புனரபி ஜனனம் புனரபி மரணம்

on Sunday, March 29, 2009

எனக்கு இந்த பூலோகத்தில் உள்ள 107 திவ்ய தேசங்களையும் தரிசித்து விட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நான் இப்போது ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவனாகி விட்டதால் ஏற்பட்ட திடீர் ஆசை அல்ல இது. நான் நாத்திகனாக இருக்கும் போதேகூட வழிபாட்டு ஸ்தலங்களை நோக்கித்தான் சென்று கொண்டிருப்பேன். 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஜம்முவிலுள்ள வைஷ்ணவோ தேவி கோவிலுக்கு 10 மணி நேரத்துக்கு மேல் மலை மீது ஏறிச் சென்றிருக்கிறேன்.

இப்போது சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கலுக்கும் , சென்னைக்குப் பக்கத்திலுள்ள இலவம்பேடுக்கும் செல்ல ஆசை. காரணம் ஒரு கதை. விஷ்ணுவின் மகனான மன்மதனை சிவன் எரித்து விட்ட கதையை நாம் அறிவோம். பின்னர் கிருஷ்ணாவதாரத்தில் மன்மதன் பிரத்யும்னன் என்ற பெயருடன் கிருஷ்ணனின் மகனானப் பிறந்தான்.பிரத்யும்னனின் மகன் அநிருத்தன். இவன் மீது பானாசுரனின் மகளான உஷை காதல் கொள்கிறாள். ஆனால் அவனை நேரில் பார்த்ததில்லை. கனவிலேயே உருவான காதல் அது. தான் கனவில் கண்ட உருவத்தை சித்திரக்காரியான தன் தோழி சித்ரலேகாவைக் கொண்டு வரையச் செய்கிறாள் உஷை. சித்ரலேகாவுக்கு மாய வித்தையும் தெரியும். அநிருத்தன் உறக்கத்தில் இருக்கும்போது அவனே அறியாமல் அவனை உஷையிடம் தூக்கிக் கொண்டு வந்து விடுகிறாள் சித்ரலேகா.

பனாசுரனுக்கு இது தெரிந்து அநிருத்தனை சிறையில் தள்ளி விடுகிறான். இதை அறிந்த கிருஷ்ணன் பானாசுரனிடம் போரிட்டு தன் பேரனை சிறையிலிருந்து மீட்டு வந்து உஷைக்கும் அவனுக்கும் மணம் செய்து வைக்கிறான். அத்திருமணம் நடந்த இடம்தான் திருத்தங்கல்.

கிருஷ்ணன் அநிருத்தனை மீட்டு வரும்போது அந்த சந்தோஷத்தில் இலவம் என்ற வனத்தில் பேடு என்ற கூத்தை ஆடினானாம். அதுதான் இலவம்பேடு. சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரிக்கும் மீஞ்சூருக்கும் இடையில் இருக்கிறது இலவம்பேடு.

யாராவது உடன் வருகிறீர்களா , சென்று வரலாம் ? ( பெண்களாக இருந்தால் வேண்டாம் , அடியேனை மன்னித்து விடுங்கள்).

***

இரண்டு நாள் தொடர்ந்தாற்போல் இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் பலவிதமான எதிர்வினைகளைச் சந்தித்தேன்.

" ஏன் அவந்திகாவைப் பார்க்காமல் , ஷர்மியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் ?" ( அந்த நிகழ்ச்சியில் என்னோடு அவந்திகாவும் கலந்து கொண்டிருந்தாள்).

பாலியல் தொழிலாளிகளுடன் உங்களுக்கு உள்ள அனுபவங்கள் பற்றி ரோஸ் கேட்ட போது ஏன் அசட்டுத் தனமாக சிரித்து , திருதிருவென்று முழித்தீர்கள் ?

- இதே ரீதியில் ஒரு 50 கேள்விகளைக் கேட்டார்கள் நண்பர்கள்.

