வெள்ளிப் பாத சரம்

on Monday, March 30, 2009

திரும்பவும் ஆரம்பமாகிவிட்டது அதே பழைய பிரச்சினை. உயிர்மை போன்ற பத்திரிக்கைகளில் எழுதும் போது எனக்கு ஒரு தனிமை வாய்க்கப் பெற்றது. அம்மாதிரி பத்திரிக்கைகளில் எழுதும் போது வாசகர்களுக்கும் எனக்கும் ஒரு நீண்ட இடைவெளி இருந்தது. என்னைப் போன்ற reclusive – ஆன எழுத்தாளனுக்கு அது மிகுந்த பல நன்மைகளைச் செய்துள்ளது. ஆனால் இப்போது இணைய தளத்தில் எழுத ஆரம்பித்து விட்டதால் ஆளாளுக்கு அறிவுரை செய்யக் கிளம்பி விடுகிறார்கள்.

பல அன்பர்களின் அறிவுரை, ஜெயன் மாதிரி ஆட்களுக்கெல்லாம் இவ்வளவு நீண்ட பதில் எழுதி என் சக்தியை வீணடித்துக் கொள்ள வேண்டுமா என்பது.

என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு பொதுவாக நான் பதில் கூறுவதில்லை. ஜெயனின் அராஜகத்தை கடந்த 5 வருடங்களாக நான் மன்னித்து வந்தேன். நேசக்கரமும் நீட்டினேன். ஆனால் அந்த ஆள் கத்தியை மறைவாக வைத்திருந்தார். பாவம், என்னிடம் உள்ள கவசம் பற்றி அவர் அறியவில்லை. அவருடைய கத்தி அவரையே குத்தி விட்டது.

ஜெயன் போன்ற ஆட்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் நான் ஒரு நோயாளியாகத்தான் ஆகியிருப்பேன். இல்லாவிட்டால் அவரது பெற்றோரைப் போலவும், அவரது நண்பனைப் போலவும் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். மற்றவர்களைத் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு விஷம் தோய்ந்த வார்த்தைகளை எழுதித் தள்ளுபவர் ஜெயன்.

நான் எப்போதும் காலை நான்கு மணிக்கே எழுந்து கொள்ளும் வழக்கம் உடையவன். இப்போதெல்லாம் கெட்ட கனா வந்து நடுநிசி ஒரு மணிக்கே உறக்கம் கலைந்து விடுகிறது. கெட்ட கனா என்றது ஜெயனை. எனவே, நான் ஜெயனுக்கு பதிலும் எழுதாமல் போனால் சட்டையைக் கிழித்துக் கொண்டு தான் அலைய வேண்டியிருக்கும்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டும் இயேசுவைப் போல் வாழ்வதற்குத் தான் ஆசையாக இருக்கிறது; ஆனால் முடியவில்லையே?

பார்த்தீர்களா, உங்களுடைய ஆலோசனை மற்றும் அறிவுரையின் காரணமாக மேலும் சில பக்கங்களை ஜெயனுக்காக ஒதுக்க வேண்டியதாகி விட்டது.

மேலும், ஜெயனுக்கு நான் எழுதிய பதிலை ஏன் ஒரு பதிலாகப் பார்க்கிறீர்கள்? அதில் ஷேக்ஸ்பியரைப் பற்றி எழுதியுள்ள குறிப்பை போல் பல விஷயங்கள் உள்ளனவே, அதை ஏன் காணத் தவறுகிறீர்கள் ?

அடுத்த விஷய்ம், பண உதவி. பல அன்பர்கள் எழுதியுள்ளனர். பண உதவி தவிர வேறு எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய ஒரே அன்பான வேண்டுகோள் : முடிந்தால் உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் எனக்கு விளக்கமெல்லாம் எழுதி என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்.

மற்றவர்களிடம் பண உதவி கேட்பதைப் போல் ஈனத்தனமான காரியம் வேறு எதுவுமில்லை. அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். தயவு செய்து என்னை மேலும் மேலும் பிச்சைக்காரனைப் போல் உணரச் செய்யாதீர்கள்.

நான் பிச்சைக்காரனாக வளர்வதற்கு தமிழ்ச் சூழல் மட்டுமே காரணம். என்னுடைய நாவல் 250 பிரதிகள் மட்டுமே விற்பனையாகியிருக்கிறது. ஒரு துருக்கி எழுத்தாளனின் நாவல் 1 லட்சம் பிரதிகள் விற்கின்றன. புரிகிறதா பிரச்சினை ?

15 ஆண்டுகளுக்கு முன்பு சில காலம் ஜேப்படித் திருடனாக வாழ்ந்திருக்கிறேன். ஒரு முறை பிளேட் போட்டபோது 3 பவுன் தங்கச் சங்கிலி கிட்டியது. அதை விற்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஊரிலுள்ள சேட்டுகள் அனைவருமே என் முகத்தைப் பார்த்ததும் கண்டு பிடித்து விடுவார்கள். வாங்கிக் கொள்ள மறுக்க மாட்டார்கள். ஆனால் 3 பவுன் சங்கிலியை 1 பவுன் விலைக்குக் கேட்பார்கள்.

இப்போது மீண்டும் நான் அந்தப் பழைய வாழ்க்கைக்குள் செல்ல முடியுமா, சொல்லுங்கள் ?

