லியர் மன்னனின் மேஜை

on Saturday, March 28, 2009

அலெக்ஸ் அடிக்கடி என்னிடம் சொல்லுவான், என் பிரச்சினைகள் பலவற்றையும் நானே தான் தேடிக் கொள்வதாக. அல்லது, என் பிரச்சினைகள் பலவும் மிகச் சாமானியமான முறையில் தீர்க்கப் படக் கூடியவை என்பதாக.

உதாரணமாக, கடந்த ஆறு மாதமாக காகிதத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். “ 95 வயதுக் கிழவர்கள் கூட இந்தக் காலத்தில் கணிப் பொறியில் டைப் செய்து அனுப்பிக் கொண்டிருக்கும் போது நீ ஏன் இப்படி அல்லல் படுகிறாய் ? என்று அடிக்கடி கேட்பான் அலெக்ஸ்.

அப்போதெல்லாம் “ என் சிந்தனை வேகத்திற்கு என் கைகள் ஈடு கொடுக்க மாட்டேன் என்கின்றன “ என்று பொய் சொல்லித் தப்பி வந்தேன்.

உண்மையான காரணம் என்னவென்றால், கணிப் பொறியில் ‘ கீ பேட் ‘ வைக்கும் கட்டை உடைந்து போய்விட்டது. வேறு கட்டை போட வேண்டுமானால் தச்சர் வரவேண்டும். இந்தக் காலத்தில் தச்சர் போன்ற தொழிலாளிகளையெல்லாம் கண்டு பிடிப்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா என்ன? மிகப் பெரிய தச்சு நிர்மாண வேலை என்றால் வருவார்கள். இந்த மாதிரி டப்பா வேலைக்கெல்லாம் வருவார்களா ?

மேலும், இந்தக் காலத்தில் இம்மாதிரி உதிரித் தொழிலாளர்களைக் கண்டு பிடிப்பதே மிகவும் அரிதான விஷயமாகி விட்டது என்று நினைக்கிறேன். அவந்திகா மீன் குழம்பு செய்தால் அம்மியில்தான் அரைப்பாள். அம்மி தேய்ந்து போனால் அதை அவ்வப்போது கொத்த வேண்டும். அப்படி அம்மி கொத்துபவர்கள், சாணை பிடிப்பவர்கள், கிழிந்த ஜாக்கெட் தைத்துக் கொடுக்கும் நடமாடும் தையல்காரர்கள், பாத்திரங்களுக்கு ஈயம் பூசுபவர்கள் – இவர்களெல்லாம் இப்போது வேறு என்ன தொழிலுக்கு மாறியிருப்பார்கள் என்று அடிக்கடி யோசித்துப் பார்க்கிறேன்.

பிறகு ஒரு கட்டத்தில் மோதிர விரலின் கடுகடுப்புடனும் வலியுடனும் எழுதுவது அசாத்தியமானதாக்ப் போகவே, கோவையிலிருக்கும் தங்கவேலுக்கு கொரியரில் அனுப்ப ஆரம்பித்தேன். கொரியரில் அனுப்ப வேண்டுமானால் அதற்கு முதலிலேயே அந்த மேட்டரை நான் ஸெராக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.(இடையில் தொலைந்து போய் விட்டால் என்ன செய்வது?) அதை அவர் டைப் செய்து எனக்கு மின்னஞ்சல் செய்ய, நான் பிழைத்திருத்தம் செய்து அனுப்புவேன். எல்லாம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை.

சரி, தங்கவேலை ஏன் சித்ரவதை செய்ய் வேண்டும் என்று எண்ணி சில கட்டுரைகளை விஷாலிடம் கொடுத்தேன்.

விஷாலும் அவற்றையெல்லாம் செவ்வனே டைப் செய்து கொடுத்தான். கொடுத்தவன் கூடவே “ இனிமேல் நீ எழுதுவதெல்லாம் நானே டைப் செய்து கொடுத்து விடுகிறேன்; ஆனால் நீ ஒரு சின்ன வேலை செய்ய வேண்டும் “ என்றான்.