' எடிட்டிங் ' என்று ஒரு விஷயம் இருப்பதையே நண்பர்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். ரோஸின் கேள்விக்கு என்னுடைய பாங்காக் அனுபவங்களை நான் விரிவாகவே பேசினேன். ஆனால் அது எல்லாமே எடிட் செய்யப்பட்டு விட்டது. ஏனென்றால் , ஒரு பாலியல் தொழிலாளி எவ்வளவு வெளிப்படையாகவும் பேசலாம் ; ஆனால் ஒரு ' கௌரவமான் ' பிரமுகர் அப்படியெல்லாம் பேசிவிடக் கூடாது என்று எழுதப்படாத ஒரு சமூக விதி இங்கே நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் விஜய் தொலைக்காட்சியை பாராட்டித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் இது வரை ஒரு பொது நிகழ்ச்சியில் யாராவது ' ஒருவனுக்கு ஒருத்தி என்பது சுத்தப் பொய் ' அது ஒரு ஏமாற்று வேலை ' என்று சொல்லியிருக்கிறார்களா ? பெரியாருக்கு அடுத்தபடியாக இதைச் சொன்னவன் அடியேன்தான் என்று நினைக்கிறேன்.

மற்றொரு நண்பர் கேட்டார். ' உங்களைப் போன்றவர்களெல்லாம் இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாமா ?' என்னுடைய நாவல் 250 பிரதிகள் மட்டுமே விற்றுக் கொண்டிருக்கும் வரை நான் இது போன்ற காரியங்களைச் செய்து கொண்டுதான் இருப்பேன். இப்படியெல்லாம் செய்தாலாவது விற்பனை 250 பிரதிகளைத் தாண்டுகிறதா பார்க்கலாம் என்ற நப்பாசைதான் காரணம்.

( அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை நடந்தது. ஆனால் எனக்கு ஒரு நயா பைசா தரவில்லை. 10, 15 தடவை போன் செய்து பார்த்து விட்டேன். இதோ அதோ என்கிறார்கள். எழுத்தாளன் என்றால் யார் வேண்டுமானாலும் ----------( censored) அடிக்கலாம் என்பது தமிழ் நாட்டின் தலைவிதி ஐயா , என்ன செய்வது ? இப்போது இதை வேறு எழுதித் தொலைத்து விட்டேனா ? இனிமேல் என்னை அழைக்கவே மாட்டார்கள். பரவாயில்லை. பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டுமே ? அது நானாக இருந்து விட்டுப் போகிறேன்.)

***

பிராமண சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளைப் பார்த்து நான் எப்போதும் வியப்படைகிறேன். உதாரணமாக , எஸ்பஞோல் வகுப்பில் என்னோடு படித்த நப்பின்னையும் நானும் வகுப்பில் அடித்த லூட்டியைப் பார்த்து இருவரையும் அந்தப் பயிலகத்திலிருந்தே நீக்கி விட்டார்கள். வேறு என்ன ? கரோகே மூலம் ஷகீராவின் ' தோர்த்துரா ' (Torture) பாடலை நப்பின்னை பாட , நான் அதை ஆரவாரம் செய்து வரவேற்று ரகளை பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி விட்டு வைப்பார்கள் ?

சரி , வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட நான் எஸ்பஞோலை எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருக்க , நப்பின்னையோ எஸ்பஞோலை தானாகவே பயின்று , எஸ்பஞோல் ஆசிரியை தேர்விலும் தேர்ச்சி பெற்று , இப்போது பெல்ஜியத்தில் எஸ்பஞோல் ஆசிரியையாக இருக்கிறாள். அவள் ஸ்ரீவைஷ்ணவ இனத்தைச் சேர்ந்தவள்.

என் மாமனாரின் சுப ஸ்வீகார நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது-

அப்போது என் செவிகளில் தேனாகப் பாய்ந்த பிரபந்தங்களை - தென்குரு கூர்ச் சடகோபனின் திவ்ய வார்த்தைகளை என்னுடைய தட்டையான மொழியால் வர்ணிக்க முடியவில்லை. மன்னித்து விடுங்கள்.

