக்குப் பகுதி ஒன்றில் ஒருநாள் அந்தப் பெண்ணை நான் சந்தித்தேன். எனக்கு தாத்தாவின் ஞாபகம் வந்தது. யார் கண்டது ? ஒருவேளை , இவள் எனக்கு உறவுக் காரியாகக் கூட இருக்கலாம்!


Source : http://www.charuonline.com

0 comments:

Post a Comment