அது என்ன சின்ன வேலை என்றால், நிக்கியிடம் சொல்லி அவனுக்கு ஒரு ‘ லேப்டாப் ‘ வாங்கி கொடுத்து விட்டால் வீட்டிலும், அலுவலகத்திலும் வைத்து நான் எழுதும் எல்லாவற்றையும் எளிதாக டைப் செய்து கொடுத்து விடுவானாம்!

‘ அடடா, இந்த நல்ல ஐடியா நமக்கு ஏன் தோன்றாமல் போயிற்று ? ‘ என நினைத்துக் கொண்டு மேஜையைச் சரி செய்யும் தச்சரைக் கண்டு பிடிக்கும் காரியத்தில் மும்முரமாக இறங்கினேன்.

எனது குடியிருப்பின் வாட்ச்மேன்கள் இரண்டு பேரும் கடந்த ஆறு மாதமாகவே தச்சரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதையும் உங்களுக்கு நான் இங்கே சொல்லியாக வேண்டும். அதில் ஒரு வாட்ச்மேன் கொஞ்சம் ‘ போங்கு ‘. இருந்தாலும் மற்றொரு வாட்ச்மேன் சீரியஸாகவே தேடிக் கொண்டிருந்தார்.

அவரை பிடித்து ‘ இன்றே, இப்போதே தச்சர் தேவை ‘ என்ற எனது அவசர நிலையை விளக்கினேன். மறுதினமே ஒரு தச்சரைப் பிடித்துக் கொண்டு வந்தார் வாட்ச்மேன். தொழிலை வைத்து அழைப்பது எனக்குப் பிடிக்காது; ஜனாதிபதி, பி.மந்திரி, நீதிபதி போன்றவர்களை என்றால் பரவாயில்லை, அப்படி அழைக்கலாம்; ஆனால் வாட்ச்மேன், ஸ்டேனோ போன்ற தொழில் செய்பவர்களை தொழில் பெயரைக் கொண்டு அழைப்பது தவறு என்பதால் அந்த வாட்ச்மேன் பெயரை இங்கே கூறி விடுகிறேன். சந்திரன், அவர் பெயர்.

“ ஏன் இவ்வளவு சிரமப் படுகிறாய் ? புதிய மேஜை ஒன்றை வாங்கி விடலாமே ? “ என்றான் அலெக்ஸ்.

என் மகள் ரேஷ்மா ஐந்து வயதாக இருக்கும் போது “ ஏன் அப்பா இத்தனை கஷ்டப்பட்டு பஸ்ஸில் போக வேண்டும்; பேசாமல் ஒரு கார் வாங்கி விடேன் ? “ என்று கேட்டாள்.

அலெக்ஸுக்கு ரொம்பவும் குழந்தை மனம்; விடுங்கள்.

தச்சர் வந்தார். மேஜையைப் பார்வையிட்டார். பிறகு சம்பிரமமாக அமர்ந்து தனது தளவாடங்க்ளையெல்லாம் எடுத்து நிதானமாக அளந்து பார்த்து “ சாமான் வாங்க வேண்டும் “ என்றார். 100ரூ கொடுத்தேன். ஸ்க்ரூ, ஆணி போன்ற சாதனங்களை வாங்கி கொண்டு மீதி 50 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.

‘ அட, பணத்தில் மீதியெல்லாம் கொடுக்கிறாரே, எவ்வளவு நல்ல தொழிலாளி! ‘ என்று நினைத்துக் கொண்டேன்.

அரை மணி நேரம் செலவிட்டு வேலையெல்லாம் செய்து கட்டையை மேஜையோடு பொருத்தினார். ஆனால் ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. கட்டையைத் தலைகீழாகப் பொருத்தி விட்டார். பிறகு மீண்டும் அரை மணி நேரம் செலவிட்டுப் பொருத்தினார். இந்த முறை சரியாக இருந்தது. இழுத்துப் பார்த்தேன். கீழே விழவில்லை.

50ரூ. கூலி கொடுத்தாள் அவந்திகா. 100ரூ. கேட்டார் தச்சர்.

“முடியாது, 50ரூ. தான் ” என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்து விட்டாள்.