நான் திவ்யப் பிரபந்தத்தை புத்தகத்தில் படிப்பதை விட நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். திருமங்கையாழ்வார் செய்த பெரிய திருமொழியை P. தெய்வ நாயகன் கோஷ்டியினர் சேவித்திருக்கின்றனர். குறுந்தகட்டில் கிடைக்கிறது. அதைச் செவிகளால் கேட்பது ஓர் அற்புதம். ஆனால் இறைவன் - பக்தி- ஆன்மீகம் என்பதிலுள்ள சத் விஷயங்களை நாம் எவ்வளவுதான் அனுபவித்தாலும் சோற்றினிடையே அகப்படும் கற்களை போல் சிலது அகப்பட்டு நம் பற்களை உடைக்கத்தான் செய்யும். அதுதான் மதத் துவேஷம். தான் வணங்கும் இறைவனே இறைவன் ; மற்றதெல்லாம் பேய் என்ற போக்கு எல்லா மத நம்பிக்கைகளிலும் உள்ளது. உதாரணமாக , திருவரங்கத்தமுதன் பாடிய இந்த ராமானுஜ அந்தாதியைப் பாருங்கள்:

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்

சொல்கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்

நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் - நீள்நிலத்தே

பொன்கற்பகம் எம்ராமானுச முனி போந்த பின்னே.

காலை ஏழு மணியிலிருந்து மூன்று மணி நேரம் பிரபந்தங்கள் ஓதப்பட்ட பிறகு வேறு சில சடங்குகள் நடந்தேறின. பின்னர் குடும்பத்தினர் அனைவரையும் அமரச் செய்து ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் வாத்தியார் . அதற்கு முன்பாக எல்லோருக்கும் ஒரு தோசையும் வெல்லமும் பரிமாறப் பட்டது.

கோபாலய்யங்காரின் நற்பண்புகளையும் , ஸ்தூல உருவில் அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் , சூக்ஷ்மரீதியாக அவர் நம்மோடேதான் இருக்கிறார் என்பதையும் , அவர் உயிர் பிரிந்த நேரம் உத்தராயனம் , சாயரட்சை ஐந்தே முக்கால் , பிதுர் தின அமாவாசை , மாசி மாதம் , வருண பகவான் அதிபதி யாயிருந்த தினம் , கிருஷ்ண பட்சம் - இவ்வளவு சுபயோகம் கூடிய தினத்துக்காகவே பீஷ்மர் உயிர் விடக் காத்திருந்தார் - அப்படியாகப் பட்ட ஒரு நாளிலே - அப்பபடியாகப் பட்ட ஒரு சமயத்திலே வைகுந்த பதவி யடைந்திருக்கிறார் என்பதையும் கதை போல விவரித்தார் வாத்தியார்.

***

12 ஆண்டுகளுக்கு முன்பு அவந்திகாவை நான் மணம் புரிந்து கொண்ட போது என்னுடைய வெளித் தோற்றத்தை வைத்து ' யாரோ ரவுடி ' என எண்ணியும் , முக்கியமாக என் சாதி (எஸ்) காரணமாகவும் அவள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் எங்கள் திருமணத்துக்கு வராமல் புறக்கணித்து விட்டனர். பிறகு நான் அவந்திகாவை வைத்துக் கொண்டாடிய பாங்கையும் , அவளுக்குச் செய்த சிசுரு ¨ க்ஷகளையும் பார்த்து விட்டு ஒருநாள் என் மாமனார் தன் இரு கைகளையும் கூப்பி "நீங்கள் தெய்வம்" என்றார். "பெரியவர் நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது" என்று கூறி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கி "அவந்திகா ஒரு தெய்வ மனுஷி" என்றேன்.

பிறகு என்னுடைய ஸீரோ டிகிரி நாவலுக்கு பதிப்பாளர் யாரும் கிடைக்காமல் , நானே அதைப் பதிப்பித்து , நானே அதைத் தெருத் தெருவாக சுமந்து சென்று விற்ற போது (அப்போதெல்லாம் என் தோள் பையில் எப்போதும் ஒரு 5 பிரதி ஸீரோ டிகிரி பிரதிகள் இருக்கும்) , அந்நாவல் பற்றி வார மலரில் அந்துமணி விரிவாக எழுதியிருந்ததால் சுமார் 700 பிரதிகள் மணியார்டர் மூலமாகவே விற்றது. தினமும் 50 மணியார்டர் வரும். எதிலுமே அனுப்பியவரின் விலாசம் நமக்குக் கிழித்துத் தரும் பகுதியில் எழுதப் பட்டிருக்காது. என் மாமனார்தான் அவ்வளவையும் தனித்தாளில் எழுதி வைத்திருந்து என்னிடம் கொடுப்பார். தபால்காரர் தன் வேலை முடிந்து திரும்பிச் செல்லும் போது அந்த மணியார்டர் படிவங்களை என் மாமனாரிடமிருந்து வாங்கிக் கொண்டு போவார்.

