சிந்தாதிரிப் பேட்டைக்கு வழி என்ன ?

on Saturday, April 4, 2009

அன்புமிக்க சாரு அவர்களுக்கு ,

முதல் வரியிலேயே கடிதத்தை அழித்து விட்டால் மிக்க சந்தோஷம்.

கேள்வி பதில் கட்டுரை மிக அருமை. ஒஷோவைப் பற்றிய தங்களின் கருத்து கல்வெட்டு உண்மை. ஆனால் அவரைப் புரிந்து கொள்ள மனிதனுக்கு நீண்ட வாசிப்பும் , வாழ்வின் அனுபவங்களும் தேவை என்று நினைக்கிறேன். புரியாத வயதில் ஒஷோவைப் படித்த நான் , புரிந்து கொள்ளாமலே படிக்க நேரிட்ட கொடுமையை என்னவென்று சொல்லுவது.

உண்மைச் சிந்தனைவாதிகளை ( எழுத்தாளனை ) இவ்வுலகம் உதாசீனப்படுத்தியே வந்திருக்கின்றது. ஆனால் அவனின் எழுத்துக்கள் என்றும் சாகா வரம் பெற்றவை. உங்களை பாரதியின் மறு உருவமாகவே பார்க்க நேரிடுகிறது என்று சொல்ல வந்தால் என்னை யாருடனும் ஒப்பிடுவது எனக்குப் பிடிக்காது என்ற தங்களின் பேச்சைக் கேட்டவனாதலால் சொல்ல முடியவில்லை என்றாலும் , நமக்குத் தெரிந்தவர்களுடன் தான் சிலரை ஒப்பிட்டு நோக்கிவது தமிழர் மரபு என்பதால் , வேறு வழியின்றி சொல்ல வேண்டிய நிலைக்கு ஆட்பட வேண்டியதாகி உள்ளது.

கடைசி வரியில் இந்தக் கடிதத்தை அழித்துவிட்டால் மிக்க சந்தோஷம்.

குறிப்பு : இது உங்களை வாசிக்கும் தங்கவேலின் கடிதம். உங்களது இணைய தள நிர்வாகியின் கடிதம் அல்ல. எப்படி என்னால் என் குழந்தைக்கு தந்தையுமாய் , மனைவிக்கு கணவனுமாய் இருக்கின்றேனோ அதுபோல எடுத்துக்கொள்ளவும்.

சுவாசிக்கும்

தங்கவேல்

ஒப்பீடு செய்யும்போது ஒரு பிரச்சினை இருக்கிறது. என் எழுத்தைப் பிடிக்காதவர்களுக்கு அது நகைச்சுவையாக இருக்கும். எழுத்துலகம் இன்று அப்படித்தான் இருக்கிறது. சினிமா உலகத்தைப் போல. எக்ஸ் நடிகரின் ரசிகர்கள் ஒய் நடிகரின் போஸ்டரில் சாணி அடிக்க , ஒய் நடிகரின் ரசிகர்கள் எக்ஸ் நடிகரின் போஸ்டரில் சாணி அடிப்பார்கள். எனக்கு வள்ளுவர் என்று ஒரு நண்பர் இருக்கிறார். ஊர் கோவை. ஒரு முறை ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை அடித்த விதத்தில் ஒரு முறை சிறை சென்று வந்திருக்கிறார். ஆனால் நல்லவர். 35 கிலோதான் இருப்பார். குடி. குடிப்பதை நிறுத்தினால் என்னைப் படிப்பதையும் நிறுத்தி விடுவார். இதே போல் முன்பு ஒரு நண்பர் இருந்தார். குடியை நிறுத்தினார். அதோடு படிப்பதையும் நிறுத்தி விட்டார். பரவாயில்லை என்கிறேன். வள்ளுவர் கேட்பதில்லை. அகில உலக சாரு நிவேதிதா ரசிகர் மன்றம் என்ற ஒரு அமைப்பு வைத்திருக்கிறார்.

உறுப்பினர் எண்ணிக்கை 2. ஒன்று அவர். மற்றொன்று அடியேன். நேற்று அவர் என்னிடம் அந்த ஏ.கே.எம்.மின் தொலைபேசி எண்ணைக் கேட்டார். எதற்கு என்றேன். திட்ட என்றார். ஏ.கே.எம். என் மீது அநியாயமாக அவதூறு செய்கிறாராம். அப்படிப் பார்த்தால் ஏ.கே.எம்மின் ரசிகர்கள் அவரிடம் என் தொலைபேசி எண்ணைக் கேட்டால் என் கதி என்னாவது ? இதற்கெல்லாம் முடிவேயில்லை. கத்தி எடுத்தால் கத்தியில்தான் சாவு. வேண்டாம் வன்முறை.

