சமூகத்தில் ஒரு பாதி,
முப்பத்து மூன்று சதவிகித
இடங்களுக்காக,
போராடப் போகிறார்களாம்!
அவர்கள்
கேட்க வேண்டியது,
ஐம்பது சதவிகிதமல்லவா?
அரசியல் பெண்களின்
முகவரிகளை எல்லாம்
தொகுத்தபோதுதான்
தெரிய வந்தது,
அவர்கள்
தங்களுக்கென்று
தனி முகவரி மட்டுமல்ல,
முகமே இல்லாதவர்கள் என்பது!
அவர்கள்
பின் கதவு வழியாக
பினாமியாக வந்து
அரசியல் அரிதாரம்
அவசரமாய் பூசியவர்கள்;
பழம் தின்று கொட்டைபோட்ட
அரசியல் அண்ணாச்சிகளின்
மகள், மனைவி, மருமகள்,
அல்லது நண்பிகள்;
பெண் பினாமிகளை,
ஆண் பினாமிகளைவிட
ஆபத்தானவர்களாக,
குறித்து வைத்துள்ளது வரலாறு.
பினாமிகளுக்கா
முப்பத்து மூன்று?
சுயமாய் பெண்கள்
வரட்டும் அரசியலுக்கு;
சுத்தப்படுத்தலாம்
இருபாலரும் சேர்ந்தே,
சாக்கடையை!
Labels: நான் ரசித்த கவிதைகள்
வேலைக்குச் செல்லும் பெண்ணே....!
மேலே உரசும் எருமை மாடுகள்,
முதுகின் மேல் மூச்சு விடும்
விஷ சர்ப்பங்கள்,
பார்வையால் கொத்தும்
பிணம் தின்னிக் கழுகுகள்,
எட்டிப் பார்க்கும் ஓட்ட்கங்கள்,
வழியில் நிற்கும் கொழுத்த கழுதைகள்,
அதிகார வர்க்க கடுவன் பூனைகள்,
தெரியாமல் பட்டதாய்
தொட்டுப் பார்க்கும் குள்ளநரிகள்,
சந்தர்ப்பம் எனும் உறுமீனுக்காய்
ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குகள் -
எப்படி சமாளிக்கிறாய்,
தனியாக ஒரு மிருகக் காட்சி சாலையை?
பெண் நிதானமாகப் பதில் சொன்னாள்:
"எனக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது,
சிங்கம், அது பெண் சிங்கம்!"
Labels: நான் ரசித்த கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)