ஸ்ரீவைஷ்ணவ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிறவியிலேயே ஓர் அதீதமான புத்திசாலித்தனம் உண்டு. இந்த புத்தி சிலரிடம் சிருஷ்டிகரமாகவும்(சுஜாதா) , ிலரிடம் சித்தப் பிரமையாகவும் (என் மாமியார்) , சிலரிடம் மனிதாபிமானமாகவும் , சேவை மனோபாவமாகவும் (அவந்திகா) , சிலரிடம் வக்கிரமாகவும் வெளிப்படும்.

என் மாமனார் சென்ற ஆண்டே சென்றிருக்க வேண்டியது. ஒரு வருடம் போனஸாகக் கிடைத்தது DXN என்ற சிவப்புக் காளான் மாத்திரைகளால்தான். காளான்களில் மொத்தம் 3000 வகை உண்டு. இவற்றில் நாம் உண்ணத் தகுந்தவை 300. அதிலும் மிகச் சிறப்பானவை ஏழுவித காளான்கள். அந்த ஏழில் ஆகச் சிறந்தது சிவப்புக் காளான். இந்தச் சிவப்புக் காளானின் தாவரவியல் பெயர் Genoderma Lucidum. சீன மொழியில் Reishi. உலகிலேயே அதிக ஆயுளுடன் வாழ்வது சீனர்கள்தான் ( 90 வயது) என்பதற்கு ஒரு முக்கிய காரணம் , அவர்கள் உணவில் சிவப்புக் காளானைச் சேர்த்துக் கொள்வதுதான்.

சிவப்புக் காளான் மருந்து அல்ல ; உணவு என்பதால் ஒருவர் என்னவிதமான மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் சிவப்புக் காளான் கேப்ஸ்யூல்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். எவ்விதப் பத்திய முறிவையும் அது ஏற்படுத்தாது.

ஆனால் மாதம் 2000 ரூ. ஆகும் , அதற்கு என் நிதி நிலைமை ஒத்துக் கொள்ளாது என்பதால் நான் அதைச் சாப்பிடுவதில்லை. ஆனால் அவந்திகாவுக்கு வாங்கித் தருகிறேன். தியாகம் என்றெல்லாம் நினைத்து விட வேண்ட்டாம். பச்சை சுயநலம்தான் காரணம். அவளுக்கு நீண்ட காலமாக ஒரு பிரச்சினை இருந்து வந்தது. பால் , பழம் , கீரை தவிர வேறு எதுவும் ஒத்துக் கொள்ளாது. சோறு , சாம்பார் , ரசம் , சப்பாத்தி , தயிர் என்று எதைச் சாப்பிட்டாலும் ஏப்பம் வந்த வண்ணமாகவே இருக்கும். நிற்கவே நிற்காமல் மணிக்கணக்கில் தொடர்ந்து , ஒரு கட்டத்தில் மூச்சு விடவே சிரமமாகி பயமுறுத்திவிடும். எந்த நேரமாக இருந்தாலும் உடனே மருத்துவமைக்கு ஓட வேண்டும்.

எத்தனை காலத்துக்குத்தான் ஒருவர் வெறும் பழங்களையும் , ப்ரெட்டையும் சாப்பிட்டு வாழ்வது என்று தப்பித் தவறி எதையாவது வாயில் போட்டு விட்டால் தீர்ந்தது கதை. அலோபதி , ஆயுர்வேதம் , ஹோமியோபதி , சித்த வைத்தியம் என்று எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. எதிலுமே குணமாகவில்லை. சிவப்புக் காளான் சாப்பிட்டு நின்று விட்டது. இப்போது அவள் வீட்டில் சமைத்த எதையும் சாப்பிடுகிறாள். இந்தப் பிரச்சினை என்று மட்டும் அல்ல. சிவப்புக் காளான் ஒரு சர்வரோக நிவாரணி என்பது என் முடிவு.