ஒப்பீடு என்றதும் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகம் வருகிறது. சுஜாதா இரங்கல் கூட்டம் என்று அழைத்திருந்தனர். ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீனிவாசகாந்தி நிலையம். அங்கேதான் முன்பெல்லாம் கணையாழி மாதாந்திரக் கூட்டம் நடக்கும். கூட்டத்தின் தலைவர் இந்திரா பார்த்தசாரதி ' யார் வேண்டுமானாலும் பேசலாம் ' என்றார். முதலில் பேசியவர் க்ரேஸி மோகன். 20 நிமிடம். பேசியதும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்கும் பொறுமையின்றி உடனே கிளம்பிச் சென்று விட்டார். அடுத்து வந்த எஸ். வைத்தீஸ்வரன் ஒரு நீண்ட கட்டுரையையே வாசித்தார். ஒரு வரி கூட புரியவில்லை. 20 நிமிடம். அடுத்து வந்தவர் ஏதேதோ சொன்னார். மூட்டு வலி , உயர் ரத்த அழுத்தம் , கொலஸ்ட்ரால் என்று பல வார்த்தைகள் காதில் விழுந்தன. 20 நிமிடம். அடுத்து வந்தவர்தான் அட்டகாசம். சுஜாதாவின் வாரிசு திருப்பூர் கிருஷ்ணன்தான் என்று தீர்மானாமாகச் சொன்னார். 20 நிமிடம். மணி ஏழரை ஆகி விட்டது. கூட்டத்தில் இருந்த அத்தனை பேருமே சுஜாதா பற்றிய தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்ததை அவர்கள் முக பாவத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது எழுந்த இந்திரா பார்த்தசாரதி "இனி பேசுபவர்கள் மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசலாம். அப்போதுதான் எல்லோரும் பேச முடியும்" என்ற ஜனநாயக பூர்வமான தனது முடிவை அறிவித்தார். எனக்கு பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜீயின் ஞாபகம் வந்தது. எழுந்து வெளியே வந்தேன். கூட்டத்தின் அமைப்பாளர் " நீங்கள் பேசவில்லையா ?" என்று கேட்டார். ஏதோ வாய்க்கு வந்ததை அவரிடம் உளறிவிட்டு நடந்தேன். இன்னும் இருந்திருந்தால் சுஜாதாவை இன்னும் யார் யாரோடெல்லாம் ஒப்பீடு செய்திருப்பார்கள் என்று தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். அரிய வாய்ப்பை இழந்து விட்டேன். பொடிநடையாக நடந்தே வீட்டுக்கு வந்தேன். அப்படி வரும்போது தான் அந்த முழு நிலவைப் பார்த்தேன். (இல்லாவிட்டால் குகை மனிதன் எப்படி முழு நிலவைப் பார்த்திருக்க முடியும் ? நான்தான் குகையை விட்டு வெளியிலேயே வருவதில்லயே ?)

புரிகிறதா தங்கவேல் ? ஒப்பீடு செய்தால் இதுதான் பிரச்சினை. பாரதிக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும் ? அவன் ஒரு அஞ்சாநெஞ்சன். பிரிட்டிஷ்காரனின் துப்பாக்கியையே துச்சமாக நினைத்தவன். நானோ ஒரு அல்ப பயந்தாங்கொள்ளி. ஏதாவது பெரிய விஷயங்களுக்கு பயந்தாலாவது பரவாயில்லை. கேவலம் ஒரு கரப்பான்பூச்சியைத் தூக்கி என் மீது போட்டீர்களானால் மூர்ச்சையடைந்து விழுந்து விடுவேன். சிருஷ்டிகரம் என்று எடுத்துக் கொண்டால் அதிலும் தோல்விதான். பாரதி ஒரு ஆசுகவி. நின்ற இடத்தில் நினைத்த மாத்திரத்தில் கவிதை மழை பொழிவான். நமக்கோ அதி பயங்கர கற்பனை வறட்சி. என்னால் ஒரு 10- ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற ஒரு சரித்திர நாவலை எழுத முடியுமா ? வாய்ப்பே இல்லை.

அடுத்து மொழி ஞானம். பாரதிக்கு ஆங்கிலம் , சமஸ்கிருதம் , இந்தி , உர்தூ , · ப்ரெஞ்ச் என்று ஏகப்பட்ட மொழிகள் அத்துப்படி. அந்தந்த மொழிகளில் புலமையுடன் எழுதக்கூடியவன். (அப்படியிருந்தும் ஒரு பொய் சொல்லிவிட்டான். தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று. எனக்குத் தெரிந்து அரபி மொழி போல் இனிமையான மொழி இந்த

உலகத்திலேயே கிடையாது. சரி , அவன் காலச் சூழ்நிலை அப்படி. ஆனால் ஒரு கவிஞன் என்பவன் காலம் , மொழி , இனம் , மதம் போன்ற எல்லா அடையாளங்களையும் மீறியவனாக இருக்க வேண்டும்). நானோ மொழி விஷயத்தில் ரொம்பவும் பேஜார். நான்கைந்து மொழிகளோடு பரிச்சயம் இருந்தாலும் எந்த மொழியிலும் எழுதும் அளவுக்கு வணங்க மாட்டேன் என்கிறது புத்தி.