பனகல் பார்க்கில் எத்தனையோ நாட்கள் பல நாள் பட்டினியுடன் படுத்துக் கிடந்திருக்கிறேன். அடுத்த வேளை சோறு எப்போது கிடைக்குமோ என்ற நிச்சயமில்லாமல் பட்டினி கிடப்பதைப் போன்ற ஒரு கொடுமை வேறு எதுவும் இல்லை. ஒரு நாள் ஒரு நாய், காய்ந்து வறட்டி போல் ஆகி விட்ட மனித மலத்தைத் தின்று கொண்டிருந்தது. அந்த நாய்க்கும் எனக்கும் அப்போது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இப்போதும் என்னுடைய நிலை அதுதான். ஒரே வித்தியாசம். என்னை இப்போது பலருக்கும் அடையாளம் தெரிகிறது. எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது.

எனவே, திரும்பவும் சொல்கிறேன். எனக்கு உங்களுடைய ஆலோசனை அறிவுரை எதுவும் தேவையில்லை.

பண உதவி செய்ய முடியாதது பற்றிக் குறிப்பிட்டு தயவு செய்து மின்னஞ்சல் செய்யாதீர்கள். முடிந்தால் உதவி செய்யுங்கள்.

ஒரு அன்பர் குறிப்பிட்டார், ‘ நானும் உங்களைப் போல் தான் சாரு ‘ என்று. அதாவது, அவருடைய நிதி நிலைமையும் என்னைப் போல்தான் உள்ளதாம்.

எனக்கு மனசில் ஒரு விஷயம் தோன்றியது. ‘ நான் மாமா வேலை செய்திருக்கிறேன்; நீர் செய்திருக்கிறீரா ? ‘. கேட்கவில்லை. காரணம், அவர் என் நண்பர்.

* * *

இவ்வளவு பிரச்சினைக்கிடையிலும் வாழ்க்கை படு சுவாரசியமாகவும், ரசிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

நான் குடித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு விஷயம். நண்பர் சுதேசமித்திரன் சென்னை வந்திருந்தார். நான் நண்பர்களைச் சந்திக்கும் இடம் பார்க் ஷெரட்டன். நிக்கியின் புண்ணியத்தால் காசு கொடுக்க வேண்டியதில்லை. பில்லை அவர்கள் நிக்கிக்கு அனுப்பி விடுவார்கள்.

பார்க் ஷெரட்டன் எனக்குத் தாய் வீடு மாதிரி. கைத்தொலைபேசியை மறந்து விட்டு வந்து விட்டால் மறு நாள் கொண்டு வந்தே கொடுப்பார்கள்.

ஆனால் மித்திரனோ ஷெரட்டன் வேண்டாம்; டாஸ்மாக்கே போதும் என்றார். சிறுபத்திரிக்கைக்காரர். அப்படித்தான் இருப்பார் என்று போனேன்.

மறு நாள் பார்த்தால் கண்ணாடியைக் காணோம். கண்ணாடி விலை 20,000ரூ. Boss என்ற ப்ராண்ட். பதறிப் போய் டாஸ்மாக்குக்குப் போனேன். பொடியன்கள் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் எடுத்து வைத்திருப்பார்கள். டாஸ்மாக்கிலிருந்து வீட்டுக்கு வர ஆட்டோ கிடைக்காததால் நடந்தே வந்திருக்கிறேன். சிறிது தூரம் தான். வழியில் விழுந்திருக்கிறது என்று புரிந்தது.

ஒரு பொடியன் ‘ இருங்கண்ணே ‘ என்று கூறி உள்ளே போய் வேறொரு கண்ணாடியை எடுத்து வந்து கொடுத்து போட்டுப் பார்க்கச் சொன்னான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு யாரோ விட்டுப் போனதை எடுத்து வைத்திருக்கிறான் பொடியன். கண்ணாடியைத் தொலைத்தவர் வந்து கேட்கவில்லை.

அடுத்த கண்ணாடி வாங்கும் வரை போட்டுக் கொள்ளலாம் என்று முயற்சி செய்தேன். பொருந்தவில்லை.

கிளம்பும்போது பொடியனிடம் 10ரு.கொடுத்தேன். மறுத்து விட்டான்.

“ என்னாண்ணே, நீங்களே கண்ணாடியைத் தொலைச்சுட்டு நிக்றீங்க. உங்க கிட்ட போய் பணம் வாங்குறதா ? “ என்றான்.

தினம் காலை 10 மணியிலிருந்து இரவு ஒரு மணி வரை அசராமல் வேலை செய்யும் பத்து வயதுச் சிறுவனின் வார்த்தைகள் அவை. இந்த வார்த்தைகளைக் கேட்பதற்காகவே இன்னும் எத்தனை கண்ணாடிகளை வேண்டுமானாலும் தொலைக்கலாம் போல் இருந்தது.

மற்றொரு சம்பவம் சமீபத்தில் சேட்டு கடையில் தாலியை விற்ற போது நடந்தது. என் நண்பர் ஒருவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. பெயர் வைக்கும் வைபவத்துக்குச் சென்றிருந்தேன்.

வெறும் கையுடன் கிளம்பிய போது அவந்திகாவிடம் சொன்னேன். “ கையில் காசு இருந்திருந்தால் பாப்பாவுக்கு ஒரு கொலுசு வாங்கலாம் “

சேட்டு கடையில் தாலியை விற்றுப் பணத்தை வாங்கி எண்ணிக் கொண்டிருந்த போது அவந்திகா மலர்ந்த முகத்துடன் என்னிடம் சொன்னாள்: “ சாரு, பாப்பாவுக்கு ஒரு கொலுசு வாங்கி விடலாமே ? “

Date 25.03.2008

Courtesy : - http://www.charuonline.com



0 comments:

Post a Comment