சென்ற ஆண்டு தேக ஆரோக்கியம் குன்றி படுத்த படுக்கையாகக் கிடந்த என் மாமனாருக்கு சிவப்புக் காளானைக் கொடுக்கச் செய்தேன். கேப்ஸ்யூல்களை விழுங்க முடியாமல் அதைப் பிரித்து நீரில் போட்டுக் கலக்கிக் குடித்தவர் எழுந்து உட்கார்ந்து , ஓரிரு நாளில் நடமாடவும் ஆரம்பித்து விட்டார்.

ஆறு மாதம் படுக்கையில் கிடந்த அவர் எழுந்து வந்து வீட்டுக்கு வெளியேயுள்ள மாடிப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார். அவர் வீட்டு வாகன ஓட்டுனர் தாத்தாவை அந்த நிலையில் பார்த்து ஆச்சரியமுற்று ' குட் மார்னிங் சார் ' என்று சொல்ல , அதற்கு என் மாமனார் சொன்ன பதில்: "உன் குட் மார்னிங்கை எல்லாம் நீ ஜால்ரா அடிக்கிறியே , அங்கே போய்

சொல்லு...குட் மார்னிங்காம் , குட் மார்னிங்..."

அதிபுத்திசாலித்தனம் வக்கிரமாக மாறும் என்று சொன்னேன் அல்லவா , அந்த வகை மேலே கண்டது.

நான் சின்மயா நகர் என்ற குப்பைக் காட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்ததன் காரணம் , அவந்திகா தன் பெற்றோருடன் , அவர்களின் அருகில் இருக்க விருப்பப்பட்டதுதான்.

ஏதாவது விசேஷமாகச் செய்தால் (கேசரி இத்யாதி) அதை சுடச் சுட எடுத்துக் கொண்டு அப்பாவிடம் ஓடுவாள். (அடுத்த தெருதான் அவர்கள் வீடு). ஒருநாள் அவந்திகாவிடம் கேட்டேன் , உன்னை இந்தப் பாடு படுத்தியிருக்கிறாரே , அவருக்கு ஏன் நீ இப்படி ஓடி ஓடிச் செய்கிறாய் ? (18 வயதுப் பெண்ணை தெருவில் போட்டு அடிப்பாராம்) அதற்கு அவள் ஒரு அருமையான பதிலைச் சொன்னாள். "என் அம்மாவுக்கு மனநிலை பிறழ்ந்த போது அவளுக்கு 25 வயதுதான் இருக்கும். ஆனாலும் அவளை விட்டு விட்டு ஓடி விடாமல் , வேறு திருமணம் செய்து கொள்ளாமல் என் அம்மாவுடனேயே 55 வருடம் வாழ்ந்தாரே , அதற்கு ஈடு இணை ஏதாவது உண்டா ? அதற்காகத்தான் இவ்வளவும்."

உண்மைதான். கோபாலய்யங்காரும் , அவரது தர்ம பத்தினி வைதேகி அம்மாளும் எலியும் பூனையுமாகச் சண்டை போட்டுக் கொள்வார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பிரியவே மாட்டார்கள். வைதேகி அம்மாள் இறந்து இரண்டு ஆண்டுகளில் கோபாலய்யங்காரும் கிளம்பி விட்டார்.

***

என் குழந்தை , என் ரத்தம் என்ற பந்த பாசங்களை உதறி எறிந்தவன் நான் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எளிதில் பின்பற்ற முடியாத , மிகவும் சிரம சாத்தியமான ஒரு பண்பு அது. ஆனால் , அதைப் பின்பற்றுவதால் எனக்குக் கிடைத்த லாபம் , எல்லா குழந்தைகளையுமே என் குழந்தைகளாக நினைக்கும் மனோபாவம். அப்படி எனக்கு வந்து சேர்ந்த குழந்தைதான் பூஜா. அவளும் அதே தீர்மானத்தோடுதான் என்னோடு பழகுவாள். நாங்கள் முதன்முதலாகச் சந்தித்தபோது அவள் வயது மூன்று. ஒருநாள் கூடத் தவறாமல் தினமும் அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்பது எனக்கு அவள் இட்டிருந்த உத்தரவு. பார்க்காத நாட்களில் ஸீரோ மார்க் போட்டு விடுவாள்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என் புத்திர செல்வங்களைப் பற்றிக் கேட்ட போது பூஜாவைப் பற்றிச் சொல்ல மறந்து போனேன். அந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு பூஜா ஒரு வார காலம் என்னோடு பேசவில்லை.