இதற்கு முன்பும் பல நண்பர்கள் இது போல் என்னை பாரதியோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். என்ன காரணம் என்றுதான் புரியவில்லை. புரியாத விஷயங்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதுவும் இன்று ஏப்ரல் முதல் தேதி வேறு.

***

விஷாலைப் போட்டு நொக்கி எடுத்து விட்டார்களாம். யாரையோ அழகி என்று சொல்லிவிட்டேனாம். ஜொள்ளு விடுவதற்கு அளவு இல்லையா , அது இது என்று கேட்டு அவனை சில நண்பர்கள் உண்டு இல்லை என்று பண்ணியிருக்கிறார்கள். எய்தவன் நான் இருக்க அம்பு மாட்டிக் கொண்டு விட்டது. அழகை ரசிப்பதற்குக் கூட இவ்வளவு பிரச்சினையா ? சரி

சாமிகளா , இனிமேல் யாரையும் அழகி என்று சொல்லவில்லை , போதுமா ?

***

இந்தியாவில் இன்னும் நடுவிரலை உயர்த்திக் காண்பிக்கும் வழக்கம் அவ்வளவாக புழக்கத்திற்கு வரவில்லை. நான் என் மோதிர விரல் பிரச்சினை பற்றி எழுதியிருந்தேன் அல்லவா ? என் நண்பர் கணேஷ் தன் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு , தனி கேபின் என்பதால் சற்று தைரியமாக தனக்குத்தானே நடு விரலை உயர்த்தி உயர்த்திப் பார்த்திருக்கிறார். ஆனால் அது ஒரு கண்ணாடி கேபின். எதிரே அமர்ந்திருந்த பெண் இதைக் கவனித்து விட்டு கணேஷிடம் வந்து "என் மீது உனக்கு ஆசை இருந்தால் அதை இப்படித்தான் சொல்வதா ? இடியட். சாயங்காலம் 8 மணிக்கு போன் பண்ணு. பாஷா போகலாம்" என்றாளாம். "உங்களால் என்னென்ன பிரச்சினை எல்லாம் வந்து சேருகிறது பாருங்கள்" என்று திட்டினார் கணேஷ்.

***

குஷ்வந்த் சிங்கின் சமீபத்திய ஜோக் ஒன்று:

ஜட்ஜ்மெண்ட் டே என்றால் எது தெரியுமா ?

ரக்ஷாபந்தனும் , வேலண்டைன் தினமும் ஒரே நாளில் வருவதுதான்.

***

எம். கோவிந்தனை அறிவீர்களா ? மலையாள இலக்கிய உலகின் மேதைகளில் ஒருவர். அவருடைய பாம்பு என்ற சிறுகதையைத் தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள். அவர் இங்கே சென்னையிலுள்ள சிந்ததிரிப்பேடையில்தான் வாழ்ந்தார். அவரை நான் அவரது அந்திமக் காலத்தில் பல முறை சந்த்தித்திருக்கிறேன். உலக இலக்கியமும் வரலாறும் கற்றறிந்த அவர்

மிகச் சாதாரணமான ஆனந்த் போன்ற எழுத்தாளர்களை எப்படி வளர்த்து விடுகிறார் என்றெல்லாம் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். இங்கே ஆனந்த் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். அவர் புத்திஜீவிகளால் பெரிதும் மதிக்கப் படுபவர். தத்துவார்த்தமாக எழுதுபவர் எனப் பெயர் எடுத்தவர். எந்த இலக்கிய சர்ச்சைகளிலும் ஈடுபட மாட்டார். மிக

முக்கியமாக , என் எழுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக மலையாளத்தில் அதிக அளவில் அறியப் பட்டுள்ள நிலையில் என் எழுத்தின் மீது மரியாதையும் , மதிப்பும் கொண்டவர். ஆனால் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆனந்தின் எழுத்து பிடிக்காது. அவருடைய ஆள்க் கூட்டம் , மரண சர்ட்டிஃபிகேட் போன்ற நாவல்களெல்லாம் சராசரி ரகத்தைச் சேர்ந்தவை.

என்னுடைய குணம் என்னவென்றால் என் எழுத்தை சிலாகிக்கிறீர்கள் என்பதற்காக நான் உங்கள் எழுத்தைப் பற்றிப் புகழ்ச்சியாகச் சொல்ல மாட்டேன். ஆனால் ஒருவர் என் எழுத்தை மலம் எனத் திட்டினாலும் அவர் எழுத்தை நான் அணுகுவதற்கு என் மீதான அவருடைய விமர்சனம் ஒருபோதும் தடையாக இருக்ககாது.