“ நீ படிக்கும் ஆன்மீகமெல்லாம் வீண். ஒரு தொழிலாளியை உனக்கு மதிக்கத் தெரியவில்லை “ என்ற ரீதியில் ஐந்து நிமிடம் அவந்திகாவை திட்டினேன்.

அவள் கண்டு கொள்ளவே இல்லை. பதிலுக்கு என்னிடம் “ ஒரு குவாட்டர் எவ்வளவு ? “ என்றார்.

ஒன்றும் புரியாமல் “ 50ரூ. இருக்கும் ” என்றேன்.

“அப்படியானால் அது போதும்; அந்த ஆள் இருக்கும் இருப்புக்கு ஆஃப் அடித்தால் மல்லாந்து விடுவார். ஏற்கனவே ஆணி வாங்கின வகையில் 40ரூ. அடித்து விட்டார் “ என்றாள் அவந்திகா.

” சே, எத்தனை பாபா வந்தாலும் உன் மாதிரி ஜென்மங்களைத் திருத்த முடியாது ” என்று சொல்லி விட்டு கணிப் பொறியின் எதிரே வந்து அமர்ந்து கட்டுரையினைத் தட்ட இழுப்பை இழுத்த போது படாரென்ற சப்தத்துடன் கீழே விழுந்தது கட்டை. கால் தப்பியது புண்ணியம்.

பிறகுதான் புரிந்தது. தச்சர் எதுவுமே செய்யவில்லை. பழைய ஸ்க்ரூவைப் பிடுங்கி விட்டு அந்த இடத்தில் புது ஸ்க்ரூவை முடுக்கி விட்டு ஜூட் விட்டு விட்டார்.

சந்திரனிடம் விஷயத்தைச் சொல்லி ஆளைப் பிடித்து வரச் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து தலையைத் தொங்க போட்ட படி திரும்பி வந்த சந்திரன் ” அந்த ஆள் சுய நினைவிலேயே இல்லை. டாஸ்மாக்குக்கு வெளியே மல்லாந்து கிடக்கிறான் “ என்றார்.

அடப்பாவி, அதற்குள்ளேயே ?

அதுவும் சரிதான். கல்ப் கல்ப்பாக அடிக்க எவ்வளவு நேரம் பிடிக்க போகிறது ?

இது பற்றி விஷாலிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவனுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகச் சொன்னான். இங்கே விஷால் பற்றி ஒரு அறிமுகம்.

ஏமாறும் விஷயத்தில் நான் ஒரு கத்துக்குட்டி என்றால், விஷால் உலக சேம்பியன்.

வீட்டில் ஏதோ தச்சு வேலை என்று தச்சரை அழைத்துள்ளான். சாமான் வாங்க தச்சர் கேட்டது 2000ரூ. “ இதோ வாங்கி வருகிறேன் “ என்று போனவர் போனவர்தான். ஆறு மாதமாக இன்னமும் வாங்கி வருகிறார். இவ்வளவுக்கும் தச்சர் விஷாலின் பக்கத்து வீட்டுக்காரர்!

“ ஒரு ஏறு ஏற வேண்டியதுதானே ? “ என்றேன்.

“ ம்ச்ச... பாவம்... எப்ப கேட்டாலும் பச்சப் புள்ளைக்கு மருந்து வாங்கிட்டேன் சார்... ங்கிறார்.... ”

ம்... தச்சர் தான் அந்தப் பச்சைப் பிள்ளை.

விஷாலுக்கும் என்னைப் போலவே இதெல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் ஹேங்க் ஓவர் என்று தான் சொல்ல வேண்டும்.



* * *

எனக்கு திடீரென்று ராஜ நாயஹத்தின் நினைவு வந்தது. எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர்! பாண்டிச்சேரியில் அவர் அப்படி சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த போது அவரால் பயன் பெற்ற தச்சர்கள் – ஸாரி, இலக்கியவாதிகள்தான் எத்தனை பேர்! ஆனால் இன்று ?

வீழ்ந்தாலும் லியர் மன்னன் மன்னன் தானே ஐயா ?


courtesy : http://www.charuonline.com/

0 comments:

Post a Comment