ஏதோ முந்தின ஜென்மத்து அறிவையும் , ஞானத்தையும் கூடவே எடுத்துக் கொண்டு வந்தவள் போல் பேசுவாள் பூஜா.

மற்றொரு மைத்துனியின் புத்திரன் அஜிதன். அந்த குஜராத்தி சேட்டுடன் அஜிதனும் பூஜாவும் இந்தியில் பிளந்து கட்டிக் கொண்டிருந்தார்கள். பூஜா ஐந்து வயதிலேயே தமிழ் , ஆங்கிலம் , இந்தி மூன்றிலும் சக்கை போடு போடுவாள். அஜிதன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். ஆனால் ஐந்தடி ஏழு அங்குல உயரம் இருப்பான்.

அவனிடம் "உனக்கு இந்தி தெரியுமா ?" என்று கேட்டேன்.

" ம்...கொஞ்சம் தெரியும்."

" எப்படி ?"

" ப்ரைவேட்டா படிச்சேன்."

" எதில் ?"

" இந்தி ப்ரச்சார் சபா."

" ஓ...என்னென்ன பரீட்சை பாஸ் பண்ணினாய் ?"

" விஷாரத் முடித்திருக்கிறேன்."

மிரண்டே போனேன். அதுவும் சென்ற வருடமே முடித்து விட்டானாம். விஷாரத் என்றால் புலவர் பட்டம்.

" பிரேம் சந்திலிருந்து இன்றைய நிர்மல் வர்மா வரை படிக்க வேண்டுமே ?"

" ஆமாம்" என்று சொல்லி , கோதான் , கர்ம பூமி , வர்தான் போன்ற அவரது நாவல்களைப் பற்றிப் பேசினான்.

" கோதான்...மறக்கவே முடியாத நாவல். அந்த ஹோரி ரொம்ப பாவம். கடைசியில் அவனுடைய சாவுக்கே அவன் மனைவி பசு தானம் செய்ய வேண்டி வருகிறதே ?" என்ற

அஜிதனுக்கு அந்த நாவலில் வரும் மிகச் சிக்கலான் சாதீய முரண்பாடுகள் பற்றியெல்லாம் புரிந்திருக்குமா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.

30 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த நாவல் அது. இந்திய கிராமீய வாழ்வு பற்றிய எத்தனையோ அஜால்குஜால் ரொமாண்டிக் ஜபர்தஸ்துகளுக்கிடையில் கிராம வாழ்விலிருக்கும் அசலான குரூரத்தையும் , அதனூடாகவே காணக் கூடிய அற்புதங்களையும் ஒருங்கே காட்டிய நாவல் கோதான்.

பிறகு , அஜிதன் முக்திபோதின் சாந்த் கே மூஹ் டேடா ஹை (நிலவின் முகம் கோணலாக இருக்கிறது) என்ற கவிதை பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். இந்தியின் நவ கவிதையை ஓர் உலுக்கு உலுக்கிய கவிதை அது.

" சமகால இலக்கியத்தில் எது பாடமாக இருந்தது ?" என்று கேட்டேன்.

" நிர்மல் வர்மாவின் ' பகல் நேரத்து விருந்தாளி ' என்ற சிறுகதைத் தொகுப்பு."

' பகல் நேரத்து விருந்தாளி ' என்ற அந்தச் சிறுகதையை எப்படி ஒரு பத்து வயதுச் சிறுவன் படிக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கணினியில் தேடிப் படித்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும்.

அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் - 12 ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய ஒரு பகல் நேரமும் அந்தக் கதையில் வருவதைப் போலவே கழிந்திருக்கிறது. அதே சூழ்நிலை , அதே வார்த்தைகள் , அதே மனிதர்கள்.

