கைநாட்டுக் கவிதைகள்

on Sunday, September 4, 2011


வரிசையாய்.....
சத்துணவுக்கு
சாப்பாட்டு தட்டோடு தம்பி
வேலையில்லா
பட்டதாரி உதவிக்தொகைக்கு
சான்றிதழோடு அண்ணன்
கறி விருந்துக்கும்,
கவர் பணத்திற்கும்
கையில் ஓட்டோடு
காத்திருக்கும் அப்பா
உலக வங்கியின்
உதவிக்கு காத்திருக்கும் அரசு
'எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்'
பாரதி பாடலை
மனப்பாடம் செய்யும்
ஏதும் அறியா தங்கை...
இனிக்கும் கண்­ணீர்!
அவள்
அடுக்குப் பற்களில்
அகப்பட்டு
கடிபட்டபோது.....
கவலைப்பட்டது
கரும்பு
இவள்
இதழ்களுக்குத்தான்
இரையாவேன் என்று
தெரிந்திருந்தால்
இன்னும் கொஞ்சம்
வளர்ந்திருப்பேனே!




சேமிப்பு!
உன் கை நழுவி
உடைந்த வளையல் துண்டுகள்
உன் அடர்ந்த
கூந்தலிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட
'அந்த ஒரு முடி'
நீ வெட்டிவீசிய
பிறைவடிவ 'நகங்கள்'
உன் பின்னல்களை
தன் வசப்படுத்திய
'ஹேர்பின்கள்' சில
நீ ரொம்பவுமே
நேசித்த 'பச்சை ரிப்பன்'
உன்னோடு
கலந்துறவாடிய
எண்ணற்றப் பொருட்களின்
சேமிப்பில்
நான் கரைந்துபோக....
புதிய வரவாய்
உன் அப்பா
அனுப்பிவைத்த
உன் திருமண அழைப்பிதழும்....!

0 comments:

Post a Comment