எம். கோவிந்தனும் நானும் ஒரு bi-lingual பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் போய் விட்டார்.

எனக்கு மலையாளம் தெரியாவிட்டாலும் எப்படி மலையாள இலக்கியத்தைப் படிக்கிறேன் என்றால் , ஒன்று , மொழிபெயர்ப்பு. ஆனால் எனக்குப் பிடித்த பல மலையாள எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பில் கிடைப்பதில்லை. எனவே , என்னுடைய மலையாள நண்பர்களை வைத்துக் கொண்டு அவர்களைப் படிக்கச் செய்து புரிந்து கொள்வேன். இப்படித்தான் ஒரு பெண் எனக்கு மலையாளம் படிப்பிக்கிறேன் என்று வந்தாள். முதலில் அவள் எடுத்த புத்தகம் என்ன தெரியுமா ? மலையாளத்தில் வெளியாகியுள்ள கொக்கோக சாஸ்திரம். அப்புறம் மலையாளமா கற்க முடியும் ? ( மேல் விபரங்களுக்கு ராஸ லீலாவைப் படிக்கவும்).

இப்படி மலையாள சாகித்யகர்த்தாக்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றி ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். உடனே கிளம்பினான் ஏ.கே.எம். "நீ பொய் சொல்கிறாய். நீ எம். கோவிந்தனை சந்திக்கவே இல்லை." நானோ எம். கோவிந்தனைச் சந்தித்ததற்கு சாட்சியாக போட்டோ எதுவும் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. "அது எப்படி அவ்வளவு தீர்மானமாகச் சொல்கிறாய் நான் அவரைச் சந்தித்ததில்லை என்று ?" அதற்கு ஏ.கே.எம். கேட்டான். "சரி , சிந்தாதிரிப் பேட்டையில் அவர் வீட்டுக்கு எப்படிப்

போக வேண்டும் , வழி சொல் ?"

" அடப் பாவி. யாராவது சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு வீட்டுக்கு வழி சொல்ல முடியுமா ? ஏதோ ஒரே கார் ரிப்பேர் பட்டறையாக இருக்கும். அந்தக் கடைகளுக்கு மேலே மாடியில் இருந்தது அவர் வீடு. பின்னால் கூவம்" என்றேன்.

" இதிலிருந்தே தெரிந்து விட்டது நீ அவரைச் சந்த்திததில்லை என்று. அவர் வீட்டு அடையாளமே வேறு."

உண்மையில் எனக்கு இங்கே மந்தைவெளியில் நார்ட்டன் சாலையில் என் வீடு உள்ள இடத்தை ஆட்டோக்காரரிடம் சொல்வதற்குள்ளாகவே போதும் போதும் என்றாகி விடும்.

ஒவ்வொரு முறையும் தப்புத் தப்பாகவே சொல்லுவேன். அதற்காக நான் என் வீட்டில் வசிக்கவில்லை என்று அர்த்தமாகுமா என்ன ?

" அது சரி சாரு , ஒன்று கேட்டால் நீ திட்டக் கூடாது" என்று ஒருநாள் ஆரம்பித்தாள் அவந்திகா.

" சே , சே...உன்னை எப்போது திட்டியிருக்கிறேன் ? தாராளமாகக் கேள்" என்றேன். (ச்சும்மா வசனம். எக்குத் தப்பாகக் கேட்டால் வாயில் என்ன வருகிறது என்றே பார்க்காமல் திட்டி விடுவேன். ' பிரபந்தம் , திவ்யப் பிரபந்தம் கேட்பது போல் இருக்கிறது ' என்று தலையில் அடித்துக் கொள்வாள் அவந்திகா).

" நிதானமாக இருக்கும் போதே இப்படி வழி சொல்லத் தடுமாறுகிறாயே ; தண்ணி அடித்து விட்டு எப்படி மிகச் சரியாக வீட்டுக்கு வந்து விடுகிறாய் ?"

" அதுதான் எனக்கும் 15 வருடங்களாகத் தெரியவில்லை. எல்லாம் பாபாவின் அருள்தான்" என்றேன்.

ஒருமுறை புதுச்சேரியில் வெங்கியின் கெஸ்ட் ஹவுஸிலிருந்து வெளியே வந்து ஆட்டோ பிடித்து "மந்தைவெளி" என்று சொன்னதாக மறுநாள் வெங்கி சொன்னான்.

சரி , அது என்ன ஏ.கே.எம் ? ஏதாவது புரிகிறதா ?

***

1.4.2008.


Source : www. charuonline.com

0 comments:

Post a Comment