நிர்மல் வர்மா எப்படி என்னுடைய வாழ்வை உளவறிந்து எழுதினார் என்பது இன்று வரை எனக்குப் புரியாத புதிர். அதிலும் அச்சம்பவம் என் வாழ்வில் நடப்பதற்கு முன்பாகவே அவர் அச்சிறுகதையை எழுதி விட்டார்.

விஷாரத்-இலிருந்து இசைக்குத் தாவியது பேச்சு. அஜிதனுக்குப் பிடித்த பாடகன் எமினெம். கால் பந்தை கைகளால் தரையில் தட்டி விளையாடியபடியே எமினெம்மின் Mocking Bird பாடலின் சில வரிகளைப் பாடினான். அவனுடைய ஆங்கில உச்சரிப்பு அச்சு அசலாக அமெரிக்கப் பாணியில் இருந்தது. நாலு எழுத்து வார்த்தை வரும் அப்பாடலின் கடைசி

வரியையும் பாடுவானா என்பதைப் பார்க்க முடியாதபடி குறுக்கிட்டாள் பூஜா. இருவரும் சேர்ந்து ஒரு தமிழ்ப் பாட்டைப் பாடினார்கள். அவர்களாகவே இட்டுக் கட்டிய ஒரு நையாண்டிப் பாடல் அது. இருவரும் ராகத்தோடு பாடிய அந்தப் பாடலில் "எல்லய்சி பில்டிங்குல 14 மாடி ; அந்த மாடியில மாட்டிகிச்சு வள்ளூவரு தாடி" என்ற வரிகள் எனக்குப் பிடித்திருந்தது.

" என்னவாக விரும்புகிறாய் ?" என்று எல்லா குழந்தைகளிடமும் கேட்கப்படும் அந்த அசட்டுக் கேள்வியை நானும் அஜிதனிடம் கேட்டேன். (குழந்தைகளிடம் பேசுவதற்கான மொழி நம்மிடம் இல்லை என்றான் அலெக்ஸ் ஒருமுறை).

" ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியா தருகிறார்கள். அதனால் ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு அஸ்ட்ரொநாட் ஆகவே விருப்பம்" என்றான்.

விஷாரத் முடித்து விட்டதால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து , திவ்யப் பிரபந்தம் கற்றுக் கொள்ளலாம் என்று பார்த்தால் இந்த சின்மயா நகரில் அதற்கான வாய்ப்பே இல்லை என்று வருத்தப் பட்டான்.

இருக்கும் நேரத்தை என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். விஷயம் என்னவென்றால் - பாடப் புத்தகங்களே அவனுக்குப் பிடிக்ககாது. வகுப்பில் கவனிப்பதோடு சரி. ( அதிலேயே முதல் மதிப்பெண்!) அதனால்தான் எக்கச்சக்கமாக நேரம் கிடைக்கிறது.

இதுதான் அஜிதன் பற்றிய சிறிய அறிமுகம்.

இதுவே என் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறதென்று பார்த்தால் - எங்கள் முன்னோர் வனங்களில் வேட்டையாடி வாழ்ந்தவர்கள். பின்னர் , வனங்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பில் வந்த பிறகு , அங்கே காலங்காலமாக வாழ்ந்து வந்த வனவாசிகள் அங்கிருந்து விரட்டப்பட்டு நகர்ப்புறங்களுக்கு வந்து சேர்ந்து கூலித்

தொழிலாளிகளாக மாறினர். பலர் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்தனர். மொழியும் மாறியது. எனக்குத் தெரிந்து என் உறவினர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் மலம் அள்ளித் திரிந்தவர்கள். அவர்களில் ஒரு சிலர் படித்து முன்னேறினோம். இப்போது என் நெருக்கமான உறவினர்கள் முன்னுக்கு வந்து விட்டார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை

எப்படியிருக்கிறது என்பதற்குச் சில உதாரணங்கள்:

ஒருநாள் என் கடைசித் தம்பி ரங்கன் சொன்னான். அவனும் நைனாவும் திருச்சிக்கு என் தங்கை வீட்டுக்குச் சென்ற போது என் தங்கையின் மகனும் என்னுடைய மற்றொரு தம்பியின் மகனும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் ரங்கனின் மண்டையை அடித்துப் பிளந்து விட்டார்களாம். தலையில் எக்கச்சக்கமான தையல். பிழைத்ததே பெரிய காரியம்.

என்ன காரணம் ?

ரங்கன் தன் அக்காவிடம் கொடுத்திருந்த 10,000 ரூ. கடனைத் திருப்பிக் கேட்டானாம்.

சரி , என்னுடைய மற்றொரு தம்பியின் மகன் அங்கே எப்படி வந்தான் , அவன் சென்னையில் அல்லவா இருந்தான் ?

அது பெரிய கதையாம். ரங்கன் சொல்ல ஆரம்பித்தான்: அந்தப் பையன் இப்போது என் தம்பியின் வீட்டில் - அதாவது , தன் நைனாவிடம் - இல்லை. மூன்று வருடத்திற்கு முன்பு பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளையும் , 5000 ரூ பணத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டான். அப்போது அவன் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பிறகு , ஆறு மாதம் கழித்து , இளைத்து உருமாறி பரதேசியைப் போல் வீட்டுக்குத் திரும்பியவனை சேர்த்துக் கொண்டார்கள். பிறகு மீண்டும் அதே போல் பீரோவை உடைத்து (இந்த முறை வலுவாகப் பூட்டி வைத்திருந்தார்கள்) 10 பவுன் நகையையும் 10,000 ரூ. பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். 2 வருடங்களாகிறது. திரும்பவில்லை. அவன்தான் அங்கே திருச்சியில் அக்கா வீட்டில் இருந்திருக்கிறான்.

" சரி , அவன் ஏன் கிரிக்கெட் மட்டையால் உன்னை அடித்தான் ?"

" அக்காவைத் திட்டினேன்."

" ஏன் ?"

" நானே வட்டிக்கு வாங்கிக் கொடுத்தேன். அதை அக்கா திருப்பிக் கொடுக்கவில்லை."

( ரங்கனுக்குப் படிப்பு வரவில்லை. அதனால் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்கிறான். தினக்கூலி ரூ. 100/-)

" நீயே சோத்துக்கு சிங்கியடிக்கிறாய் ; நீ ஏன் வட்டிக்கு வாங்கி கடன் கொடுத்தாய் ?"

ரங்கன் பதில் சொல்லவில்லை. இந்த உரையாடலில் invisible- ஆக வரும் என் மற்றொரு தம்பிக்கு ஒரு மகளும் இருக்கிறாள். நல்ல வேளையாக அவள் தன் அண்ணனைப் போல் ஆகவில்லை. ஏதோ ஒரு கல்லூரியில் மாலை நேர வகுப்பில் பி.காம். முதலாம் ஆண்டு படிக்கிறாள். பெயர் ஜனனி.

" உன் இ.மெயில் ஐ.டி. என்ன ?" என்று ஒருமுறை ஜனனியிடம் கேட்டேன்.

" கம்ப்யூட்டரை எல்லாம் சினிமாவில் பார்த்ததுதான்" என்றாள்.

" ஏன் , நெட் க · பே போக வேண்டியதுதானே ?"

" ம்ஹ ¥ ம். நைனா விட மாட்டாங்க."

" சரி , காலேஜ் நேரம் போக வேறு என்னதான் செய்கிறாய் ?"

" டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் இங்கிலீஷ் லோயர் படிக்கிறேன். யூஸாகும்னு நைனா சொன்னாங்க."

அவள் நைனா என்று குறிப்பிட்டது என் தம்பியை. தம்பியின் மாதச் சம்பளம் 70,000 ரூ.

எத்தனை அம்பேத்கர் வந்தாலும் இந்த அடிமைகளைத் திருத்தவே முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.

***

இது ஒரு மழை நாளின் முன்னிரவு நேரம். வெளியே மேகங்கள் அனுமதித்த மட்டில் கொஞ்சமாய்க் கொஞ்ச நேரம் தலை காட்டியது முழு நிலா. இரண்டு கவிஞர்களுக்கும் , என் தோழி ஒருவருக்கும் குறுஞ்செய்தி கொடுத்ததில் தோழி மட்டுமே பதில் அனுப்பினாள்: "பார்த்தேன். அற்புதம்.நன்றி."

22.3.2008.


Courtesy : http://www.charuonline.com/

0 comments:

Post a Comment